புதன், நவம்பர் 15

மரணமா மதங்களுக்கு





நிலையானது ஏதுமில்லை
ஆன்மா இல்லவே இல்லை
துன்பம் உண்டு

தோன்றியது மாறும்/மறையும்
எனக்கு மீறிய சக்தி
எதுவெனக் கேள்

ஆம். உண்மையை
உரக்கச் சொன்னால்
மார்க்கம் மரணித்துப் போகும்

ஆசையே துன்பங்களின்
அடிப்படைக் காரணம்
அய்யோ வேண்டாம் பௌத்தம்

அனைவரும் சமம்
ஆன்மாவே கடவுள், பற்றற்றிரு,
என்றதனால் துரத்தினர் சமணத்தை

கற்பித்தவன் மக்கலி கோசாலர்
கல்வெட்டு ஆதாரமில்லை என்பதால்
கடைபிடிக்கவில்லை ஆசிவகத்தை

கடமையைச் செய்
பலனை எதிர் பாராதே என்றாலும்
கடவுள் அருளியதால் கடைபிடிக்கறோம்

என்னை நம்பு
நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை
என்னையன்றி ஓரணுவும் அசையாது

நால் வருணத்தை படைக்க
நான்முகன்
மூவுலகை காத்திட விஷ்ணு

படைக்கும் மந்திரத்தை படைத்தவன்
அழிக்கும் தொழிலின் நாயகன்
ஆனந்த தாண்டவமிடுபவன்

அண்டச் சராச்சரங்களை
ஆதியும் அந்தமமும் இல்லாதவன்
காத்திடும் பலகதைகள்

இந்துவாக ஒருங்கிணைந்தனர்
அதர்மம் தலைத்தூக்க
அவன் வருவானென காத்திருக்கிறார்கள்

பாவத்தின் சம்பளம் மரணம்
பாவிகளை மிரட்டினாலும்
பாவ மன்னிப்பு உண்டு

பரிசுத்த ஆவியால்
பிறப்பைக் கண்டவர்
மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்

பத்துக் கட்டளைகளை மறந்தாலும்
பாவிகள் இரட்சிக்கப்படுவார்கள்
பக்தியோடு திருச்சபைக்கு வந்தால்

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்

வணக்கத்திற்குரியவன்
அல்லாவை தவிர
வேறு யாருமில்லை

அல்லா அனைத்தையும்
கவனித்துக் கொண்டிருக்கிறான்
தீர்ப்பு வழங்க வருவான்

தொழுகையும், நோன்பும்
மற்ற நற்காரியங்கள்
அல்லாஹ்வுக்கு விருப்பமானவை

துன்பத்தில் உழலும் போது
தேடி அழைப்பாயெனில்
வழி காட்டுவர்

தீய கருமங்கள்
தேவையைப் பொருத்தே
நிகழ்கிறது

எனவே தண்டனைகள்
இவ்வுலகில் கிடைத்தாலும்
மேலுலகில் மன்னிக்கப்படுகிறது
அனைத்தும் நானே
நம்பிக்கையோடு வா
நற்கதி அளிக்கிறேன்

நால்வகை மதங்கள்
நம்பிக்கையை விதைப்பதால்
நீண்டு வளர்கிறது மதம்

என்னையே கடவுளாய் ஏற்பாய்
இருக்கும் கிளைகளெல்லாம்
போலி என்றே உணருங்கள்

ஏமாறும் கூட்டம்
எண்ணிகையில்
பெருகிக் கொண்டிருக்கிறது

காசு உள்ளவன்
கடை திறக்கிறான்
கல்லா நிரப்ப மட்டுமல்ல

அதிகார வர்கமாய்
அய்யோ பாவங்களை
ஆட்டிப் படைக்க

ஆசையைத் துறப்பதும்
அவன் எனக்கு சமமா என்பதும்
அடிப்படையில் வேறு வேறு

ஆக
ஆசிவகம், பௌத்தம்
சமணம் சாமதியானது.





பாலஸ்தீனம் இஸ்ரேலாகிய கதை


















ஆபிரகாமின் புதல்வர்கள்
இஸ்ரவேலரின் குழந்தைகள்
கடவுளை ஒளியாய் கண்டவர்கள்
யூதர்களாம்

யூதனாய் பிறந்தவன்
இறைதூதன் என்றே வந்தான்
இறைவனாக்கப் பட்டான்
கிருத்துவனாக்கப்பட்டான்

அந்த மண்ணிலிருந்தே
அவதரித்த முகமது நபி
தானும் இறைதூதனென்றான்
அல்லாவே கடவுளென்றான்

யெருசலேம் என்பது
அமைதியின் உறைவிடமாம்
மும்மதத்திற்கும்
புனித இடமாம்

கிமு-வில்
கிரேக்கத்தின் அடிமையாய்
கிபி-யில்
இட்லரின் இரையாய் யூதர்கள்

1948 வரை
இஸ்ரேல் எனும் நாடு
உலக வரைபடத்தில்
ஒரு புள்ளியாகவும் இல்லை

நாடு கட்ட யூதர்கள்
பணம் கொடுத்து
பாலஸ்தீனர்களின் பாலையை
பட்டா நிலமாக்கினர்

பத்தாது என முடிவெடுத்து
படைத் திரட்டி ஆக்கிரமித்தனர்
அமெரிக்காவும் இங்கிலாந்தும்
ஆமோதித்தது

இஸ்ரவேலரின் பிள்ளைகள்
பத்துக் கட்டளைகளை
பரிதவிக்க விட்டு
இஸ்ரேலை உருவாக்கினர்

மேற்கு முனையும்
காசா துண்டும்
பாலஸ்தீனர்களின்
பற்றாக்குறை தேசமானது

ஐக்கிய நாடுகள்
ஆட்டத்தை வேடிக்க பார்க்குது
அரபு நாடுகள்
அரற்றிக் கொள்ளுது

பாலஸ்தீனியர்கள்
அவர்கள் மண்ணில்
அந்நியப் பட்டு நிற்கிறார்கள்
அனுதாபங்கள் வேண்டாம்

அகிலத்தின்
அறிவுஜீவி என்று
அரற்றிக் கொள்ளும் யூதன்
மனிதனைக் கொல்கிறான்

பணம் கொடுத்து வாங்கியவன்
பகட்டாய் வாழ்வதும்
பணத்தால் ஏமாந்தவன்
பரதேசியாய் வாழ்வதும்

மதங்கள் போதித்தவையா
மானுடம் மறந்தவையா
மண்ணின் மைந்தர்கள்
மனிதனாய் இருப்பதில்லையா?

பரிசுத்த வேதகாமம்
பாவிகளை உருவாக்குகிறது
தோராவும் குரானும்
குறுக்கே வாராது நிற்கிறது

பாவ மன்னிப்பு
பரலோகத்தில்
பார்த்துக் கொள்ளலாமென
யூதர்கள் யோசித்தார்களா

குழந்தைகளையும்
மருத்துவ மனையையும்
குறிப்பிட்டுத் தாக்கும்
இலக்கானதேன்?

நாடிழந்து
நட்டநடு காட்டில்
கூடாரத்தில் வாழும்
கற்காலச் சூழலேன்

அகதியாய் வெளியேறவும்
ஆங்கே வழியில்லை
எல்லைகளை மூடி
அப்பாவிகளை முடுக்குவதேன்

மானுடமென்பது
மனிதனை மனிதன் நேசிப்பது
மதங்கள் என்றும்
மனிதனை உலகில் பிரிப்பது

மூன்றடி மண் கேட்ட
புராணக் கதை தெரியுமா
இன்று இஸ்ரேல்
ஏவுகணைகளால் கேட்கிறது

ஞாயிறு, நவம்பர் 5

வாழத்தானே இணைந்தனர்

 



கண்கள் கனிய
காதல் அரும்பியது
கைப் பிடிக்க
கழுத்து அறுப்பட்டது

விரும்பிய உள்ளங்கள்
வீம்பான பெற்றோர்கள்
விலையானது உயிர்கள்
விளையுமோ அன்பு

விளைந்த அன்பை
வேரறுக்க நினைத்தது
வேண்டாத சாதியில்லை
வீரதீரமிக்க ஆணாதிக்கமே

வாழத்தானே பெற்றாய்
வாழத்தானே இணைந்தனர்
வழியில் வந்ததெது
வரட்டு கௌரவமா?

சிந்தனைகள் மாறிட
சிந்திய ரத்தங்கள்
சீராக்குமா சமூகத்தை
சீழ்பிடித்து மாளுமா?

சாதியும் கடவுளும்
சரிசமமா யில்லை
சக்ரவர்த்தியும் சமானியனும்
சம்பந்தி யாகுவதில்லை

சந்ததி தழைக்க
சரித்திரம் படைக்க
சமத்துவம் கொடாது
சாக்காட்டைத் தந்தானே

உலக இயக்கத்தின்
உன்னதம் காதலே
உலகறிவற்றவனே
உயிரைக் கொய்தானே

உயிர்கள் ஒன்றென
உணர்ந்திட முடியாதோ
உறவைக் கொண்டாட
உன்மதம் தடுக்குதோ

ஐந்தறிவும்
அன்போடு வாழுதே– உன்
அகங்காரம்
அக்காதலைக் கொல்லுதே

ஊரும் உறவும்
உருகி அழுகிறது
உருவ மழிக்க
ஊழென இருப்போமா

முயன்ற உள்ளங்களை
முகிழ விடாது
முக்கரம் கொன்றாலும்
மூளுமே காதல்தீ

செவ்வாய், அக்டோபர் 24

நெஞ்சமும், அவளும்

 




அறிவாய் தானே

அடைப்பட்டு கிடப்பதை
சிறிதும் கவலை
சிறைமீட்க இல்லையோ
முறிந்தது அன்பென
முகமெதிர் சொல்லி
குறிப்பை உணர்த்த
கூர்மதி நினைக்க

அன்பே என்று
அருகில் வந்தான்
இன்முகம் கண்டு
எனையே மறந்தேன்
புன்னை நிழலில்
பொழுதும் போனது
முன்னை நினைத்தது
முற்றும் மறந்தது

காலங் கடத்தும்
கள்வனைக் கண்டிக்க
ஏலாதோ நெஞ்சே
ஏசாமல் விட்டாய்
கோல முகத்தினை
கோணலாக்க மறந்தாய்
ஆலகாலச் சொல்மறந்து
அமுதமொழி மொழிந்தாய்

அத்தான் அருகிருக்க
அண்டம் சுழலுதே
பித்தான நெஞ்சமும்
பின்னாலே போகுதே
முத்தான சொல்லில்
மூச்சை நிறுத்தினானே
நித்தியம் இதுவென
நினைக்கயில் பிரிந்தானே


செவ்வாய், அக்டோபர் 17

காமம்





கடக்க முடியாததா
கரையற்ற பால்வெளியா
அடக்க முடியாததா
ஆசையின் அளவற்றதா
தொடங்கிடத் தொடருமோ
தொடராதெனில் மாளுமோ
முடக்குமோ முனிவனையும்
முதுமொழி கற்றோரையும்

விருந்தாய் கொண்டால்
விளையும் அன்பு
விருந்தே கதியெனில்
விளையும் துன்பம்
விருந்தெனும் நினைப்பே
விரக்தியில் தள்ளுது
மருந்தென நினைத்தாலும்
மனதைக் குழப்புது

இக்கணமே வேண்டும்
இல்லையேல் என்போரே
சிக்கலில் சிக்குவர்
சிற்றின்ப பாதையில்
சொக்கும் காமம்
சுகமான விருந்தென்று
பக்குவ மடைந்தோர்
பட்டறிவில் தெளிவர்

நினைக்கும் மனதை
நிறுத்திப் பாரு
அனைத்தும் விளங்க
அறிவைக் கேளு
புனைந்த இன்பதுன்பம்
புத்தி உரைப்பதே
எனவே காமம்
இழிவல்ல இனிதுமல்ல

விருந்தின் விளைவோ
விரைவில் முடிவுறும்
அருந்திய சுகங்கள்
அன்றோடு மறையும்
கருத்தாய் உரைப்பேன்
காமம் கட்டுப்பட்டதே
இருப்பினும் மறுப்பேன்
இடறிய சிலருக்கே

புதன், அக்டோபர் 11

பேசிப் பேசிப் பிரிவினையா?




பேசிப் பேசிப்
பேழையில் அமுதம் பருக
யாசிக்கு மிவனை
யாத்திரையில் தொலைத்த தேனோ
ஏசி உன்னை
என்குற்ற மில்லை என்றேனா
ராசி யாகி
ரட்சித்துக் கொள்ளடி என்றேனே


வந்து வந்து
வதைக்கும் எண்ண அலைகள்
பந்தம் தந்து
பலரும் வாழ்த்திய கதைகள்
சந்த நயம்
சரிசெய்ய காலம் அளித்தால்
இந்த உலகம்
இனியது என்று கதைப்பேனோ


உனது முடிவுகள்
உந்தன் தேவையின் பொருட்டு
எனது அன்பும்
எந்தன் தேவியின் பொருட்டு
மனதின் காயமோ
மாறுபடும் உறவின் பொருட்டு
வினாவின் நியாயமோ
விலகியே நிற்கும் இருட்டு


தேவியின் தேவைகள்
தேடிட கிடைத்திட வேண்டும்
புவியில் உள்ளவரை
பூரணநலத் தோடிருக்க வேண்டும்
குவியும் புகழ்தனில்
குதுகலித் திருக்க வேண்டும்
துளியும் என்நினைவு 
துளிர்விடா திருக்க வேண்டும்

செவ்வாய், அக்டோபர் 3

காதற்கணை

 



குறள் 1100

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

 



கனியக் கனியப் பேச
காதல் வளரா
தனித்தச் சொல்மொழிந் தாலும்
தவத்தில் கிட்டா
இனிய கண்க ளிரண்டு
இசைக்கும் மொழியில்
புனிதக் காதல் மலருமே
புவன மெங்குமே


வனைந்த சொற்கள் பலவால்
வாராக் காதல்
சுனைபோல் சுரக்கும் கண்ணில்
சுழலும் பாரீர்
வினையாய் மாறிச் சொற்கள்
விளைவைச் சுருக்குமே
நினைத்த வுடனெழும் காதலில்
நீள்விழி இணையுமே

 

ன்பன்
அ. வேல்முருகன்

 

திங்கள், அக்டோபர் 2

ஐம்புலனின்பம்



அத்தனை இன்பமும்
அவனுட னிருக்க
நித்தமும் கிடைக்க
நிச்சய மேதுமில்லை
வித்தைக ளனைத்தும்
விளைந்திடும் பருவத்தில்
அத்துபடி யாகிட
அனைத்திலும் இன்பமே

ஐம்புல னின்பம்
அவனருகி லிருக்க
இம்மை யில்லல்ல
இளமையில் காணுவதே
கம்பன் வருணித்ததை
கண்களால் காண்பதும்
எம்மான் பேசிட
என்றென்றும் கேட்பதும்

வகைவகையா சமைத்து
வாலிபத்தில் உண்பதும்
திகைக்கும் வண்ணம்
திணரும் நறுமணத்தை
வகைக்கொன்றா வாழ்வில்
வரிசையாய் நுகர்வதும்
உவகை கொள்ளின்பம்
உடலுக்கு வேண்டுவதும்

இளமைப் பருவத்தின்
இயல்பான தேவைகள்
களவு மணத்தில்
களிப்புற்று வாழ்ந்ததை
தளர்ந்த பருவத்தில்
தள்ளி வைத்திடலாம்
வளர்ந்த உள்ளங்களே
வாழ்வை ரசியுங்கள்



செவ்வாய், ஆகஸ்ட் 15

கண்களின் ஆற்றல்




 
குறள் 1091

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து


அஞ்சனம் தீட்டிய
அவளின் கண்கள்
கொஞ்சி அழைத்து
குற்று யிராக்கியது
தஞ்ச மென்றேன்
தன்நிலவாய் குளிர்ந்த
வஞ்சியின் கண்கள்
வைத்தியம் பார்த்தது

பாவல னாகி
பல்லக்கில் போவதும்
கோவல னாகி
கொலைகளம் செல்வதும்
ஆவலர் அவரவர்
அன்பின் ஆற்றலே
ஆவதும் அழிப்பதும்
அழகிய கண்களே 


ஞாயிறு, மார்ச் 5

அகலிகை




அகலிகை, சீதை, திரௌபதி,
தாரை, மண்டோதரி - பஞ்ச
கன்னியரென மகாபாரதம் உரைக்க

அவர்களில் அகலிகை
கௌதம ரிஷியின்
மனைக் கிழத்தி

வால்மீகி, கம்பன், துளசி
எழுத்தச்சன், தொரவே
இராமாயணங்களின் அகலிகை

பம்ம, பௌத்த
ஜைன இராமாயணங்களில்
காணாதுப் போகிறாள்

இந்திரனின் இச்சையால்
இராமனின் கால்பட்டு
சாப விமோசனதிற்குக் காத்திருந்தவள்

பாற்கடலைக் கடையத்
தோன்றியக் காமதேனுவை
மகரிஷிகள் ஏற்றனர்

அடுத்து தோன்றியது
வெண்ணிறக் குதிரை
மாவலி மன்னன் கொண்டான்

வெள்ளை யானையையும்
பாரிஜாத மரத்தையும்
தேவேந்திரன் பெற்றான்

அதன் பிறகு
அப்ஸரஸ் புடைச்சூழ
மாகாலட்சுமி தோன்றினாள்

அவளையும் இரத்தின மாலையையும்
ஸ்ரீமன் நாராயணன்
ஏற்றுக் கொண்டார்

மயக்கும் மதுவின் தலைவியை
அரியின் ஆசிர்வாதத்தோடு
அசுரர்கள் கொண்டனர்

அதற்குப் பிறகும்
அவர்கள் கடைய
ஆங்கு தோன்றியது

பேரழகின் உச்சமாய்
வானில் ஒளிரும் நட்சத்திரமாய்
அகலிகைத் தோன்றினாள்

அழகெனில்
அடிதடியும் உண்டல்லா
அங்ஙனமே ஆனது

இந்திரன் இச்சைக் கெண்டான்
கௌதமன் கச்சைக் கட்டினான்
போட்டியில் முடிவென்றான் பிரம்மன்

தேவர்களுக் கிடையேயான
தேடல் போட்டியன்றோ
தேடினர் தேடினர்

இருபக்க தலைக் கொண்ட
கோமளத்தைக் காண்பவருக்கு
பாற்கடல் பெற்றெடுத்த பத்தினி

ரிஷியோ தியானத்தில்
இந்திரனோ உலகப் பயணம்
நாரதர் நன்மை பயத்தார்

கோ சாலைக்கு கூட்டிச் சென்றார்
ஆங்கொரு கன்றீனும் பசுவிற்கு
கன்றின் தலை முதலில் வர

நாரதர் ரிஷியை
அப்பசுவை மும்முறை வலம்வர
பணிக்கிறார்

அங்ஙனம் வலம்வருவது
உலகைச் சுற்றுவதற்கு சமமென
சாட்சி தானென்கிறான் நாரதன்

கைப்பிடித்தான் கௌதமன்
காமத்தீ அடங்காத இந்திரன்
காத்திருந்தான்

அத்தாட்சியாய் சதானந்தன்
அவர்களின் மகவாய்
பிறக்கிறான்

மோகத்தில் வீழ்ந்தவனுக்கு
தாகம் தீறுமட்டும்
அச்சமும் நாணமேது

அவரவர் கற்பனைத் திரனுக்றேப்ப
அகலிகை அலைகழிக்கப் பட்டாள்
மகாபாரத்திலும் மானபங்கப் பட்டாள்

இரங்கநாத, பாஸ்கர, வங்காளி
இராமாயணங்களில் இந்திரன் எனவறிந்தே
இசைந்தாள் எனக் கதைச் செல்கிறது

தேவேந்திரன் துப்பறிவாளனாகி
கௌதமனின் செயல்களை
நோட்டமிடுகிறான்

நாளொன்றைத் தேர்ந்தேடுத்து
கௌசிகனாய் உருமாறி
கருக்கலை விரைவாக்கினான்

மாசு மருவற்றப் பேரழகை
ஆசையாய் ஆராதிக்க
ஒருசாமம் போதுமென

சேவலாய் குரலெழுப்ப
கௌதமன் வெளியேற
ஆவலாய் காத்திருந்தான்

இந்திரன் கௌதமனாய்
அகலிகையை அணைத்தான்
கற்புக்கரசி ஏமாந்தாள்

மாயக் கருக்கலென
ஆயத் தெரியாதக் கௌசிகன்
ஆசிரமம் திரும்பினான்

கண்ட கோலத்தினால்
மூண்ட கோபத்தில்
கல்லாக சபித்தான்

உன்னுருவத்தில் வந்ததனால்
உடனிருக்க அனுமதித்தேன்
என்றாள் அகலிகை

பொல்லாப் பழி விலக
இராமனின் கால்பட
விமோசனமென விலக்களித்தான்

இந்திரா உன்னாசை அல்குலென்பதால்
உடலெங்கும் ஆயிரம் பெறுவாயென
சாபமிட்டான் கௌதமன்

விமோசனம் வேண்டினர் இந்திரனுக்கு
ஆயிரம் கண்ணாக
மாற்றம் பெற்றது சாபம்

வால்மீகி கம்பனென
வரிசையாய் அகலிகையை
வதை செய்த தொன்மத்தில்

வண்ணக் கற்பனைகள்
எண்ணற்றக் கதைகளோடு
கற்புக்கு காரணம் கற்பிக்கிறது

தொன்மம் என்பதால்
தோப்புக் கரணம் போடாதே
எள்ளளவும் ஏற்காதே

காமத்தில் கல்லாயிறு
காலகாலமாய் பெண்ணிற்கு
போதிப்பது ஆண்தானே

மானுடத்தின் கற்பு
மதம் கொண்டவர்களுகில்லை
மானினத்திற்கு மட்டுமே

சுயவரம்
பெண்ணின் விடுதலையா
ஆணின் அடக்குமுறையா

வீரதீர மென்பது
வில்லை உடைப்பதா
எல்லை யறிந்து நடப்பதா

கல்லாமை என்பது
கல் பெண்ணாக - இராமனின்
கால்பட வேண்டுமென்பதா

சீதையின் கற்பைச் சோதிக்க
தீப்புக வைத்தவனா
தீர்பெழுதச் சிறந்தவன்

மானுடத் தோற்றமென்பது
மையலில் தோன்றுவதா
பாற்கடலில் எழுவதா?

தவ வலிமையால்
புவனம் அறியவில்லை எனில்
அவணி ஏது

மலர் நாடும் வண்டாய்
சிலர் மட்டு மிருப்பது
மகரந்தச் சேர்க்கைக்கா

தேனருந்தும் வண்டு
தெவிட்டிட
தேடும் மலர்கள் இரைதானே

இருதலைக் கோமளம்
இகத்தில் இல்லாத போது
இருப்பதாய் பாவித்து

அஞ்ஞான உலகமிதை
அற்புதமென வடித்தே
அகிலத்தை ஏமாற்றுவது

மெய்ஞானமென்று
ஐந்தறிவாய் ஏற்காதே
ஐயுறவு கொள்


திங்கள், பிப்ரவரி 27

அருகிரு அன்பே










கடுப்பில் ஏனடி
கண்ணனை வாட்டுற
வடுக்களாய் வார்த்தையை
வண்டியாய் கொட்டுற
தடுத்தே அன்பின்
தரத்தைச சோதிக்கற
அடுகள மல்லவே
அன்புனை எதிர்த்திட

ஒருநாள் இருநாள்
உனையான் மறந்தேனா
விரும்பும் மனதிற்கு
விடுமுறை அளித்தேனா
அரும்பும் நினைவால்
அத்தானை வெறுத்தாயா
பொருமிக் களைத்திடாதே
பொல்லாங்கும் சொல்லாதே

பொருள்தேடிச் சென்றேன்
பொஞ்சாதி உனக்காக
இருள்விலக்க வந்தேன்
இரும்பாய் மாறாதே
அருள்வேண்டி நின்றேன்
அர்ச்சனைகள் செய்யாதே
மருள்கொண்டும் விலகாதே
மச்சான் மடலேறுவேன்

உருவத்தை பார்த்திட
உன்தாபம் அடங்குமோ
குரலதைக் கேட்டிட
குதுகலம் பிறக்குமா
பருவத்தில் பசலை
பாவையை வாட்டுமோ
சரணடைந் தேன்தேவி
சரசம் பயிலவே

பருகிடும் விழிதனை
பார்த்து நாளாச்சு
நெருங்கிட விலகிடும்
நெடுநாள் கசப்பு
உருகிடும் பேச்சில்
உண்மைகள் விளங்கிடும்
அருகிரு அன்பே
அத்தனையும் மறைந்திடும்

திங்கள், பிப்ரவரி 13

தீட்டு





பழனியாண்டவா
படியேறி உன்
பாதம் தொட்டால்
பற்றிக் கொள்ளுமா

குறத்தி வள்ளியை
துரத்தி விளையாடியவனே
பிறழ் சாட்சியாய்
பிராணனை வாங்குவதேன்

தேனும் திணைமாவும்
திகட்டியதா?
நானும் அவனும்
நாயும் பேயுமானோமா

அர்த்த மண்டபம் வரை
அடியேன் நடை பயில
அள்ளி அணைக்காது
ஆகமமெனத் தள்ளி வைத்தாயே

ஆகமம் என்ற அட்டவணை
ஆருக்காக எழுதினாய்
பாகம் போட்டு
பத்திரம் எழுதிக் கொடுத்தாயா

தீட்டு விதிகள்
தீயதாய் உள்ளதென்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தீவிர பக்தர்கள் நாங்கள்

அனைத்தும் அறிந்தவன்
உலகை இரட்சிபவன்
ஓரவஞ்வனை செய்கிறான்
சனாதனமென்று ஏமாற்றுகிறான்

முருகென்றால் அழகாம்
உருகி உனைத் தொழுதவனை
அருகில் வாராதே என்பது
முருகா…… உனக்கழகா?

தமிழோடு இணைந்தவனே
அமிழ்தை குருக்களுக்கும்
உமியை எங்களுக்கு அளிக்கவா
சாமி ஆனாய்

யாகம் வளர்க்க
யான் நுழைந்த தீட்டு
யுகத்தில் தீருமென்றால்
யுகயுகமாய் தொடுவேனே

யாக பலன் - உனக்கா
யாசித்து வாழென
வேதம் போதித்ததை
யோசித்து மாற்றியவனுக்கா

சக்தி இழந்தாயோ - நினை
சந்தித்ததால் ….
செத்து வீழ்வாயோ
சந்ததம் உடனிருந்தால்

இழந்த சக்தியை
ஓதும் மந்திரங்கள்
காதும் காதும்
வைத்தாற்போல் மீட்குமெனில்

நானே உச்சாடனம் செய்கிறேன்
நாயகனே வா வா
எங்கும் நிறைந்திருப்பவனே – எனை
ஏமாற்ற மாட்டாயே

தெய்வம் வெளியேறி
தேவதை வீட்டிற்குச் செல்லுமா
தேடிப் பிடிக்க
குருக்களால் மட்டும் முடியுமா?

ஆய்வோம்
ஆநிறையோடு வாழந்த போது
குரும்பாடும் சேவலும்
படைத்ததை மறந்தாயா

வெறியாட்டு நிகழ்வில்
வேலோடு உடனிருந்தவனே
வேசி மகனென வைபவனின்
வேள்வியில் மயங்கினாயோ

ஆசியெல்லாம் வேண்டாம்
அடிபணிந் திருப்பவனுக்கு
தாசி மகனென்றவனை
தரணியில் இல்லாதாக்கு

காதலர் தினம்






மடலேறி
மடல் வரைந்து
மடந்தையைக் கவர்ந்தவர்கள்
மலரில் தஞ்சடைந்த நாளோ

களவொழுக்கம் கண்ட
தலைவன் தலைவிக்கா
கண்டதும் காதல்கொண்ட
தற்கால காதலர்களுக்கா

தூதாய் வரும் தோழியா
துருவங்கள் இணையும் மொழியா
துறவறம் போகும் வழியா
துன்பத்தில உழலும் ஆழியா

காற்றுமழை பருவத்தே வருவதுபோல்
காளைப் பருவத்தில் வருவதன்றோ
கூற்றுக் கிரையாகி போகாது
கூட்டணி பலமாகுவது இந்நாளோ

நொடிகள் நீள்கிறது
நாடித் துடிக்கறது
ஆடி மாதமாய்
அடுத்த நாள் தோணுது

இந்த துடிப்புதனை
இலாபமாய் மாற்றிட
இரத்தின கம்பளம் விரித்தவர்கள்
இரகரகமாய் விற்பவர்கள்

புனிதமென்ன
புவனம் முழுதும் கொண்டாட
புனைந்த கதைகளோடு
வணிகம் மட்டுமே குறிக்காள்

அட்சய திரிதையன்று
அட்டிகை வேண்டுமென
அவளை கேட்க வைப்பதும்
அத் திருநாள்தான்

திருநாளில் மட்டும்
திகட்டும் அன்பை அளிப்பாயோ
மறுநாளில் திக்குத் தெரியாது
திசைமாறிச் செல்வாயா



சனி, பிப்ரவரி 11

பசுத் தழுவுதல்





காதலிப்போர்
கண்ணோடு கண்
காணும் நாளா
பிப்ரவரி 14

வேதத்தை மீட்டெடுக்க
வாஞ்சையோடு
பசுவைக் கட்டியணைக்க
பிப்ரவரி பதினாங்கா

காமதேனு என
கட்டிப் பிடிப்பாயா
கோமாதா என
கூம்பிட்டு நிற்பாயா

பசுவைத் தழுவு
அசுமேத யாகத்தில்
வேதமுரைத்ததை
வேட்கையோடுச் செயல்படுத்து

யாக முடிவில்
தசரதப் பத்தினிகளுக்கு
புத்திரப் பாக்கியம்
பிப்ரவரி 14 ல் உங்களுக்கு

உழைப்பைப் போற்றும்
உன்னத மரபில்
உடனுழைத்த மாட்டை
உயர்த்திப் பிடிக்கும் தமிழனே

வேத மரபை மீட்க
பசுவைத் தேடிக் கொண்டிருப்பாயா
காதல் உயிரினத்தின்
உன்னதமென போதிப்பாயா

வியாழன், பிப்ரவரி 9

பிராமணன் – பாஸ்கி






அறிவு
அவன் சாதிச் சொத்தொன்று
அரை வேக்காடு
பாஸ்கி அலறியது

வரலாறு அறியாத
வந்தேறியா அவன்
வடிக்கட்டியப் பொய்களை
வாரி வழங்குபவன்

பௌத்தமும் சமணமும்
தழைத்தோங்கிய நாட்டை
தனதாக்கிக் கொண்டு
ஒமம் வளர்த்து யாசித்தவர்கள்

கடல் கடந்து செல்ல
வேதத்தில் உத்திரவில்லை
விவேகானந்தன் சென்றான்
விவேகத்தால் பெயர் பெற்றான்

வேதம் உரைத்ததை
வேண்டியபடி மாற்றினான்
குடுமியை வெட்டினான்
குலத்தொழிலையும் மாற்றினான்

மொட்டைப் பாப்பாத்திகள்
கட்டைப் பொருளாகாது
ஏட்டைப் படித்ததால்
கூட்டை விட்டுச் சிறகடித்தனர்

அழுந்த அழுந்த
அவன் சாதிப் பெண்டீரே
அவனை மதியாது
அந்த சாஸ்திரங்களை மாற்ற

சூத்திரன் மட்டுமென்ன
சூப்பிக் கொண்டிருப்பானா
ஈயத்தை காய்க்கும் வரை
இளித்துக் கொண்டிருப்பானா

அறிவோ, சிந்தனையோ
ஆறறிவு மனிதனுக்கே
ஆயினும் ஆங்கொரு
அக்லக்கைக் கொல்வது

அவன் வகுத்த நீதியெனில்
அவ்வறிவை மெச்சுவதா
அகிலத்தில் இல்லாது செய்வதா
அறமறிந்தவர்கள் சொல்லுங்கள்

அச்சாதி வேதத்தை
அறவே தான் பின்பற்றாது
அடுத்தவகளிடம் திணித்தே
அகண்ட கனவை கண்டவர்கள் 

பின்நோக்கி இழுக்கும்
பிற்போக்கு கயவர்கள்
பிரித்தாளும் சூழுச்சிக்கு
பிராமண ஊதுகுழலாய்

பாஸ்கி அரற்றியது
பகல் கனவென்று
பாடம் புகட்டு - அறிவு
பாரினில் பொதுவென்றே







ஞாயிறு, பிப்ரவரி 5

அதானி இந்தியா









ஊதிப் பெருக்கிய
உலகப் பணக்காரனை
உருட்டித் தள்ளியது
ஹிண்டன்பர்க் ஆய்வு

ஆய்வொரு குப்பையென
அவர்கள் குதித்தே – இது
இந்தியாவின் மீதான
வளர்ச்சிக்குத் தாக்குதல் என்றனர்

ஊக வணிக வீழ்ச்சியில்
ஊமையானது அரசு
ஊதிப் பெருக்காத எதிர்கட்சியோடு
ஊடகமும் மௌனமானது

இந்தியாவும் அதானியும்
இணையென்ற கூற்றை
இறையாண்மை இந்தியா
ஏற்றுக் கொண்டதா?

இரண்டு இந்தியா
ஏற்றுக் கொண்ட மக்கள்
தேச பக்திக் கொண்டவர்கள்
ஏற்காதவர்கள் ????............

அதானி அம்பானி
ஆளும் இந்தியாவில்
ஆநிரையோ அந்நியரோ
ஆமைக்கறி உண்பவரோ

எட்டு இலட்சம் கோடி
எங்குச் சென்றதென
எல்லோரும் தேடிக் கொண்டிருக்கையில்
“எல். ஐ. சி” யும், “எஸ். பி. ஐ” யும் வந்தனர்


வீழ்ந்தாலும் பாதிப்பில்லை
வீரவசன அறிக்கயை
வீசி எறிந்தனர் – ஊடகங்கள்
பிரசுரித்து ஆசுவாசப் படுத்தின

ஆண்டிறுதி விற்பனை
அதோகதி யானது எல்.ஐ.சி க்கு
அவர்களின் பங்கும்
அடிப்பட்டு வீழ்ந்தது

கருப்புப் பணத்தை ஓழித்து
பலகோடி இலாபமீட்டி
சில நாட்களில்
உலகில் 2வது நபர்

மொரிசியஸ், பனமா
கேமன் தீவுகளில் தேடிய
அதானியின் இந்தியாவா
55 சதவீதத்தை தொலைத்தது

வங்கிக் கடன், எல்.ஐ.சி முதலீடு
அடமானப் பத்திரங்கள்
45 சத வீதமாய் மிஞ்சுமா
நாமம் மட்டுமே எஞ்சுமா

நீரவ் மோடி
மல்லையாக்களின்
வரிசையின் எண்ணிக்கை
வரும் நாளில் தெரியுமோ

உலகம் சுற்றும் வாலிபனின்
உன்னதப் பயணங்கள்
உத்தமர் தேசத்தின்
உத்திரவாதமெனப் பொழிய

சந்தைதனை போட்டியின்றி
சகலமும் பெற்றவன்
சந்திச் சிரித்து நிற்கிறான்
சகாயனோ விக்கித்துப் போகிறான்

ஏவல் செய்யும்
அரசு யந்திரங்கள்
காவல் காக்கின்றன
கண்ணியம் காக்கப்படுகிறது

வீட்டுக் கடனுக்கு
வீடு ஜப்தி செய்யலாம்
ஜி.எஸ்,டி யால் மூடிய
சிறுநிறுவனங்களை ஏலம் விடலாம்

கொரானாவில் பரலோகம் சென்ற
பாமரனின் குடும்பத்தை
சட்டப்படி ஏலம் விட்டு
நிற்கதியாய் நடுத் தெருவில் நிறுத்தும்

வங்கி நடைமுறை
இந்தியர்களுக்கு மட்டுமே – ஆயினும்
அதானி இந்தியா
மேதினியில் வேறுதானே?

“இசட்” பிரிவு பாதுகாப்பில்
“செபி” யோ “சி.பி.ஐ “ யோ
உள் நுழைய முடியவில்லை
வங்கிகள் மூச்சு விடவில்லை

நீதி மன்றங்கள்
நிவாரணம் அளிக்குமோ
கடந்துச் செல்ல அவையும்
பழகிக் கொண்டனவோ

அமெரிக்க நீதிமன்றம் வா
ஆதாரம் தருகிறேன் என்கிறான்
ஆத்திரமோ, அவசரமோ இல்லை
அமைதிக் காக்கிறான்

தேசப் பக்தியால்
“ஆன்டி” இந்தியனாகாது
இருக்க பழகுவாயா?
எதிர்வினை யாற்றுவாயா?





ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...