ஞாயிறு, நவம்பர் 13

பிரிவின் வலி






திங்கள் கடந்தது
திருமுகம் காட்டி
எங்கே மறைந்தாய்
எனையே வாட்டி
தங்க நிலவே
தமிழே என்றரற்றி
செங்களம் சென்றாயோ
செல்வியை ஏமாற்றி

நினைத்த வுடன்எழ
நிருமலன் அல்ல
நினைவற்றுப் போக
நிலைமாறு பவனல்ல
உனையன்றி உலகில்
உறவேது மில்லை
வினையாய் கேள்விகள்
வீண்பழியை மாற்றுமோ

அறிவேன் காதலை
ஆயினும் பிரிவில்
குறிப்பை உணர்த்த
குறிஞ்சி அரசனுக்கு
அறிந்த மொழியில்
அடுக்கி வைத்தேன்
சிறியவள் துயரை
சீராக்க வாரீர்

தளராதே தங்கமே
தனிமை விலகும்
இளம்பிறை வளரும்
இன்பங்கள் பெருகும்
அளவளாவ அன்பே
அவ்வலித் தீருமடி
வளமான வாழ்விற்கு
வழித்துணை நீயடி

புதன், நவம்பர் 2

தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா

 





தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேவையை அதிலேச் சொல்லவா
வான்புகழ் வள்ளுவன் வழியே
வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா

ஏனென்றுக் கேள்வி கேட்காதே
என்னிணை நீயாக வேண்டவா
மான்போலத் துள்ளி மறையாதே
மச்சானின் மனம் மகிழாதே

ஆசையச் சொல்லி விட்டா
அச்சாரம் போட்ட தாகுமா
மீசைய முறுக்கிக் கேட்டா
மிதிலையின் ஜானகி ஆவேனோ

பேசிக் பழகிப் பார்க்கலாம்
போதிமர ஞானம் தேடலாம்
ராசியாகிப் போச்சு என்றால்
ரதிமதனா வாழ்வைத் தொடங்கலாம்

திங்கள், அக்டோபர் 24

தீபாவளி





புராணமோ
புனைந்தக் கதையோ
பொய்களின் மூட்டையோ
பொறுமையாய் கேளுங்கள்

வராக அவதாரத்தில்
பூமாத் தேவியை
தொட்டதால்
பவுமன் பிறக்கிறான்

அரக்கர்களை வென்ற கையோடு
அவளைத் தொட்டதால்
அவதாரத் பிறப்பிற்கு
அரக்க குணமாம்

குணத்தால்
அரக்கனென அழைத்ததால்
அவனுக்கொன்றும்
அச்சமில்லை

பிரம்மனிடம் -சகா
வரம் கேட்க
திருத்தி அளிக்கப்படுகிறது
ஈன்றவளால் இறுதி முடிவென

வராக அவதாரத்தில்
வசதியாய் தொட்டது
கிருஷ்ன அவதாரத்தில்
சத்யபாமாவால் சரிசெய்யப் பட்டது

தனயனென அறியாது
தன்னிணை காக்க
அசுரனை அழித்தாள்
தேவர்களை காத்தாள்

கதை முடிந்ததென
கடுகளவும் நினையாதீர்
கற்பனைகள் தொடரும்
காசியும் இராமேஸ்வரமும் இணையும்

திரேத யுக நாயகன்
திரும்புகிறார் கானக வாழ்விலிருந்து
தீபமேற்றி மகிழ்ந்தனராம் – மக்கள்
தீப ஓளி கதைகள்

2500 ஆண்டுகளுக்கு முன்
ஆணும் பெண்ணும் சமம்
அகிம்சை வாய்மையென்றும்
பற்றற்றிறு பாலுணர்வு துறவென்றும்

வடித்துக் கொடுத்த வர்த்தமானர்
வீடு பேறடைந்த நாளை
தீபமேற்றி வணங்கியதால்
திருநாள் அவர்களுக்கு

போதிமர ஞானம் போதும்
நாடாள வாவென்று - சுத்தோதனன்
நாலுபேரை அனுப்ப
நால்வரும் ஞானம் பெற

காலோதயன் எனும் அமைச்சன்
கபிலவஸ்துவுக்கு
சித்தார்த்தனை
அழைத்து வர

வறியவரும் தீபமேற்றி
வாழ்த்தட்டுமென்று
இருப்பவன் கொடுத்தான்
இருள் விலக மகிழ்ந்தான்

புத்தனின் வருகை
புத்தொளி அளித்ததால் – நாடு
திரும்பிய நன்நாளை
தீபஒளியேற்றிக் கொண்டாடுகின்றனர்

1577 ஓர் அடிக்கல் நட்டு
பொற்கோயிலை கட்டத் துவங்கினர்
அந்நாளை சீக்கீயர்கள்
தீபமேற்றிக் கொண்டாடுகின்றனர்

சக்தி சிவனோடு இணைந்து
அர்த்தநாரியாய்
காட்சி அளித்த நாள்
கேதார கௌரி விரதநாள்

மனிதனின் விழாவா
மதங்களின் விழாவா
மானுட வாழ்வில்
மகிழ்ச்சியுறு நாளா???? !!!!!!!!!!!

புதன், அக்டோபர் 5

செத்தப் பின்பு




கொள்ளிச் சட்டியும்
நெய் பந்தமும்
நீராட்டும் இல்லாது
நீத்த உடல் வேகாதா

எள்ளுத் தண்ணியும்
பிண்டமும்
படைக்காட்டா - பாவி
ஆவியா சுத்துவேனா

வாழும் போதே
வகைவகையாய்
யாகங்கள் செய்யாததால்
கர்மபலன்கள் கிட்டாதோ

நாளும் கிழமையும்
நம்மை நினைத்து
நாதியில்லா எனக்கு
திதி கொடுப்பார்களா

கதியற்று எனக்கு நானே
கயாவில் பிண்டமிட்டு
காசியில் காலமானால்
கண்டிப்பாய் மோட்சம் கிட்டுமோ

கடன் பட்டு
கல்விக் கற்று
அயல் தேசம் சென்றவன்
அன்னியமாகி போனான்

எடுத்து போடுவது
யாரென அறிவோமா? – ஆனா
அடுத்தடுத்து ஆசைகள்
நிறைவேறுமா?

செவ்வாய், அக்டோபர் 4

காதல் - நிலையானதா?




பாப்புனைந்து
பம்மாத்து செய்கிறாய்
பார்க்காமல் போனேனென்று
பழிச் சுமத்துகிறாய்

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்காதென்பதும்
இணையாதென்பதும்
இயற்கை நியதி

நிறைகளை ஒதுக்கி விட்டு
குறைகளைப் பட்டியலிட்டு
கறைப் படுத்தவில்லையென
கண்ணீர் வடிக்கிறாய்

புலவன்
பொய்யில் நெய்யொழுகுது
பாவையின் நெஞ்சம்
கல்லென்று கதைத்திடுது

முற்றுப் பெற்றதை
சற்றும் பொருந்தாதை
பாகம் இரண்டென
திரைக்கதை எழுதுது

நினைவுகள்
நீந்திதான் செல்லும்
கடந்துச் சென்றால்தான்
கரையேற முடியும்

வாழ நினைப்பவளுக்கு
வாடி நிற்க முடியுமோ
தடைகளைத் தகர்த்தால்தான்
தடங்களை விட்டுச் செல்லலாம்

பிரபஞ்ச வெளியில்
கானக வாழ்க்கை
அவைகளுக்கானது
நான் – அவள் - அதுவல்ல

திங்கள், அக்டோபர் 3

என்ன செஞ்ச





காதலி
கட்டிய மனைவி
பெற்றெடுத்த பிள்ளை
சட்டென்று கேட்கும் கேள்வி

அவளுக்கு
அது பிடிக்குமென்று
ஆசையாய் வாங்கிக் கொடுத்திருந்தாலும்
என்ன பெரிசா செஞ்சிட்ட

கல்யாண நாளென்று
கல் வைத்த அட்டிகையும்
கையளவு ஜரிகைச் சேலையும்
கட்டியவளோ - முகம் சுழிச்சிட்டா

கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தும்
பட்டம் படிக்க அனுப்பி வைத்தும்
இஷ்டம் போல் சுற்றிய
மகன் இக்கேள்வி கேட்டா

ஆணாதிக்க நாயகன்
சாதித்துதான் என்ன
தன்னாசைக்கு வாழ்ந்தா
தவிக்கவிட்டான் இவர்களை

இன்னும் இன்னும் என
எதிர்பார்க்கும்
இவர்களை
எதிர் கொள்ளவதெப்படி

ஞாயிறு, அக்டோபர் 2

காதல் நிலை




நித்திரையில்
சித்திரவதையில்லை
புத்தியும் பேதலிக்கவில்லை – இது
சத்தியமடி

ஒவ்வொருச் சொல்லுக்கும்
பல்வேறு அர்த்தம் கற்பித்து
பாடாய் படுத்தியவளே
திடமாய்தான் இருக்கிறேன்

உச்சரிக்கும் தொணியில்
உடைந்தே போவேன்
சஞ்சரிக்கும் ஆசையில்
சகித்துக் கொள்வேன்

உன் ஒவ்வொரு கோணலுக்கும்
என் வாடிய மனது
துறவறம் நாடாது
துன்பமின்றி இருக்குது

நினைவுகள் வாராமலில்லை – அவை
வினையாற்றுவதில்லை
ஏனைய எச்சங்கள்
எனை வாட்டுவதுமில்லை

இந்நொடியே
என் முன்னாடி
நீ தோன்ற நினைத்தக் காலம்
கடந்தக் காலங்களாயின

சந்தித்தே
சற்றேறக் குறைய
சிலபல காலமாயினும்
சஞ்சலமில்லை மனதில்

அவரவர் வாழ்க்கை என்றே
அன்னியப் பட்டு விட்டோம்
அன்றுனைப் பார்க்க நேரிட
அழகாய்தான் ஒளிந்துக் கொண்டாய்

கண்ணாமூச்சி ஆட்டங்கள்
காலங் கடந்தாலும்
காதலில் அழகுதான்
கணநேர மகிழ்ச்சிதான்

ஆர்பரித்த அன்பு
அடங்கிதான் போனதோ - அல்ல
ஆவல் இருக்கத்தான் செய்கிறது
ஆயினும் அவசரமில்லை

உனை நிந்தனைச் செய்ய – இக்
கவிதை வடிக்கவில்லை
நினை நினைத்த மனதை
ஆற்றுப் படுத்தும் நிலை







நமக்கு மீறின சக்தி






கடவுளா
கட்டிய மனைவியா
காலகாலமாய் தேடியும்
கண்டுபிடிக்க முடியாததா

என்னால் இயலாததை
அவனால் முடியுமாயென சிந்தியாது
ஏதோவொரு சக்தியென
ஏன் தீர்மானித்தேன்

புயல் மழையெனில்
பூட்டிய வீட்டைத் திறப்பதில்லை
வெயில் உச்சமெனில்
வீதியில் நடப்பதில்லை

மழைப் பொழிய
குடையோடு நடக்க
விடைக் கண்டவன்
மின்னலில் மாண்டால்

நமக்கு மீறின சக்தியென்றே
மூளை மழுங்கியிருப்பானா
நாளையே வேறொருவனை
மின்னலில் சாகக் கொடுப்பானா

அளவுக்கதிகமான
வெயிலும் மழையும்
பருவநிலை மாற்றமென
பகுத்தறிந்த மனிதன்

ஜடாமுடியில்
கங்கையை சுமப்பவன்
கமண்டலத்தில் சிக்கிய
காவேரியைத் திறப்பவனின்

கட்டுக்கதைகள்
புத்தியெல்லாம் நிறைந்திருக்க
நமக்கு மீறின சக்தியென
நயமாய் சொன்னானா?

ஐம்பூதங்களைக் கடவுளாய்
அச்சத்தில் ஏற்றாயா
அங்குசத்தில் அடங்காததால்
நமக்கு மீறின சக்தியென்றாயா

பெயரிட்டு அழைத்த புயலில்
சர்வ வல்லமையுள்ளவன்
நமக்கு மீறின சக்தியென
சாக்குச் சொல்லியாப் போனான்

கருந்துளைக்குள் நடப்பதை
கற்றறிந்தவன் தேடுகிறான் – அத்
தேடலின் ஈர்ப்பு விதியால்
கடவுள் காணாமல் போகிறான்

மானுட ஆற்றலுக்கு
பிரபஞ்ச இயக்கவியல்
நமக்கு மீறியதல்ல என்றே
நாளும் சொல்லுது









சனி, செப்டம்பர் 24

இலவசம்





வாக்குறுதியை வாரியிரைத்து
வாக்குச் சாவடியைக் கைப்பற்றி
வாகனப் படையோடு
வலம் வருபவனுக்கு

ஆட்சி அதிகாரம்
அத்தாட்சி பத்திரமா
ஆள்பவர் முடிதரித்ததும்
ஆலகால மாவதா

மறைமுக வரியாய்
மனிதனிடம் வசூலித்ததை
மானுடச் சமூகத்திற்கு
மடை மாற்றுவதா

அறுதிப் பெரும்பான்மை
அரசியல் கட்சிக்கில்லையெனில்
மக்கள் பிரதிகள் மொத்தமாய்
பச்சோந்தியாய் மாறுவதா

திறைச் செலுத்தும்
திடீர் பெருமுதலாளிகளுக்கு
வரியின் வரையறை
சரியில்லை எனக் குறைப்பதா

சமச்சீரற்ற சமூகத்தில்
சரிச்சமாய் உயர்ந்திட
பொருளாதாரத்தில் வீழ்ந்த
உயர்சாதிக்கு இடஒதுக்கீடு அளிப்பதா

அன்றாடங்காச்சி
ஐந்துக்கும் பத்துக்கும்
அன்றாடம் உழைத்தும்
அதோகதியாய் நிற்பதா

அதானி அம்பானியின்
5 இலட்சம் கோடி
10 இலட்சம் கோடியாய்
ஓராண்டில் மாறுவதா?

கணக்கு வழக்கு
பிரதம நிதிக்கா
உனக்கு தேவையில்லாதது என
உரக்க சொல்வதா

நிதியை நிர்வகிக்க
பதியாய் வந்தவர்கள்
குதியாய் குதிக்கறார்கள்
பணம் அவர்களுடையதாம்

ஆதாரை இணை - எரிவாயு
மான்யம் கிடைக்குமென்றார்கள்
விட்டுக்கொடு என்றார்கள்
விலையேற்றமே கண்டோம்

ரோட்டோரக் காய்கறிக் கடையும்
டிஜிட்டிலில் பளபளப்பதாய்
பே – ட்டி - எம், போன் பே யும்
பேட்டி அளிக்கின்றன

இரண்டு சட்டைக்கு
ஒரு சட்டை இலவசம் - இது
வியாபாரத் தந்திரம்
வீழ்வது விட்டில்கள்

குடிக் காப்பது
அரசின் கடமை
குடிக்கக் கொடுத்து
வருவாய் பெருக்குவது

வரி வசூலை
பிரித்தளிப்பது உன்வேலை
தரித்திரனாய் மக்களை
பிரித்து வைத்திருப்பதோ

சுகாதாரமாய் வாழ
மருத்துவ வசதி
சுயமரியாதையோடு வாழ
யாரிடமும் கையேந்தாமல்

ஒண்டக் குடிசையும்
கற்கக் கல்வியும்
உழைக்க வேலையும்
ஒவ்வொருக்கும் இருந்தால்

தாலிக்குத் தங்கம்தான் கேட்போமா
தமிழகம் அரசிடம்
காட்டில் ஒரு வீடுதான் கேட்போமா
ஒன்றிய ஆட்சியிடம்

ஞாயிறு, செப்டம்பர் 18

மரணம் எந்த நொடி



எந்த நொடி
எந்த நிமிடம்
எந்த நாள்
எங்ஙனம் அறிவேன்

மரணத்தை யோசிக்கிறேன்
மாறும் உலகில் - மாறுமோ,
மறுதலிக்குமோ
மானுட வாழ்வு

மன அழுத்தங்கள்
மரணத்தை யாசிக்கின்றன
ஆசைகளின் ஓட்டத்தில்
மாத்திரைகள் நீட்டிக்கின்றன

சுகமான மரணம்
எங்ஙனம் நிகழும்
சுவாச வலியின்றியா
சுற்றியிருப்பவர்களுக்கு வலியின்றியா

உடல் உபாதைகளும்
திடமற்ற மனதும்
கடமைக்கு வாழாது
கானகத்தை நாடுதோ

போதுமா வாழ்க்கை
மோதுகின்ற கேள்வியில்
வாதிடுகின்றன – வாழ்வு
உனக்காகவா அல்ல குடும்பத்திற்கா

நீயில்லா உலகில்
நீடித்திருக்கும் குடும்பம்
தீயில் வெந்திட
தேடுகிறாயோ காரணங்கள்

நீதியும் நேர்மையும்
உனக்கானதல்ல
சாதிச் சமூகத்தின்
ஆதிக்கச் சொல்லாடல்கள்

சேர்த்தச் சொத்துக்கள்
சோர்ந்திராதே எனச் சொல்லுமோ
ஆர்பரித்த அன்பு
அடுத்த வேளையை நோக்குமோ

போதித்தப் புத்தனும்
பூமிக்குள்ளே
சாதித்த மன்னனும்
சமாதிக்குள்ளே

அறிவியல்
அறிவை வளர்க்குமா
அறியா மரணத்தை
ஆராய்ச்சி செய்யுமா

நாற்பதாண்டு வாழ்வை
எழுபதாண்டிற்கு நீடித்தது
ஏற்பதா மறுப்பதா
யார் தீர்மானிப்பது

உலகின் முதல் செல்வந்தனா
உலகின் முதல் ஏழையா
அவரவர் மனமெனில்
அவர்களின் மனநிலை

மனநிலைக் காரணிகள்
மரணத்தை யாசிக்கின்றன
புறநிலைக் காரணிகள்
பூபாளத்தை நேசிக்கின்றன

பருவநிலை மாற்றங்கள்
பாடம் நடத்துகின்றன
உருவமற்ற, உருவமுள்ள
கடவுளும் மாண்டு போகின்றன

மூப்பது வந்திட
முடங்குவது உடலா
கடந்து செல்லும் வாழ்வில்
காப்பதும் கடவுள்ளில்லையா

உற்ற உறவுகள்
உறுதுணையா
பற்றற்றிரு எனும்
பட்டினத்தான் போதனையா

மரணத்தின் சிந்தனைகள்
மாறி மாறி வந்துச் செல்ல
இரணங்களா
இல்லாத காரணங்களா

இயங்கும் உலகில்
இவை மனப்பிறழ்வென
இனம் காணுவோமா
எக்கேடுக்………… செல்வோமா

கற்றதனால் ஆன பயன்
கடவுளைத் தொழுவதா
மற்றதனால் மரணத்தை
மாற்ற முயல்வதா

தேடல் முடிந்ததா
தேவை முடிந்ததா
வாடிய உனைக் கண்டு
வாட ஒருவருமில்லையோ

நூறாண்டு வாழ்வு
நூலாகி போனதே
ஐம்பதை தாண்ட
அவ்வாழ்வும் சலித்ததே

ஞாயிறு, ஆகஸ்ட் 28

சுதந்திரம் 75 ஆம் ஆண்டில்

 





முதன் முறையாக
உத்திரபிரதேசத்தின் ஒரு கிராமம்
மின்னொளியை கண்டது


முதன் முறையாக
தமிழக கிராமம் ஒன்றில்
பேரூந்து வசதி கிடைத்தது

முதன் முறையாக
ஊராட்சியில் தலித் ஒருவர்
தேசியக் கொடியேற்றுகிறார்

முஸ்லிம் பிரதிநிதி
ஒன்றிய அமைச்சராய்
அங்கம் வகிக்காத திருநாளாயிற்று

சுயச்சார்பு என்பது
இந்தியத் தேசியக் கொடியை
சீனாவிடம் வாங்குவதாய் ஆனது

சுதந்திரந்தின் போது ரூ. 3.31 இருந்த
ஒரு டாலரின் மதிப்பு
வளர்ச்சியடைந்து ரூ.79.87 ஆனது

75 ஆண்டுகளில் உருவான
தேசத்தின் கட்டுமானங்கள்
நட்டக் கணக்கில் விற்பனை

ஈஸ்ட் இன்டியா கம்பெனி
அம்பானி அதானி கம்பெனியாக
பெயர் மாற்றமடைந்திருக்கிறது

அக்மார்க் தேசபத்திக்கு
கொடியேற்றுங்கள் வீடுதோறும்
முடிவற்ற விலையேற்றத்தை மறந்திருங்கள்

ஞாயிறு, மார்ச் 27

தேவதையின் தீர்ப்பு







வேண்டா மென்பதை
வேர்விட்ட பின்பு அறிவிக்க
ஆண்டியா மாறியே
அருகன் நிழலில் நிற்பேனோ
தீண்டா நிலையில்
திக்கற்று சரணடை வேனோ
மண்டா போவேன்
மார்க்க முண்டு புதுபிக்க


பட்டங்கள் கொடுத்தே
பராக்கிரமப் பாண்டிய னென்றாய்
வட்டத்தில் வாக்கப்பட
வரிசையில் வில்லேந்தி வந்தாலும்
திட்டத்தில் நாமில்லை
தீர்த்துச் சொன்ன தேவியே
தெட்டலல்ல தெளிவென்றே
தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பே


வற்புறுத்த - வரமளித்து
வசந்தனை காத்தரு ளினாயோ
அற்புதங்கள் நிகழாதென
அந்தபுரத் திடமில்லை என்றாயோ
கற்பிதங்கள் அவரவர்
கனவுகளால் கானல் நீராக
புற்பதமாய் ஆனதே
புட்பகேது புவனம் அழிந்ததே


ஆர்பரித்த அன்பு
ஆரிடம் தோன்றிய தென்றே
கூர்வாளால் கேட்கிறாய்
குற்றப் பத்திரிக்கை வாசிக்கறாய்
ஊர்முழுக்க அறியுமே
உத்திர வாதமில்லை என்றா
தீர்ந்தது கணக்கென
தீர்பெழுதி விட்டாய் தேவதையே


உதட்டில் அன்பும்
உள்ளத்தில் கபடமும் கண்டேன்
எதற்கிந்த வேடம்
எந்தன் கைபேசியும் தடைபடுதே
பதரால் பயனில்லை
பக்குவமாய் தவிர்ப்போ மென்று
இதமாய் இங்கிதமாய்
இயல்பாய் உணர்த்தி வைத்தாய்


மறக்க முடியுமா
மானுட மன்றோ முடியாதே
சிறந்த நினைவுகள்
சித்திரமா தொடர்ந்து வருமே
அறமல்ல என்றால்
ஆகட்டும் கண்ணே பார்க்கிறேன்
பிறழாது இருக்கவே
பிரபஞ்சத் துர்வாசனைத் தேடுகிறேன்


விதையும் துளிராய்
விளைந்த அன்பும் தளிர்க்கும்
கதைத்த காலங்கள்
காதலின் கடந்த காலமாகும்
வதைக்கும் வார்த்தைகள்
வடுவாய் மனதைச் சிதைக்கும்
எதையும் தாங்கும்
எஞ்சிய வாழ்க்கை இரவலாகும்





செவ்வாய், மார்ச் 1

காசுக்கு நீரோ







கமலையில் இறைச்சநீர்
கால்வாயில் பாய்ந்தோட
கைகளால் பருகிடுவோம்
காய்ந்த தொண்டையை நனைத்திட

ஏனோத் தெரியல
தேனாய் இனித்திடும்
பானையின் தண்ணீர்
நஞ்சென நம்பிய தெப்படி

வானம் பொய்த்தாலும்
சுனையில் சுரந்திருக்கும்
அனைவரையும் காத்திருக்கும்
வினையாய்(தொழில்) ஆனதிப்போ

அமெரிக்க கம்பெனி
அஃகுவாபினா, கின்லே
அடைத்து தரும் நீரிலே
ஆரோக்கியம் அடங்கியிருக்கா

கற்பிதங்கள் உண்மையென
கற்றறிந்தோர் ஏற்பதால்
காசுக் கொடுத்து
காலாவதி நீரை வாங்குவதா?

தாமிரபரணியும் சிறுவாணியும்
தமிழகத்தின் தேனாறுகள்
ஆள்துளையிட்டு அவர்கள்
கொள்ளையிடக் கானலாச்சோ

உன்வீட்டு நீருக்கு
உன்சட்டைப் பையில்
காசெடுக்கும் உரிமையை
கார்ப்பரேட்டுக்கு கொடுத்ததாரோ

நீரும் நிலமும்
நஞ்சாய் மாறிப் போக
ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த
எட்டப்பர்களின் பேராசையா

வளர்ச்சி தேசத்தின்
வளங்களை அழித்தா
வருங்காலச் சந்ததியை
வருத்தாதிருக்க

புத்தனாக மாறென
பூச்சாண்டிக் கூவல் இதுவல்ல
மானுடச் சமுகத்தில்
விலங்காய் மாறாதிரு

 


வெள்ளி, பிப்ரவரி 4

ஒன்றிய பிரதிநிதியின் துரோகம்

 



தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, வெகுஜன மக்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு மசோதாவை அனுப்பினால் ஆறு மாதங்கள் காலம் தாழ்த்தி ஏற்க முடியாது என்பதோடு மட்டுமல்ல உண்மைக்கு புறம்பான காரணத்தை சொல்லி  ஒன்றிய பிரதிநிதி திருப்பி அனுப்புகிறார்.

நீட் தேர்வை கிராமபுற மற்றும் அரசு மாணவர்கள் வற்வேற்கிறார்கள். அவர்கள் அதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

7.5 சதவீத ஒதுக்கீடு தேர்தலுக்காவும், 20 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்பாலும் பெறப்பட்டது. அவ்வொதுக்கீடை இப்போதும் தொடர்வதால் நிராகரிக்க இயலாது.

நீட் தேர்வில் இம்முறை வெற்றிப் பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மத்திய கல்வி முறையில் (CBSE) பயின்ற மாணவர்கள் முதல் 600 பேர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அரசு மாணவர்கள் ஒதுக்கீடு மூலமே பயனடைந்துள்ளனர்.  ஒதுக்கீடு இல்லையெனில் அவர்களுக்கு இந்த வாய்ப்பும் பறிபோயிருக்கும்.

ஒன்றிய பிரதிநிதியின் துரோகத்தால் அரசு தன் முடிவை இப்படி மாற்றிக் கொள்ளலாம்.  மத்திய கல்வி முறைக் கல்வி, மாநில அரசு கல்வி முறையில் பயின்ற மாணவர்களை விகிதாச்சார முறையில் தேர்ந்தெடுக்கலாம். அதாவது மாணவர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில்.

இப்படி செயல்படுவதால் ஒதுக்கீட்டின் சதவிகிதம் அதிகரிக்கலாம்.

இதையும் கடந்து கல்வி வியாபாரம் என்றான பின் அதன் கட்டணங்கள் அதிகமாகதான் இருக்கிறது.  98 = 55,50,00,000  என்பது நாட்டின் வளத்தைக் காட்டுகிறது.  அப்படிதான் கல்வியிலும்.

மற்ற இலவசங்களைக் காட்டிலும் எந்தக் கல்வியையும் இலவசமாக கிடைக்கச் செய்தால் நீட் தேர்வுகள் தேவையில்லைதான்.

 

மருத்துவக் கல்வியின் ஒரு ஆண்டு கட்டணங்கள் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இப்படி இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி                                15000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு     600,000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% நேரடி ஒதுக்கீடு   20,00,000

தனியார் நிகர்நிலை பல்கலைகழங்கள்                   25,00,000

 

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு ரூ. 10 லட்சமாக இருக்கிறது. அரசு கல்லூரிக் கட்டணம் தவிர்த்து மற்ற தனியார் கல்வி கட்டணங்கள் ஏறக்குறைய ஒன்றே. ஒரு பாடத்தை ஒரே வகுப்பில் வேறு வேறு மாணவர்கள் இம்மாதிரி கட்டணம் செலுத்தி படிப்பதே இன்றைய மருத்துவக் கல்வி. இலவச தரிசனம் முதல் ரூ 200 வரை கட்டணம் பெற்று தரிசனம் தரும் கடவுள் உள்ள நாட்டில் இப்படிதான் கல்வியும்.  மக்கள் அதற்கு அடிமை. கல்விக்கு மௌனியாக கடந்துச் செல்கிறார்கள்,

இதற்கு தீர்வு காணாமல் நீட்டிற்கு தீர்வு காண்பது பெரிய வெற்றியல்ல.

இது மட்டுமல்ல. நாமக்கல் பிராய்லர் கோழிகள் மன்னிக்கவும், மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள். மத்திய மாநில வழி கல்வியானாலும் அங்கே வகுப்புகள் A to Z மட்டுமல்ல AA to Az வரை நடைப் பெறுகிறது. கட்டணம் ரூ 2-3 இலட்சங்கள் நீட் பயிற்சிக்கும் சேர்த்து.

ஆக கல்வி என்பது மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட வேண்டும். கொள்ளையடிப்பவர்களுக்காக அல்ல

வியாழன், பிப்ரவரி 3

காதலி கண்பாரடி

 


காதலி கண்பாரடி
காதலில் வாடுமெனை
சாதக வார்த்தையால்
சக்திமா னாக்கடி
வீதியில் சுற்றுமெனை
விரைவில் காத்திடு
ஆதியில் ஏவாளும்
அங்ஙனமே செய்தாளடி

காதலர் தினமா
காத்திருக்கும் எனக்கேதடி
நாதமோ வேதமோ
நாளும்நின் அருளடி
ஆதலால் அன்பே
அடியவனை ஏற்பதாய்
சாதகப் பதிலை
சங்கேதமாய் உணர்த்தடி

காத்திருக்க வைப்பதா
காதலியுன் சோதனை
பூத்திருக்கும் அன்பினை
புற்பதமாய் எண்ணிட
யாத்திருந்த பாக்களா
யாசகனின் உத்தியா
சாத்தியத்தை உரைத்தால்
சட்டென ஏற்பேனே


மொட்டுக்கள் பூவாக
மோனநிலை யிருக்கு
மெட்டுக்கள் நீயிட்டு
மெய்நலம் கூறாதே
கட்டுக்கள் தளர
காயங்கள் வருமே
சிட்டுக்கள் பறப்பது
சிறையில் அடையவா

விட்டுச் செல்லவா
விருப்பம் சொன்னேன்
எட்டிச் செல்லாதே
என்னினிய காதலே
விட்டிலாய் வீழவா
விழுதுவிட்டு வாழவா
திட்டமிடு பெண்ணே
தீர்ப்பை வழங்கிடு

பிழைகள் இல்லையடி
பிடித்தால் இணைவோம்
தழைத்தல் இயல்படி
தகுதலாக்கு மனதினை
உழைக்கும் உறுதியுண்டு
உறுதுணையாய் நீயுண்டு
அழைத்துக் கொள்ளேன்
அறத்தோடு வாழ்வோம்

ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்த தையிலே
மேகங்கள் மறையலாம்
மேற்திசைக் காற்றிலே
பாகமான வாழ்வில்
பாதியில் கைவிட்டு
போகவாழ்வு வீண்னென்ற
பட்டினத்தான் அறிவாயா

ஞானியாய் மாறவா
நாயகியை நேசித்தேன்
ஏனிந்தச் சிந்தனைகள்
என்றென்றும் பூசிப்பேன்
நானிலமும் வியந்திட
நன்றாய் வாழ்ந்திட
ஆனிப்பொன் அழகே
அத்தானை நினைத்திடு


புதன், ஜனவரி 26

உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

 




 



தூற்றலை மறந்து
தூயவளை நினைக்க
வேற்றலம் தீண்டிட
வேடிக்கை ஏனடி
மாற்றம் நிகழுமடி
மற்போரில் அல்ல
ஏற்றத்தில் உரைப்பேன்
என்தேவி நீயே



மன்றலில் இணைந்து
மாயத்தை வெல்ல
அன்றில் என்றே
அகிலம் போற்ற
தென்றலும் ஏமாந்து
தென்னையில் அமரும்
அன்றென் அன்பின்
ஆழத்தை உணர்வாய்



உலகை இயக்கும்
உன்னதக் காற்றோ
விலகா திருக்கும்
வேலவன் மாற்றோ
நலமே விழையும்
நாயகன் நானடி
அலாபமே அவ்வுரு
அடிக்கடி மாறுமே



திண்ணியன் அருகிருக்க
தென்மலைத் தென்றல்
எண்திசை சூழ்ந்தாலும்
எல்லையில் நிறுத்திடுவேன்
பண்ணிசையில் தூதை
பக்குவமா அனுப்பினாலும்
கண்ணேயுனைத் தென்றல்
தீண்டவும் விடமாட்டேன்

சனி, ஜனவரி 15

ஆக்ரமிப்பு


 

அன்றாடங் காய்ச்சியாய்
அரைவயிற்றுக் கஞ்சிக்கு
அவ்வீதிவழி – தள்ளுவண்டியில்
காய்கறி விற்போம்

அகிலஉலகப் பணக்காரன்
அம்பானி அன்றாடங்காய்ச்சியா
அரை வயிற்றுக்காரனோடு
அவனுகென்னப் போட்டி

பாதையோரம் துணிவிரித்து
பலபேர் கேட்கக் கூவி
பட்டினியப் போக்க
கூறுக் கட்டி வித்தோம்

“ரோட் ஷோ“ என
“ஜியோ சிம்“ விற்று
போட்டியை திவாலாக்கியவன்
தெருவுக்கு வாரான் யாரைத் திவாலாக்க

கொட்டிக் கிடக்கும் பணத்தால்
நட்ட விற்பனை செய்ய வாரான்
இலவசம் இலவசம் எனக் கூவ
இளித்துக் கொண்டு செல்வாயா?

வீதியின் கீரைக்காராம்மா
பால், தயிர் காரம்மா
இவர்கள் காணாமல் போக
“ரிலையன்ஸ்“ காரணமா

தெருவுக்குத் தெரு
திக்கெட்டு மிருந்தக் கடைகள்
“அமேசான்” “பிளிப்கார்ட்”டால்
அதோகதியான கதைகள் - மறந்தாயா


வீதிக்கு வாராதே
விழுங்கிடும் கொரோனா
வாசலுக்கு வாரேன்
வசதிப்படுமென்கிறான்

நேற்று வரை
வாசலில் விற்றவன்
“ரிலையன்ஸ்“ சட்டையணிந்து வாரான்
பழகிக் கொள்ளாதே மானிடா

குஜராத்தி பனியாவிற்கு
கொத்தடிமையாய் மாறாதே
உன்ஜாதி உழைப்பது – அச்சாதி
பணத்தை விதைப்பது 

உள்ளுர் மண்ணில்
உனக்காக விளைந்ததை
உன்னினம் விற்கட்டுமே
உறவுகள் வாழட்டுமே

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...