புதன், நவம்பர் 9

பரிசோதனைக் கூட எலிகள்


அறுபத்தி நான்கு கூறு
முப்பரிணாம வடிவம்
மூச்சிருக்கும் பையை
முற்றிலும் அறிந்திட
ஆறறிவு மனிதனின்
அறிவியல் கண்டுபிடிப்பு

சமச்சீர் சத்துணவு
சமமாய் அனைவரும்
சாப்பிடாததால்
ஊட்டச் சத்து குறைவுக்கு
சத்துணவு திரவமாய்
அதுவொரு கண்டுபிடிப்பு

நுண்ணுயிர் கிரிமியின்
நூதன நோயால்
நொந்து கொண்டிருக்க
மரபறிந்து மருந்துகள்
மாமனிதன் கண்டுபிடித்தான்

எட்டும் நோயெல்லாம்
எட்டாது வைக்க
எல்லோராலும் இயலையே
துட்டு இருப்பவனக்கு
தூரமாயும்
ஏதுமில்லாதவனக்கு
எமனாயும்

கண்டுபிடிப் பெல்லாம்
காசுள்ளவனுக்கே
காசு பண்ண
களம் வேண்டும்


களப்பணி செய்ய
கயவர்கள் வேண்டும்
கயவர்கள்
நல்லவர்களாக வேண்டும்

ஆரூடன் பார்பவனும்
ஆண்டவனை நம்புவனும்
அடுத்து நம்புவது
மானுடம் காக்கும்
மருத்துவனை

இரண்டு நான்காகும்
நான்கு எட்டாகும் – கணக்கிலே
இன்றே கோடிஸ்வரனாக……..

இளநிலை முடிக்க
இருபது இலட்சம்
முதுநிலை செல்ல
முக்கால் கோடி
முன்பின் பட்டயம் சேர்க்க
பின்னும் சில லட்சம்

அத்தனையும் ஆனபின்பு
அயல்நாட்டு பட்டயம்
அறிவிருக்கு என்பதற்கு
அதுவொரு சான்று

இத்தனையும்
எடுப்பது எப்படி –திரும்ப
எடுப்பது எப்படி
கனவுற்றிருந்தேன்

கதவு தட்டுமோசை
காத்திருந்த நோயாளியோ
அல்ல
காசளப்பதாக வந்தானொருவன்
கடைசியாய்
கமிஷன் தருவதாக சொன்னான்

வழி கிடைத்தது வாழ
வட்டி கிடைத்தது அசலுக்கு
அடுத்தோர் ஓசை
ஆம். நோயாளியேதான்

தலை சுற்றலென்றான்
தடுமாற்றாம் என்றான்
பழக்க வழக்கம்
பரம்பரை தன்மை
பலவும் கேட்டேன்

எதோதோ எழுதினேன்
எனினும் ஒரு
சிடி ஸ்கேன்
எழுதிக் கொடுத்தேன்

அச்சடித்த ஒரு தாளில்
வகைவகையாக
சோதனை முறைகள்
அதிலிருக்கும் விலாசத்தில்
அதனை செய்திட
அறிவுறுத்தினேன்

அப்படியே ஒரு
அறிவிப்பும் செய்தேன்
அவசரமில்லை
பணம் வந்தவுடன்
செஞ்சிட்டு வாங்க
அதுவரை – மருந்து
சாப்பிடுங்கள்

வலியின் தன்மை அறிய
வட்டிக்கு வாங்கியாவது
சிடி ஸ்கேன் எடுத்திடுவான்
பிறகே தூங்கிடுவான்

ஒன்றுமிலை
என்றொரு செய்திக்கு
மூலதனமிட்டவனக்கு
முக்கால் பங்கு

முக்காலுக்கு வழி
சொன்ன எனக்கு
கால் பங்கு –

எனவே நீங்கள்
பரிசோதனை எலியல்ல
படியளக்கும் தெய்வம்


குறிப்பு நேர்மையற்ற மனிதர்களை கண்டதால் இவ் வரிகள், நேர்மையுள்ள மனிதர்களையும் கண்டிருக்கிறேன்.  அவர்கள் மன்னிக்க

செவ்வாய், நவம்பர் 8

அணுவும் கோமாளியும்

ஆரூடம் சொல்ல
  அரசவை கோமாளி வந்தார்
போரிடும் மக்கள்
  போக்கை மாற்றிட சொன்னார்
மாறிடும் உலகின்
  மகத்துவம் அணுஉலை என்றார்
நேரிடும் இழப்பை
  நிகழா என்றுரைத்து சென்றார்

வளர்ந்த நாடுகள்
  வகைமாறி மின்சாரம் தயாரிக்க
வளரும் இந்தியாவில்
  வாய்த்தது அணுஉலை என்றே
தகைசால் அமைச்சரும்
  தருமமிட்ட ருஷ்யாவும் சாற்றிட
முறையா முடங்கிட
  முதலாய் புறப்படு எதிர்த்திட

பொருளாதார தடையென
  பொல்லா எச்சரிக்கை மக்களே
அருள்வேண்டி அன்னிய
   அரசை அண்டிட தேவையோ
இருள்விலக சிக்கிமுக்கி
  இன்னும் சிலவழி யுண்டு
மருளா திருந்தால்
  மானுடம் செழித்திடு மிங்கு
  
பேரிடரென்று  பேரிகையிடு
  பெரிய போருக்கு தயாராகு 
கூறட்டும் அணுகுப்பை
  கொட்டுமிடம் எங்கே யென்று
தடங்கல் அணுவுக்கென
  தரணி யெல்லாம் முழங்கு
கூடங்குளம் குறியீடாய்
  கொள்ளட்டும் உலக மிங்கு

திங்கள், நவம்பர் 7

6 ஆம் அறிவு

தோழர் கலையரசனின் 7 ஆம் அறிவு திரை விமர்சனம் படிக்க நேர்ந்தது.   வலையில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இத்தோழருடைய விமர்சனம் ஆதாரங்களுடன் உண்மையாக தெரிந்தது.  விமர்சனத்தை படிக்காதவர்கள் 7 ஆம் அறிவு விமர்சனம்  இங்கு சென்று விமர்சனத்தை விரிவாக பார்க்கவும்.

அதன் ஆதாரமாக சீன மொழியில் ஏற்கனவே வந்த திரைபடத்தை இதில் காணவும் போதி தர்மர்- சீனமொழிப் படம்


வியாழன், நவம்பர் 3

ஆனந்தம்

மகளையும், மகனையும் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தேன்.  மகள் சொன்னாள், I am happy மகன் சொன்னான் I have bad news.    என்னவென்று கேட்டேன்.

மகள் சொன்னாள் அவளுக்கு மதிப்பெண் பட்டியல் கொடுத்துள்ளதாகவும் ஆனால் பெற்றோர் கையொப்பம் தேவையில்லை என ஆசிரியர் சொன்னதாகவும் ஆனால் அப்பட்டியலை பெற்றொரிடம் காண்பித்து இரண்டு நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார்களாம்.

90 க்கும் குறைவாக மதிப்பெண் எடுக்கும் போது இரண்டு நாட்கள் தள்ளி கையெழுத்து போட்டு அடுத்த தேர்வில் கூடுதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற உறுதி மொழி பெற்று கையொப்பம் இட்டு வந்தேன் கடந்த ஆண்டு வரை. இந்த ஆண்டு நிலை என் மகள் மகிழ்ச்சியோடு இருக்கிறாள்.

படிப்பு என்பது ஒரு துன்பமான நிலை என்பதால் இந்த மகிழ்ச்சி என நினைக்கிறேன்.

மகனுக்கு Reading Exam (படித்தல்),  அவன் சரியாக படிக்காததால் 'C'  Grade   அளித்தார்களாம்.  அது எனக்கு கெட்ட சேதி,

ஆம் அவனை படிக்க பழக்க வேண்டும்

சனி, அக்டோபர் 29

புரட்சி


புரட்சித் தலைவர்
புரட்சித் தலைவி
ஆம் உங்களுக்கு
புரட்சி தெரியும்

வச்சாத்தியும்
மகாமக குளமும்
பரமக்குடியும்
நேற்றின்றைய புரட்சிகள்

லிபியாவிலும்
புரட்சிப் படை
42 ஆண்டுகள் ஆட்சியை
அகற்றியது

புரட்சியால்
புதிய உலகமானதோ
மாற்றங்களால்
மக்கள் மகிழ்ந்தனரோ

குமுதம், ஜூவி.போல்
சன், மிரர், கார்டியன்
நேட்டோவின், அமெரிக்காவின்
புகழ் பாடின

ஊழல் செய்தாலும்
போலீஸ் கொன்றாலும்
சட்டம் ஒழுங்கும்
மனித உரிமைகளும்

காக்கப்பட்டதாக
காகிதத்திலும்
காணொளி செய்திகளிலும்
நீலிக்கண்ணீர் வடித்தனர்

போர் முடிந்தது
செய்திகளும் முடிந்தது
ஆனால்
உண்மைகள்

கஷ்மீரத்திலும்
இலங்கையிலும்
லிபியாவிலும்
நுகர்வு பொருள்- பெண்கள்

ஆப்ரிக்காவின் வடக்கு
அரபுகளின் தேசம்
ஆயினும் கருப்பர்கள்
அத்தேசத்தை கட்டியமைத்தனர்

புரட்சியால் கருப்பர்கள்
புலம் பெயர்ந்தனர் – ஆம்
பாப்பாத்தியின் ஆட்சியில்
சூத்திரர்கள் வாழ முடியுமா?

அகதி முகாமென்பது
பெண்களுக்கானது
வீரப்பன் வேட்டையில்
வச்சாத்தியும் அப்படியே

போரிலும்
போருக்கு பிந்தியும்
துப்பாக்கி முனையில்
பெண் போகப் பொருளானாள்

போருக்கு பிந்திய
லிபியா
புரட்சியின் தலைமையிலிருக்கும்
தமிழகம்

போர்டும், ஹுண்டாயும்
போட்டியிடுவதை போல்
அமெரிக்க, சீன
எண்ணை நிறுவனங்கள்

அம்பானியை கண்டுபிடிக்கலாம்
அங்கொரு கையாளாக
அள்ளஅள்ள குறையா
எண்ணையை சூறையாட

என்ன செய்வோம் தமிழர்களே
லிபியாவும் தமிழகமும்
ஒன்றென
நிம்மதியாய் தூங்குவோம்








வியாழன், அக்டோபர் 27

மாயக்கல் மோதிரம்


அயல்நாடு சென்று
ஆயிரமாயிரம் சம்பாதிக்க
அதிர்ஷ்ட மோதிரம்
ஆவண செய்தால்
அவனவன் ஏழையாயிருக்க
ஆமோதிப்பானா

மலடியென பேரெடுக்க
மானுடம் விரும்புமா
மாயக்கல் மோதிரம்
மழலையை வழங்குமென்றால்
மாதர்தான் எதற்கு-திரு
மணம்தான் எதற்கு

செவ்வாய் என்பது
நாளும் கோளூமாகும்
வருவாய் தேடுபவர்க்கு
தோஷமாகும்
இயலாமைகளுக்கு – அது
மற்றொரு வேஷமாகும்

காணி நிலம் வாங்க
கல் மோதிரம்
கருணையளித்தால்
பராசக்தியிடம் வேண்டிய
பாரதி கூட
பாதை மாறியிருப்பான்

வீடு கட்ட
வேண்டும் பணம்
வேதனையப்பா – இதில்
வேகத்தடையாம்
விலக்குதாம்
விவராமான மோதிரம்

தொழிலில் தேக்கமெனில்
தவறுகள் ஏதுமிருக்கலாம்
மோதிரம் அணிந்து
மொட்டை போடுவாயா
தவறை திருத்தி
சாதனை செய்வாயா

வாழ்க்கை துணைத் தேட‘
வண்ணகல் மோதிரம்
வழி செய்யுமென்றால்
வரதட்சணை எதற்கு
விவாகரத் தெதற்கு-அட
வாலிப மெதற்கு

அவனிவன் அணிந்து
ஆகாவென்று ஆனான்
அதெல்லாம் கட்டுக்கதை
அந்த மோதிரம்
விற்ற கடை
அதோ கதியானது
தனிக்கதை





திங்கள், அக்டோபர் 24

இயல்பாய் இருத்தல்

நீ இருப்பதை
நான் உணராமல் போனேன்

வீடு என்னவோ
மகிழ்ச்சியாகதான் இருக்கிறது

குழந்தைகள்
குதுகலித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆயினும்- ஓர்
அன்னியம் வீட்டில்

உன் குரலோசை
குயிலாக இல்லை

உடலசைவுகள்
உள்ளத்தை சொல்லவில்லை

கேலி பேச்சுக்கள்
காணவில்லை

இணைந்துண்ணும்
இன்பம் இல்லை

உனக்காவோ எனக்காகவோ
எந்த பேச்சுமில்லை

பணிக்கு வழியனுப்பும்
பாங்கு மாறிவிட்டது

ஊடலும் கூடலும்
ஒதுக்கி வைக்கப்பட்டது

உன்னியல்பு மாறவில்லை என
உற்றார் உறவினர் புகழ்ந்தனர்

நானும் அறிவேன்-ஆயினும்
மாறிதான் இருந்தாய்

விருந்தோம்பலின் பொருட்டு
விடுமுறை அளித்தாயோ

திங்கள், அக்டோபர் 17

உலகம் விழிக்கிறதோ?

அமெரிக்காவில் டைம் ஸ்கொயரில் மக்கள் திரள், ஐரோப்பாவில், ஆசியாவில் என மக்கள் அங்காங்கே திரள்கிறார்கள்.  ஆம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி நீண்டு கொண்டிருக்கிறது என்பதற்காக.

காரணம் கண்டு பிடித்து விட்டார்கள் மக்கள். முதலாளித்துவத்தின் பேராசை.
ஆனால் சரியான தலைமையில்லை வழி நடத்த.  தள்ளுமுள்ளுவோடு முடிந்து விடும் போல் உள்ளது இந்த போராட்டம்.

பங்கு சந்தைகள்தான் காரணம், பணத்தை இழப்பதற்கு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.   அதனால்தான் அதைச் சுற்றி போராட்டம்.  ஆம் சும்மா இருந்து சம்பாதிக்க ஆசைப்பட்டால், ஏமாற்ற ஆட்கள் கிளம்பி விடுகிறார்கள்.

எனினும் பேராசை விடப் போவதில்லை.  போராட்டம் ஓய்யபோவதில்லை

வெள்ளி, அக்டோபர் 14

இந்தியா 12வது இடத்தில்

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இந்தியாவிற்கு 12வது இடம்.    (High Networth Individuals) HNIs  நாளுக்கு நாள் அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்கள் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏழைகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது 2008-09 காட்டிலும் 2009-10 ல் அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையோடு சொத்து மதிப்பும் 22%  உயர்ந்துள்ளது.  அதாவது 477 பில்லியன் டாலராக இருந்த சொத்து மதிப்பு 582 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

எப்படி இவர்கள் சொத்து மதிப்பு உயர்ந்தது.   இவர்கள் தங்கள் பணத்தை பங்கு வர்த்தகத்திலும்,  தங்கத்திலும்,நிலங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

2009 ல் 126,700 பேர்களாக இருந்த அதிக சொத்துடைய தனிநபர்கள் 2010 ல் 153,000 மாக உயர்ந்துள்ளனர்.

110 கோடி மக்கள் தொகையில் இது சாதரணம்.

ஆனால் 110 கோடி மக்களில் செல்வத்தை 153,000 வைத்திருக்கிறார்கள் என்றால்................-?

திங்கள், அக்டோபர் 10

தற்கொலை

அவன்-ஆத்திரக்காரன்
அவள்-அவசரக்காரி

இழந்தது-வாழ்க்கை

அவன்- வாழ்க்கை இழந்தான்
அவள்-வாழ்வை முடித்துக் கொண்டாள்

அனாதை-10 மாத பெண் குழந்தை

இழந்தபின்பு புலம்பி என்ன பயன்

சுடுசொற்கள் சுட்டுவிடும் என்பார்கள்

வள்ளுவன் சொன்னான்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்


உன் துணையிடத்தில் கோபத்தை காண்பிக்க உரிமையுண்டு எனினும் அதை காட்டாதே என்று

கோபத்தின் அளவு தாண்டும் போது

இதோ துணையை வாழ்க்கையை இழந்து நிற்கிறான் தம்பி


செவ்வாய், அக்டோபர் 4

ஓப்பந்தம்

கண்மணி அன்போடு
காதலன் நான்....நான்.....
எழுதும் கடிதம்....லெட்டர்


மனசாட்சி பற்றி
உள்ளாட்சி தேர்தலில்
உளருகிறாய்

உறவுகள் முறிந்தபின்
தொந்தரவு செய்கிறாய்
கூட்டணி வேண்டுமென

பறந்து பறந்தடிக்கும்
இளைய தளபதி-ஒரு படத்தில்
ஒருவருட ஒப்பந்தமென்றான்

ஒய்யார கொண்டை
ஓபாமா தேசத்தின்
கீழிருக்கும் மெக்சிகோவில்

ஈராண்டு ஒப்பந்தமென்றான்
வர்த்தக ஒப்பந்தமல்ல
வாழ்க்கை ஒப்பந்தம்

அரசே அரசாணையிட்டு
ஆவண செய்கிறதாம்
ஆசைப்பட்டால் நீட்டிக்கவும்

அல்லவென்றால்
அவரவர் வழி
குழந்தை செல்வம் வரை

அரசும் சமூகமும்
ஆய்ந்தெடுத்த முடிவா
அடுத்தகட்ட நாகரிகமா





வியாழன், செப்டம்பர் 29

புதியதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் திவால்

கடந்த ஆகஸ்ட் 2011 ல் பங்கு சந்தையில் பட்டிலிடப்பட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 3/4 வீழ்ச்சியடைந்து சிறு முதலீளிட்டார்களை திவாலாக்கியுள்ளது.

ஐபிஓ எனப்படும் (initial public offer) மூலம் நிறுவனங்கள் பொதுமக்களிடம் நிதி திரட்டுகின்றன.  முன்பெல்லாம் ரூ.100 கோடி முதல் ரூ.1000 கோடி கடன் என்றால் IDBI, IFCI, IIB, ICICI,UTI, LIC, HUDCO,TDB இப்படிப்பட்ட நிறுவனங்களிடம் கடன் பெற்று வந்த நிறுவனங்கள்,  தற்போது அதாவது புதிய பொருளாதார கொள்கை அமலுக்கு வந்தவுடன், IPO மூலம் நிதி திரட்ட ஆரம்பித்தனர்.

மேற்கண்ட நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானால், ஆயிரதெட்டு ஆவணங்கள், ஈட்டுறுதியாக அசையா சொத்துக்கள், தனிப்பட்ட ஈட்டுறுதி ஆகியவகளை அளிக்க வேண்டும்.   இவைகளிலிருந்து தப்பிக்கதான் இந்த IPO.

பங்கு சந்தையில் நேரடியாக இறங்க முடியுமா என்றால் அதற்கும் ஆயிரதெட்டு நடைமுறைகள்.   வட்டியில்லா கடன் என்பதால் அதை பின்பற்ற தயங்குவதில்லை நிறுவனங்கள்.  முதலீட்டாளனை பொறுத்தவரை சரியில்லை என்றால் நட்டத்திலும் விற்று விட்டு சென்று விடுவான். கேள்வி கேட்க ஆள்ளில்லை.

பங்கு மதிப்பை நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் வேண்டுமென்றே அதிகமாக, பொய்யாக இட்டுகட்டி நிர்ணயம் செய்கின்றன.  பங்கு வெளியீடு பட்டியலிடப்பட்ட நான்கைந்து நாட்களுக்குள் நிறுவனங்கள் தன் பங்கில் சிலபகுதியை விற்று ரூ.1970 கோடி பார்த்துள்ளனர்.

பார்த்தீர்களா இவர்களுடைய நோக்கத்தை, நிதி திரட்டுவது என்பது நிறுவனத்தை நடத்த அல்ல.  சிறு முதலீட்டாளர்களை கொள்ளையடிக்க

இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் முடிய ரூ.5947 கோடி37 வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 35 வெளியீடுகள் மூலம் ரூ.12606 கோடி திரட்டப்பட்டது. தற்போது வெளியான 7 வெளியீடுகள் தன்மதிப்பில் 50%  மேல் இழந்து விட்டது.

அப்படிதான் நடந்துள்ளது தற்போது பங்கு வெளியிட்ட கீழ்கண்டுள்ள நிறுவனங்களின் நிலை.


ஏமாறுபவன் இருக்கும் போது ஏமாற்றிக் கொண்டிருப்பவன் புது உத்திகளை கண்டு பிடிப்பான்.  உடனடி பணக்காரன் ஆக நினைப்பவன் உள்ளதையும் இழப்பான், உயரவும் பறப்பான்


           

காரோட்டினால் கசையடி

ஜெத்தாவில் முஸ்லிம் பெண்ணொருவர் காரோட்டியதால் பொதுவிடத்தில் 10 கசையடி மூலம் தண்டிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சியமா ஜஸ்தினய்யா,  இதுபோன்ற தண்டனைக்கு இன்னும் இரு பெண்கள் காத்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்நாட்ரசர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்து ஜனநாயவாதியாக காட்சியளித்தார்.   என்ன செய்வது

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு

உலகவரைபடத்தில் குஜராத்

அம்பானி புகழாரம் சூட்டுகிறார் மோடிக்கு, ஆம் அரசு சொத்துகளை கொள்ளையடிப்பவன், ஆளுபவனை ஆலிங்கனம் செய்து கொள்கிறான்.
அவனும் ஜாம் நகரில் ஒரு பெட்ரோலியப் பல்கலைகழகம் போன்று அகமதாபாத்தில் ஏற்படுத்த வேண்டுமென்கிறான்.  இருவரும் ஊருக்காக உழைப்பவர்கள்.  அதனால் கோரிக்கைகள் வெளிபடையாகவே இருக்கிறது.

ஜாம் நகர் மொத்தமும் இவர்கள் குத்தகை ஏடுத்தது போதாது வா அகமதாபாத் என்கிறார் முதல்வர்.  அவனுடைய தொழிலுக்கு அவன் பல்கலைகழகம் நடத்துகிறான். எத்தனை மக்களுக்கு வேலைவாய்ப்பு என்றொரு குரல்.  அம்பானியை பழிப்பதா என்றொரு குரல்.

ஊர் சொத்தை உலையில் போடுபவனும், ஊரையே கொளுத்தி பதவிக்கு வந்தவனும் சொரிந்து கொள்கிறார்கள்.

வேடிக்கை பார் பொதுஜனம்

நிர்வாணம்

நேற்றிரவு 9 மணியளவில் லஸ் சந்திப்பில் ஓர் ஆண்  நிர்வாணமாக நடந்து செல்கிறார்.  நான் கூட ஜைனத் துறவியாயிருக்கும் என நினைத்து அமைதியாய் இருந்தேன்.  ஒருபுறத்திலிருந்து மறுபுறம் சென்றவுடன் கையில் சுருட்டி வைத்திருந்த வேஷ்டியை கட்டிக் கொள்கிறார்.

என்னவென்று சொல்வது இந் நடவடிக்கையை

இன்று காலை தினத்தந்தியில் ஒரு செய்தி

சோதிடன் பேச்சை நம்பி, இளம் பெண் பல்லாவரம் ரோட்டில் நிர்வாணமாக நடந்தாள் என்று.  காதலன் வேறொரு திருமணம் செய்து கொண்டான்.  அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஆவல்.  சோதிடன் 10 கோயிலை நிர்வாணமாக வலம் வந்தால் காதலன் கைவசமாவான் என்று சொல்கிறான்.

பேதை நம்பி, சொந்த ஊரில் செய்தால் அசிங்கம் என்றெண்ணி பல்லாவரத்தில்10வது கோயில் சுற்றும் போது போலிஸிடம் மாட்டிக் கொண்டாள்.  மன்னிக்கவும் அவர்கள் சேலை கொடுத்து நல்லபடியாக நடத்தியதாக செய்தி சொல்கிறது.

மன பிறழ்வு

அல்லது நினைத்ததை அடைய எதையும் செய்யலாம்

விடை கிட்டுமா இவர்களுக்கு




புதன், செப்டம்பர் 28

பதவி

பல கட்சி இருக்கும் ஊரிலே கூட்டணி இல்லை,
பேராசைதான் காரணம்

ஒவ்வொரு கட்சிகாரன் இன்னும் சில தனித்துவங்கள்
இத்தனை பேரும் சந்திக்கும் தேர்தல்
உள்ளாட்சி தேர்தல்

பதவி கிடைக்க பலவகை முயற்சி
ஒருவர் பேசிக் கொண்டார்
நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு
15 லட்சம் செலவமாகுமென்று

எத்தனை லட்சம் சம்பாதிக்க வழியிருந்தால்
இத்தனை லட்சம் செலவு செய்ய முயற்சிப்பர்
அதுவும் பலமுனை போட்டியில்

எத்தனை பேர் எதை இழக்கப் போகிறார்கள்

அதுசரி அவர்கள் போட்டியில் இழக்கிறார்கள்

நாம்

இழப்பது........................

செவ்வாய், செப்டம்பர் 27

அக்காவின் அதிகாரம்

அக்கா மம்தா இன்று திருவாய் மலர்ந்துள்ளார், மாவோயிஸ்ட்டுகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது உயிர்களை கொல்ல...........

நேற்றுவரை மாவோயிஸ்ட்களை அதிகம் விமர்சிக்காதவர், அதிகாரத்தில் அமர்ந்தவுடன் பேச்சும் மாறிவிட்டது.

அதுசரி இந்த ராணுவம்,காவல் துறை செய்த கொலைகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

அக்கா கொடுப்பார் போல் தெரிகிறது அதனால்தான் குதிக்கிறார்


சனி, செப்டம்பர் 17

நீதி

கல்வி கட்டணம் அல்லாது கூடுதல் கட்டணமாக ரூ. ஒரு லட்சம் கேட்க அவரால் செலுத்த இயலவில்லை அதனால் தேர்வு ஏழுத அனுமதிக்க வில்லை.  உயர்நீதிமன்றம் செல்கிறார்.  தேர்வு எழுத அனுமதிக்க உத்திரவிடுகிறது.

ஆனால் மறுமுறையும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை குற்றமிழைத்தார் என்று நீதிமன்றத்தை அணுக நிவாரணம் கல்வி நிறுவனத்திற்கு அபராதம் ரூ,15000.

ஆம்

கல்வி கட்டணங்கள் முதலாளிக்கு,
கல்வி காசுள்ளவனுக்கு

நாமெல்லாம் பிச்சையிடு என்று
வலையில் எழுதுவோம்
நாலுபேர் படிக்க
நாடு கடந்து பணம் அனுப்புவர்
நமது கடமை முடிந்தது
ஆத்ம திருப்தி

இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை இழுத்து மூடினால் என்ன?

ஜனநாயக நாட்டில் ரூ,15000 அபராதமே சரியான வழி

மூடுவது தீவிரவாதம்

வாழ்க ஜனநாயகம்

புதன், செப்டம்பர் 14

நாடாத்தி

நேற்று நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், வயது 35 க்குள் இருக்கும். இதுவா முக்கியம்.  அவர் சிறுவயதாக (10-12) இருக்கும் போது உறவுக்காரர் நாடாத்தி உள்ளே வராதே என்று திட்டி அழ வைப்பாராம்.  இத்தனைக்கும் அவர் அந்த சாதியை சேர்ந்தவர் அல்ல.

எத்தனையோ செய்திகள், நாடாத்திகள் மாராப்பு சேலை போராட்டம் அந்த மாவட்டத்தில்தான் நடைபெற்றது.  இந்த சாதியை சேர்ந்த ஆண்கள் செருப்பு அணிய கூடாது, தோளில் துண்டு அணிய கூடாது இத்தனை கட்டுப்பாடுகள் 80 களில் இறுதி வரை

தன் சாதிக்காரியை திட்ட அவர்கள் மனதில் மட்டமாக  உள்ள சாதியின் பெயரை சொல்லி திட்டிக் கொள்வதில் உள்ள திருப்தி, அதில் பாதிக்கபடும் மனம்........?

இன்னும் கிராமங்களில் இந்த சாதிய படிமம் மாறவில்லை.  நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் சக்கிலிய குடி என்று தனியாக ஊருக்கு வெளியே உள்ளது.  அவர்களிலும் பாகுபாடு.

மனிதன் ஏன் சாதியின் பெயரால் அடுத்த மனிதனை கீழாக பார்க்க வேண்டும். காரணம், நிறமா, பொருளாதாரமா, அல்ல ஆதிக்கத்தால் ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிக்கு அடிபணியுதா?


தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்

கிரீஸ் நாட்டின் பொருளாதார தடுமாற்றத்தால் பிரான்ஸ் நாட்டின் வங்கி திவலாகிறது.  ஐரோப்பாவில் உள்ள வங்கிகள் அனைத்து ஆட்குறைப்பு செய்கிறது.  RBS, UBS, Barclays, HSBC and Credit Suisse ஆகிய வங்கிகளில் இந்த ஆண்டு மத்தி வரை70000 நபர்கள் பணி இழந்துள்ளனர்.


என்ன இவர்கள் அனைவரும் கிரீஸ் நாட்டிற்கு உழைத்தார்களா அல்ல தங்கள் நாட்டிற்கு உழைத்தார்களா? அல்ல கிரீஸ் நாட்டை சுரண்டினார்களா?


அமெரிக்க டாலர் ஆட்டம் கண்டால் இந்தியாவில் தங்கம் விலை தாறுமாறா ஏறுது

வெங்காயம், எங்கே என்ன நடந்தால் என்ன நடக்கும் என எந்த பாமரனுக்கும் புரிய போவதில்லை





H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...