ஞாயிறு, மார்ச் 27

தேவதையின் தீர்ப்பு







வேண்டா மென்பதை
வேர்விட்ட பின்பு அறிவிக்க
ஆண்டியா மாறியே
அருகன் நிழலில் நிற்பேனோ
தீண்டா நிலையில்
திக்கற்று சரணடை வேனோ
மண்டா போவேன்
மார்க்க முண்டு புதுபிக்க


பட்டங்கள் கொடுத்தே
பராக்கிரமப் பாண்டிய னென்றாய்
வட்டத்தில் வாக்கப்பட
வரிசையில் வில்லேந்தி வந்தாலும்
திட்டத்தில் நாமில்லை
தீர்த்துச் சொன்ன தேவியே
தெட்டலல்ல தெளிவென்றே
தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பே


வற்புறுத்த - வரமளித்து
வசந்தனை காத்தரு ளினாயோ
அற்புதங்கள் நிகழாதென
அந்தபுரத் திடமில்லை என்றாயோ
கற்பிதங்கள் அவரவர்
கனவுகளால் கானல் நீராக
புற்பதமாய் ஆனதே
புட்பகேது புவனம் அழிந்ததே


ஆர்பரித்த அன்பு
ஆரிடம் தோன்றிய தென்றே
கூர்வாளால் கேட்கிறாய்
குற்றப் பத்திரிக்கை வாசிக்கறாய்
ஊர்முழுக்க அறியுமே
உத்திர வாதமில்லை என்றா
தீர்ந்தது கணக்கென
தீர்பெழுதி விட்டாய் தேவதையே


உதட்டில் அன்பும்
உள்ளத்தில் கபடமும் கண்டேன்
எதற்கிந்த வேடம்
எந்தன் கைபேசியும் தடைபடுதே
பதரால் பயனில்லை
பக்குவமாய் தவிர்ப்போ மென்று
இதமாய் இங்கிதமாய்
இயல்பாய் உணர்த்தி வைத்தாய்


மறக்க முடியுமா
மானுட மன்றோ முடியாதே
சிறந்த நினைவுகள்
சித்திரமா தொடர்ந்து வருமே
அறமல்ல என்றால்
ஆகட்டும் கண்ணே பார்க்கிறேன்
பிறழாது இருக்கவே
பிரபஞ்சத் துர்வாசனைத் தேடுகிறேன்


விதையும் துளிராய்
விளைந்த அன்பும் தளிர்க்கும்
கதைத்த காலங்கள்
காதலின் கடந்த காலமாகும்
வதைக்கும் வார்த்தைகள்
வடுவாய் மனதைச் சிதைக்கும்
எதையும் தாங்கும்
எஞ்சிய வாழ்க்கை இரவலாகும்





செவ்வாய், மார்ச் 1

காசுக்கு நீரோ







கமலையில் இறைச்சநீர்
கால்வாயில் பாய்ந்தோட
கைகளால் பருகிடுவோம்
காய்ந்த தொண்டையை நனைத்திட

ஏனோத் தெரியல
தேனாய் இனித்திடும்
பானையின் தண்ணீர்
நஞ்சென நம்பிய தெப்படி

வானம் பொய்த்தாலும்
சுனையில் சுரந்திருக்கும்
அனைவரையும் காத்திருக்கும்
வினையாய்(தொழில்) ஆனதிப்போ

அமெரிக்க கம்பெனி
அஃகுவாபினா, கின்லே
அடைத்து தரும் நீரிலே
ஆரோக்கியம் அடங்கியிருக்கா

கற்பிதங்கள் உண்மையென
கற்றறிந்தோர் ஏற்பதால்
காசுக் கொடுத்து
காலாவதி நீரை வாங்குவதா?

தாமிரபரணியும் சிறுவாணியும்
தமிழகத்தின் தேனாறுகள்
ஆள்துளையிட்டு அவர்கள்
கொள்ளையிடக் கானலாச்சோ

உன்வீட்டு நீருக்கு
உன்சட்டைப் பையில்
காசெடுக்கும் உரிமையை
கார்ப்பரேட்டுக்கு கொடுத்ததாரோ

நீரும் நிலமும்
நஞ்சாய் மாறிப் போக
ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த
எட்டப்பர்களின் பேராசையா

வளர்ச்சி தேசத்தின்
வளங்களை அழித்தா
வருங்காலச் சந்ததியை
வருத்தாதிருக்க

புத்தனாக மாறென
பூச்சாண்டிக் கூவல் இதுவல்ல
மானுடச் சமுகத்தில்
விலங்காய் மாறாதிரு

 


வெள்ளி, பிப்ரவரி 4

ஒன்றிய பிரதிநிதியின் துரோகம்

 



தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, வெகுஜன மக்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு மசோதாவை அனுப்பினால் ஆறு மாதங்கள் காலம் தாழ்த்தி ஏற்க முடியாது என்பதோடு மட்டுமல்ல உண்மைக்கு புறம்பான காரணத்தை சொல்லி  ஒன்றிய பிரதிநிதி திருப்பி அனுப்புகிறார்.

நீட் தேர்வை கிராமபுற மற்றும் அரசு மாணவர்கள் வற்வேற்கிறார்கள். அவர்கள் அதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

7.5 சதவீத ஒதுக்கீடு தேர்தலுக்காவும், 20 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்பாலும் பெறப்பட்டது. அவ்வொதுக்கீடை இப்போதும் தொடர்வதால் நிராகரிக்க இயலாது.

நீட் தேர்வில் இம்முறை வெற்றிப் பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மத்திய கல்வி முறையில் (CBSE) பயின்ற மாணவர்கள் முதல் 600 பேர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அரசு மாணவர்கள் ஒதுக்கீடு மூலமே பயனடைந்துள்ளனர்.  ஒதுக்கீடு இல்லையெனில் அவர்களுக்கு இந்த வாய்ப்பும் பறிபோயிருக்கும்.

ஒன்றிய பிரதிநிதியின் துரோகத்தால் அரசு தன் முடிவை இப்படி மாற்றிக் கொள்ளலாம்.  மத்திய கல்வி முறைக் கல்வி, மாநில அரசு கல்வி முறையில் பயின்ற மாணவர்களை விகிதாச்சார முறையில் தேர்ந்தெடுக்கலாம். அதாவது மாணவர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில்.

இப்படி செயல்படுவதால் ஒதுக்கீட்டின் சதவிகிதம் அதிகரிக்கலாம்.

இதையும் கடந்து கல்வி வியாபாரம் என்றான பின் அதன் கட்டணங்கள் அதிகமாகதான் இருக்கிறது.  98 = 55,50,00,000  என்பது நாட்டின் வளத்தைக் காட்டுகிறது.  அப்படிதான் கல்வியிலும்.

மற்ற இலவசங்களைக் காட்டிலும் எந்தக் கல்வியையும் இலவசமாக கிடைக்கச் செய்தால் நீட் தேர்வுகள் தேவையில்லைதான்.

 

மருத்துவக் கல்வியின் ஒரு ஆண்டு கட்டணங்கள் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இப்படி இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி                                15000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு     600,000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% நேரடி ஒதுக்கீடு   20,00,000

தனியார் நிகர்நிலை பல்கலைகழங்கள்                   25,00,000

 

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு ரூ. 10 லட்சமாக இருக்கிறது. அரசு கல்லூரிக் கட்டணம் தவிர்த்து மற்ற தனியார் கல்வி கட்டணங்கள் ஏறக்குறைய ஒன்றே. ஒரு பாடத்தை ஒரே வகுப்பில் வேறு வேறு மாணவர்கள் இம்மாதிரி கட்டணம் செலுத்தி படிப்பதே இன்றைய மருத்துவக் கல்வி. இலவச தரிசனம் முதல் ரூ 200 வரை கட்டணம் பெற்று தரிசனம் தரும் கடவுள் உள்ள நாட்டில் இப்படிதான் கல்வியும்.  மக்கள் அதற்கு அடிமை. கல்விக்கு மௌனியாக கடந்துச் செல்கிறார்கள்,

இதற்கு தீர்வு காணாமல் நீட்டிற்கு தீர்வு காண்பது பெரிய வெற்றியல்ல.

இது மட்டுமல்ல. நாமக்கல் பிராய்லர் கோழிகள் மன்னிக்கவும், மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள். மத்திய மாநில வழி கல்வியானாலும் அங்கே வகுப்புகள் A to Z மட்டுமல்ல AA to Az வரை நடைப் பெறுகிறது. கட்டணம் ரூ 2-3 இலட்சங்கள் நீட் பயிற்சிக்கும் சேர்த்து.

ஆக கல்வி என்பது மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட வேண்டும். கொள்ளையடிப்பவர்களுக்காக அல்ல

வியாழன், பிப்ரவரி 3

காதலி கண்பாரடி

 


காதலி கண்பாரடி
காதலில் வாடுமெனை
சாதக வார்த்தையால்
சக்திமா னாக்கடி
வீதியில் சுற்றுமெனை
விரைவில் காத்திடு
ஆதியில் ஏவாளும்
அங்ஙனமே செய்தாளடி

காதலர் தினமா
காத்திருக்கும் எனக்கேதடி
நாதமோ வேதமோ
நாளும்நின் அருளடி
ஆதலால் அன்பே
அடியவனை ஏற்பதாய்
சாதகப் பதிலை
சங்கேதமாய் உணர்த்தடி

காத்திருக்க வைப்பதா
காதலியுன் சோதனை
பூத்திருக்கும் அன்பினை
புற்பதமாய் எண்ணிட
யாத்திருந்த பாக்களா
யாசகனின் உத்தியா
சாத்தியத்தை உரைத்தால்
சட்டென ஏற்பேனே


மொட்டுக்கள் பூவாக
மோனநிலை யிருக்கு
மெட்டுக்கள் நீயிட்டு
மெய்நலம் கூறாதே
கட்டுக்கள் தளர
காயங்கள் வருமே
சிட்டுக்கள் பறப்பது
சிறையில் அடையவா

விட்டுச் செல்லவா
விருப்பம் சொன்னேன்
எட்டிச் செல்லாதே
என்னினிய காதலே
விட்டிலாய் வீழவா
விழுதுவிட்டு வாழவா
திட்டமிடு பெண்ணே
தீர்ப்பை வழங்கிடு

பிழைகள் இல்லையடி
பிடித்தால் இணைவோம்
தழைத்தல் இயல்படி
தகுதலாக்கு மனதினை
உழைக்கும் உறுதியுண்டு
உறுதுணையாய் நீயுண்டு
அழைத்துக் கொள்ளேன்
அறத்தோடு வாழ்வோம்

ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்த தையிலே
மேகங்கள் மறையலாம்
மேற்திசைக் காற்றிலே
பாகமான வாழ்வில்
பாதியில் கைவிட்டு
போகவாழ்வு வீண்னென்ற
பட்டினத்தான் அறிவாயா

ஞானியாய் மாறவா
நாயகியை நேசித்தேன்
ஏனிந்தச் சிந்தனைகள்
என்றென்றும் பூசிப்பேன்
நானிலமும் வியந்திட
நன்றாய் வாழ்ந்திட
ஆனிப்பொன் அழகே
அத்தானை நினைத்திடு


புதன், ஜனவரி 26

உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

 




 



தூற்றலை மறந்து
தூயவளை நினைக்க
வேற்றலம் தீண்டிட
வேடிக்கை ஏனடி
மாற்றம் நிகழுமடி
மற்போரில் அல்ல
ஏற்றத்தில் உரைப்பேன்
என்தேவி நீயே



மன்றலில் இணைந்து
மாயத்தை வெல்ல
அன்றில் என்றே
அகிலம் போற்ற
தென்றலும் ஏமாந்து
தென்னையில் அமரும்
அன்றென் அன்பின்
ஆழத்தை உணர்வாய்



உலகை இயக்கும்
உன்னதக் காற்றோ
விலகா திருக்கும்
வேலவன் மாற்றோ
நலமே விழையும்
நாயகன் நானடி
அலாபமே அவ்வுரு
அடிக்கடி மாறுமே



திண்ணியன் அருகிருக்க
தென்மலைத் தென்றல்
எண்திசை சூழ்ந்தாலும்
எல்லையில் நிறுத்திடுவேன்
பண்ணிசையில் தூதை
பக்குவமா அனுப்பினாலும்
கண்ணேயுனைத் தென்றல்
தீண்டவும் விடமாட்டேன்

சனி, ஜனவரி 15

ஆக்ரமிப்பு


 

அன்றாடங் காய்ச்சியாய்
அரைவயிற்றுக் கஞ்சிக்கு
அவ்வீதிவழி – தள்ளுவண்டியில்
காய்கறி விற்போம்

அகிலஉலகப் பணக்காரன்
அம்பானி அன்றாடங்காய்ச்சியா
அரை வயிற்றுக்காரனோடு
அவனுகென்னப் போட்டி

பாதையோரம் துணிவிரித்து
பலபேர் கேட்கக் கூவி
பட்டினியப் போக்க
கூறுக் கட்டி வித்தோம்

“ரோட் ஷோ“ என
“ஜியோ சிம்“ விற்று
போட்டியை திவாலாக்கியவன்
தெருவுக்கு வாரான் யாரைத் திவாலாக்க

கொட்டிக் கிடக்கும் பணத்தால்
நட்ட விற்பனை செய்ய வாரான்
இலவசம் இலவசம் எனக் கூவ
இளித்துக் கொண்டு செல்வாயா?

வீதியின் கீரைக்காராம்மா
பால், தயிர் காரம்மா
இவர்கள் காணாமல் போக
“ரிலையன்ஸ்“ காரணமா

தெருவுக்குத் தெரு
திக்கெட்டு மிருந்தக் கடைகள்
“அமேசான்” “பிளிப்கார்ட்”டால்
அதோகதியான கதைகள் - மறந்தாயா


வீதிக்கு வாராதே
விழுங்கிடும் கொரோனா
வாசலுக்கு வாரேன்
வசதிப்படுமென்கிறான்

நேற்று வரை
வாசலில் விற்றவன்
“ரிலையன்ஸ்“ சட்டையணிந்து வாரான்
பழகிக் கொள்ளாதே மானிடா

குஜராத்தி பனியாவிற்கு
கொத்தடிமையாய் மாறாதே
உன்ஜாதி உழைப்பது – அச்சாதி
பணத்தை விதைப்பது 

உள்ளுர் மண்ணில்
உனக்காக விளைந்ததை
உன்னினம் விற்கட்டுமே
உறவுகள் வாழட்டுமே

திங்கள், டிசம்பர் 20

கன்னிகாதானம்


 

தானம்
கன்னிகாதானம்
காலம் காலமாய்
கைத்தலம் பற்றிட

தானம் கொடுக்க
மங்கையென்ன
மாடா, பொருளா
மானுடம்தானே

இணையாய் வாழ
இல்லறம் பேண
இருவரில்
யார் – யாருக்கு அடிமை

மரபென
மாறாது செய்தப் பெற்றோரை
மாற்றும் வல்லமை
மங்கையர்கே உண்டு

கற்றக் கல்வியால்
பகுத்துணர் அறிவால்
மரபுகளை மறுத்து – என்றென்றும்
மகளாக இருக்க வேண்டுமென்கிறாள்

ஆண்டாண்டுக் கால
அடிமைதனை
ஆட்சியர் பணிக் கல்வி
அகற்ற

வேதம் உரைத்ததை
வேண்டாம் என்பது
சனாதனத் தேசத்தில்
விடிவெள்ளிதான்

கலகம் பிறந்தது
கணவனும் ஏற்றான்
கற்றவர் பெருக
கற்கால மடமை மாறுமே

புதன், டிசம்பர் 8

கடவுள் சொத்து – வளர்ச்சிக்கா



உலகளந்து
ஓடியாடி உழைத்து
பிட்டுக்கு மண் சுமந்து
சேர்த்தச் சொத்துக்கள்


மாட மாளிகைகள்
வணிக வளாகங்கள்
விவசாய நிலங்கள்
கல்லூரிப் பள்ளிச் சாலைகள்


வேர்வை முத்துச் சிந்தி
பார்வைக்குக் கட்டணம் வாங்கி
பலகாலம் சேர்த்தச் சொத்தில் - பங்கு
அரசின் வளர்ச்சிக்கா

சொத்து
வாரிசு உரிமைக்கு உட்பட்டது
வாரிசு இல்லையெனில் - அரசுக்கா
ஒன்று விட்ட உறவுக்கா


மரித்த கடவுளின் சொத்துக்களை
வாரிசு உரிமை கோரும்
வகையறா
நீதிமன்றம் வருமோ


இந்திரன் சோமன்
இவர்கள் மாஜி கடவுள்கள்
கிரேக்கத்திலும்
இந்தப் பட்டியல் உண்டு

வகை நான்கு
வழிபட தேவபாஷை - என
வகுத்த கடவுளை
வார்த்தெடுத்த நீதி அரசர்கள்


புதிய காரணங்களை
புனைந்து எழுதுவதால்
கடவுளின் இருப்பை
நீட்டிக்க முயல்கிறார்களோ?


அப்பாவி பக்தர்கள்
அளித்தக் கொடைகள்
தங்க கோபுரமாக
தகதகவென மினுக்க


மினுக்கும் அழகில்
தனது கடவுளென மதிமயங்கி
எந்நாடுடைய சிவனேயென
ஏற்றிப் போற்றிட

கனவில் வந்தே
காப்பாற்று என் சொத்தை
நீதியரசருக்கு
கட்டளையிட்டிருப்பாரோ

அரசின் வளர்ச்சிக்கு
அடிப்படை வருமானம்
திருவிடந்தை பெருமாள் மட்டுமல்ல
திக்கெட்டும் காரணமாக கூடாதாம்


இந்து கோயில் வருமானத்தில்
கல்லூரித் திறப்பதா
கல்விக்கண் திறப்பதா
வேதம் கற்கட்டும்

வேதம் கேட்ட காதுகளில்
ஈயம் ஊற்றியவர்கள்
சூத்திரனிட்ட பிச்சையில்
வேதம் ஓதுகிறார்கள்

ருத்ர பூமி -சிவனுக்கு
பட்டாப் போட்ட இடமா
மானுடம் அமைதிக் கொண்டமிடமா - அல்ல
வீட்டுமனைகளாய் மாறியமிடமா


மலைகள் ஓடைகள்
மாயமாய் மறைய
அரசு ஆவணங்களும்
காசுக்கு மாறும் காலத்தில்

குலநாசமென
கூக்குரலிட்டாலும்
கூசாது மனைகளாய் மாற்றுவான்
கூத்தன் வரவே மாட்டானென்பதால்


சொத்துவரி
தொழில் வரி
மூலதன ஆதாய வரி - இன்னப் பிற
வரிகள் செலுத்துகிறாரா கடவுள்

அறிவுக் கூர்மையால்
அள்ளிச் சேர்த்த வருமானத்தில்
30% அரசு வசூலித்ததா?
முழு விலக்கு அளித்ததா


நீதிமன்றங்கள்
நேர்மையில் விலகுது
மானுடம் காப்பதை மறந்து
மதங்களை காக்க தீர்ப்பெழுதுகிறது


மதங்கள்
மானுடத்தை பிரித்து வைக்க
இயற்கை
இணைத்து வைக்கிறது


இணைவோம்
இறைவனை காணவல்ல
இறைவனின் இருப்பை நீட்டிக்கும்
இ.பி.கோவை மாற்றி எழுதுவோம்

வியாழன், நவம்பர் 18

திருடர்கள்

 



இருவகை இவர்கள்
இல்லாமையால்
இத்தொழிலா – அல்ல
இதில்தான் வளம் கொழிக்குமா

தனியுடமைதனை
தக்கச் சமயத்தில்
தட்டிப் பறிப்பது
சாதாரணத் திருடன் செயல்

எதைக் களவாடுவது
யாரிடம் களவாடுவதென
தீர்மானிக்கும் திருடன்
சாதாரணத் திருடன்

இழப்பெனில்
செல்வத்தை பாதுகாக்க
எதிர்த்து போராடுவோம்
சாதாரண திருடனிடத்தில்

இழந்ததை மீட்க
இ.பி.கோ. வை நம்பி
சிலர் மீட்பர் – சிலர்
இருப்பதையும் இழப்பர்

வளமான எதிர்காலத்தை
உழைக்கும் வாய்ப்பை
கற்கும் கல்வியை
கருணையின்றி பறிப்பர்

வியாபாரத்தை இழப்பாய்
ஆரோக்கியத்தை இழப்பாய்
யாரால் – எந்த திருடனால்
என்றாவது யோசித்தாயா?

திருடனை
திருவாளர் பொதுசனம்
தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல
ஆதரித்துப் பாதுகாப்பது அவரே!!!

சனநாயக கடமையில்
தேர்ந்தெடுக்க அதிகாரமுனக்கு
சாக்கடை நமக்கெதற்கென
ஒதுங்கியிருந்து ஆதரிப்பதும் நீயே

தேர்ந்தெடுத்தவனின் – வீரத்
தீர பெருமையுரைத்து
திருட்டில் பங்குப் பெற்று
பாதுகாப்பதும் நீயே

மலைகள் – ஆறுகள்
குவாரிகளாய்
கிரானைட் பலகைகளாய்
காணாமல் போகும்

கடற்கரை தாதுமணலாய்
கடல் கடந்து செல்லும்
கடலோரம் புதைகுழியாகும்- உன் வாழ்வு
என்னவாகும்

போடாத சாலைகள்
பளபளக்கும்
பொருத்தாத விளக்குகள்
ஒளிவிட்டு எரியும்

கூடங்குளம், ஸ்டெர்லைட்
காவு கேட்கும்
வாடியபோதெல்லாம் வாடியதாய்
வசனம் பிறக்கும்

காடு கழனிகள்
இறால் வளர்ப்பென
களர் நிலமாகும் – வாழ்க்கை
களையிழந்து போகும்

மீத்தேன், ஹைட்ரோகார்பன்
எட்டு வழிச் சாலைகள்
வளர்ச்சியின் வேடத்தை
கச்சிதமாய் ஏற்கும்

நாட்டின் வளங்களை கொள்ளையிட்டு
நமது மகிழ்ச்சியையும் – உடல்
நலத்தை பறிப்பதை
வேடிக்கை பார்க்கிறோம்


பொதுத் துறை நிறுவனங்கள்
பொன் முட்டையிட – அறுத்து
தனியாருக்கு தாரை வார்க்க
நட்ட கணக்கு நம்பப் படுகிறது


அவமானகரமான
கேலிக்குரிய – இச்செயலை
என்ன செய்யலாம்
சிந்தித்தாயா?

நாடு பின்னோக்கிச் செல்கிறது
பார்வையாளனாக – நீண்ட
அமைதிக் கொள்வாயா
பதைப்பதைத்து எழுவாயா

அரசியல்
அது சாக்கடைதான்
எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பாய்
சுத்தம் செய்ய இறங்கு

சாக்கடையில் இறங்கி
சுத்தம் செய்ய
சாதாரணன் தயங்கியதாய்
சரித்திரமில்லை

வேண்டாத வேலையென்று
ஒதுங்கி நிற்காதே
விழுங்கி விடும்
வேலெடு - வீச்சோடு வா

நமது எண்ணிக்கையில்
அவர்கள் இல்லை
ஆயினும் அச்சமேன் - வெற்றிக்கு
ஆர்பரித்து இறங்கு

இல்லையெனில்
பெரும் கார்ப்பரேட்டுகள்
எல்லாத் தொழிலையும் செய்யும்
ஏமாளியாய் வாழ்வாய்

ஆம்…. ஒவ்வொரு
தேசப் பற்றாளனும்
தேசத்தை தூய்மையாக்க நினைத்தால்
தேசம் மக்களுக்கானது

புதன், நவம்பர் 3

எது இந்தியா

 




565 சமஸ்தானங்களை
ஒரு குடையின் கீழ்
மாட்சிமை தங்கிய
மகாராணி ஆண்டதா


இரும்பு மனிதனின்
இஷ்டத்திற்கு பரோடா
இன்னபிறத் தேசங்களை - 1956 வரை
இணைத்த கதையா


அசோகர் பேரரசு,
கனிஷ்கர் பேரரசு
குப்த பேரரசு
ஓளரங்கசீப் பேரரசுகளா

குஜராத்தின்
சோலாங்கி, வகேலா அரசா
மைத்திரக 
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசா

ராஜபுத்திர
சௌகான்கள்
சந்தேலர்கள், தோமர்,
பரமார் பேரரசுகளா


இரத்தோர்கள் வழிவந்த
இராஷ்டிரகூடர்கள்
ஹொய்சாளர்கள்
காகதீயர்களின் அரசா


கிருஷ்ண தேவராயரின் 
விஜயநகரப் பேரரசா
மேலைச் சாளுக்கியர்கள் அரசா
கீழைச் சாளுக்கியரின் வேங்கி நாடா

கஜினி முகமது
கோரி முகமது
தில்லி சுல்தான்களின் அரசா
அடில்ஷாக்களின் பாமினி பேரரசா

சேர சோழ பாண்டிய
பல்லவ மன்னர்கள்
கடையெழு வள்ளல்கள்
கட்டியெழுப்பிய தேசமா

ஜான்ஸிராணி லக்குமிபாய்
சித்தூர் ராணி பத்மினி
ராணி மங்கமாள்
கட்டபொம்மன், மருதுவின் பூமியா

வேணாடு வர்மாக்கள்
மைசூரு மகாராஜாக்கள்
தஞ்சை பேஷ்வாக்கள்
தவறவிட்ட தேசமா?

பௌத்தம் உதித்த பகுதியா
பாலப் பேரரசா
காமரூப பேரசா - இதில்
எது இந்தியா?


மன்னர் மானியங்களால்
வடிவமைக்கப்பட்ட தேசம்
இன்றும் நிலைத்திருந்து
இந்தியா என்றிருப்பது


தமிழனாய் இருப்பதால்
இந்தியானாய் ஆக்கப்பட்டது போல்
வேற்றுமையில் ஓற்றுமையென
விருப்போடு இணைந்த மக்களால்

பல்வேறு பண்பாட்டுச் சுவடுகளை
பல்வேறு இனங்கள்
பசுமையாய் பதித்திருக்கும் தேசத்தில்
ஏன் இந்து இந்தியா


கடாராம் கொண்டான்
இலங்கை, மாலத்தீவு  
மலேயா, சுமத்ரா, கம்போடியா, 
இந்தோனேசியா, மியான்மாரையும் வென்றான்

அகண்ட தேச கனவுக்கு
முப்பாட்டன் வென்ற தேசத்தை
மூன்று நொடியில் இணைத்தாலென்ன
இலங்கையை மட்டுமாவது கொண்டலென்ன

இணையத்தை முடக்கி
கைப்பேசி சேவையை
கட்டுப்படுத்தி – வென்றதாய்
கதைப்பவனே உன்னால் முடியுமா

குடியாட்சில்
சுயாட்சி வேண்டுமென
விதையிட்டது
திராவிட மண்தானே

சுடலையும் கருப்பனும்
சுப்ரமண்யன் ஆகமாட்டான்
முனியும் பச்சையம்மாளும்
மூலஸ்தானத்திற்கு வரமாட்டார்கள்

பத்ம விருது நிகழ்வில்
பாரம்பரிய  ஆடையணிந்து
பண்பாடு இதுவென்று - இன்று
பறையறிவித்தது புரியலையா?

படிநிலைகளின்
பாரத தேசத்தை
பார்த்து மாற்றுவோம்
பாரினில் மானுடத்தை காத்தே

செவ்வாய், ஜூன் 22

கடை

 





வருமானத் திற்குவழி வாழ்வழிக்கும் கள்ளோ
பெருமான் கடைத்திறக்கப் போராட்ட மில்லையோ
தீர்க்கமா மூடாது திக்கெட்டும் விற்கவா
தேர்ந்தெடுத் தாய்புது தேர்


எதிரணியாய் கேள்வி ஏகமாய் கேட்க
அதிகார நாற்காலி ஆட்பட்டக் கையோடு
அத்தனையும் மறந்து அரசு நடத்திட
நித்தமுமுண் டென்றார்இந் நீர்


பெருந்தொற்றுக் காலத்தில் பொய்யான பிம்பம்
பொருளோ டாயிரம் போட்டுக் கொடுக்க
இருளகற்றும் தேவனென்று இச்சகம் பேசும்
பெருங்கனவில் ஏமாற்றம் பார்!

அம்மா





தன்நலங் கருதாது தோன்றலின் வாழ்வினை
என்நாளும் வேண்டுவது ஏற்றமிகு அன்னை
கனவை விதைப்பதும் கற்றுத் தருவதும்
அன்பைப் பொழிவது மவள்


சேய்வளர்ந்து செல்வச் சிறப்போடு வாழ்ந்தாலும்
தையலால் மாதாவை தீயாய் வதைத்தாலும்
சேய்க்கு நோயென்றால் சோர்ந்தே அரற்றும்
நேயம் மிகுந்தவள் தாய்


அற்புத வாழ்வினிலே அம்மா எனிலன்பு
பொற்பாதம் பின்தொடர பொன்னான வாழ்வு
உறவென ஓராயிரம் உன்னைத் தொடர்ந்தாலும்
சிறந்தவள் தாயென எண்

சனி, ஜூன் 19

உழவன்

 






உலகம் உயர்வுற ஊனுறக்க மின்றி
நிலத்தைப் பயிரிட் டுணவை நிதமும்
சகலருக்கும் ஈபவனைச் சாக்காட்டில் வீழா
மிகிழ்வுறச் செய்வதே மாண்பு

செவ்வாய், ஜூன் 15

நாணமற்ற மாந்தன்

 


புல்லறிவாண்மை

குறள் 846:

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.



ஆடைக் கட்டி அற்றத்தை
......ஆங்கே மறைத்து பயனென்
மூடன் குற்றத்தை மறைக்க
......மூடும் ஆடையால் பயனென்
மூடர் நினைப்பர் உயர்வாய்
......முரண றியாத கீழறிவால்
கோடைக்கு ஆடை விடையென
......கோணன் எண்ணும் அறிவால்


திருந்த திருத்தல் சரியே
......திருக்கு மறைக்க பிழையே
வருந்த பெருவாய் நீதியே
......வஞ்ச கனெனில் வீழ்வாயே
பெருங்குற் றந்தனை நாணி
......பிறரறியா நீக்க அழகே
ஒருங்கல் தொடர மனிதா
......உருமறைக் குமாடை வீணே

கற்றும் கல்லார்

 






புல்லறிவாண்மை


குறள் 845:


கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.


அறியாததை அறிந்ததாய்
….. அறிவில்லார் உரைத்திட
அறிந்ததை அறிந்தாலும்
…… அய்யுறுவர் உலகத்தவர்
அறியாததைப் பிழையுடன்
….. ஆங்கே பொழிந்திட
நெறியிலார் இவனென
….. நினைவூட்டி காட்டிடும்


கற்றதைக் கசடற
…… கற்று இருந்திட
மற்றதை அறிந்ததாய்
….. மயக்கிப் பசப்பிட
கற்றவர் ஒப்பிடார்
….. கல்லாமை உணர்வரே
வெற்றியை விரும்பிட 
….. வேண்டாம் பொடிதலே

சனி, ஜூன் 12

நட்பு அறி








நட்பாராய்தல் : 
குறள் எண்:792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்



குற்றம் ஆய்ந்து
.....குணமும் ஆய்ந்து
சுற்றம் கொள்ள
.....சுகமே பெருவாய்
முற்றும் அறியா
.....முதிரும் நட்பில்
முற்றல் மட்டும்
.....முகாரி ஆகும்



பிறக்கும் போதே
.....பின்தொடரும் உறவா
சிறக்கும் நட்பை
.....சீர்தூக்கிப் பார்த்தே
உறவோர் ஆக்கு
.....உவரை ஏற்றால்
பிறகோர் துயரம்
.....பிணக்கா டுவரும்

அன்பா அறிவா






சாதகப் பறவைகள்
.....சாசனம் எழுத
காதக தகப்பன்
.....காதலை முறிக்க
நூதன வழியில்
.....நுண்ணிடைத் தப்ப
மாதவ மாதம்
.....மாறனை மணந்தாளே


காதல் இணைகளுக்கு
.....கனவு சுமையாக
வாதம் வம்பாக
.....வஞ்சியும் குறும்பாக
ஆதன் என்றாள்
.....ஆர்வலன் பழித்தான்
பேதம் பிறக்க
.....பெரும்பிழை என்றானே


அன்புடை நெஞ்சத்தை
.....அறிவியல் விளக்கா
அன்பினை அறிவால்
.....அளந்திட விளங்கா
ஒன்றிட வேண்டில்
.....உயர்தவர் துலையர்
அன்றிலில் இலையென்று
.....அறிவது அழகே

வியாழன், ஜூன் 10

ஒன்றியத்தில் தமிழ்நாடு







அகம்பலக் கொண்ட
....அருமை நாடு
சகலரும் ஒன்றே
.....சட்டம் பாரு
சிகரமாய் வென்ற
....சிங்காரத் தமிழுக்கு
அகரமாய்த் தமிழ்நாடு
....ஆகட்டும் வளநாடு


ஒன்றியம் என்றால்
....உனக்கேன் கவலை
அன்றிலாய் வாழ
....அடித்தளம் அதுவே
அன்றியும் அழைக்க
..... அடிமையா தமிழன்
குன்றிடா ஒன்றியத்தில்
....கூடிடு தமிழனென்றே

கன்னல் தமிழ்








கன்னல் தமிழை
.....கண்ணாய்ப் போற்று
இன்னல் வந்தால்
.....இறந்து காப்பாற்று
என்னில் தாயே
.....எனவே வணங்கு
உன்னில் மொழியே
.....உறவைத் தொடங்கு


அம்பலம் ஏறா
.....அன்னைத் தமிழை
அமணர் வகுத்த
.....அற்புத வழியில்
கம்பன் அல்ல
......காளையர் காப்பர்
நம்பன் முருகன்
.....நம்பி யாருமில்ல


மும்மொழியை வேண்டுவர்க்கு
......முக்கனியின் இனிமையை
செம்மொழியாம் தமிழின்
.....சுவையை கூறிடுவாய்
எம்மொழிக்கும் ஈடில்லை
.....என்னினத்தின் அடையாளம்
அம்மொழியே தமிழாம்
.....அதனால் வாழியவாம்

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...