ஞாயிறு, பிப்ரவரி 23

முத்தத்தில் முழ்கடிடா













மோகத்தில் திளைப்போமடா
மெய்மறந்து கற்போமடா
ஏகாந்த வேளையில்
ஏழிசைதனை இசைத்திடடா

தாகத்தினைத் தணித்திட
தண்ணிலவா குளிர்ந்திட
யாகத்தினை நடத்திடு
யௌவனம் விழிக்குமடா

சொற்சுவை தன்னில்
சொக்கிட வைத்தவனே
பொற்புடை அரிவையை
போற்றத் தெரியாதோ

காற்றின் மொழிதனில்
காதலை அறியலையோ
பாற்கடல் அமுதத்தை
பரிமாற விரும்பலையோ

சித்தத்தில் நிறைந்தவளை
சிணுங்க வைக்காதே
புத்தனாகிப் புலனொடுக்கிப்
பூவையை வருத்தாதே

பித்தம் தெளிவதற்குள்
பிரபஞ்சம் முடிவதற்குள்
மொத்தத்தில் கைப்பற்றி
முத்தத்தில் முழ்கடிடா


                                 அ. வேல்முருகன்

திங்கள், பிப்ரவரி 17

மும்மொழிக் கல்வி












மும்மொழிக் கல்வி
மூத்தக்குடி தமிழனுக்காம்
முட்டாள்கள்
முகாரி பாடுகிறார்கள்

ஏட்டுக் கல்வி
இந்தி பேசுபவர்களுக்கு
இரண்டா? ஒன்றா?
கேட்பது யார்?

அமெரிக்காவில்
அகன்ற மார்புள்ளவர்களின்
அறிவார்ந்த பதில்களை
அகிலமே வேடிக்கை பார்த்தபின்

கயமையோடு
கல்விக்கு காசு மறுப்பவன்
காட்டுமிராண்டியா
கல்வித் துறைக்கு ............

தேசியக் கல்விக் கொள்கை
தேசிய இனத்தை அழிக்கவா?
தேமதுரத் தமிழை
தேசங் கடத்தவா?

சிங்கப்பூர், மலேசியா
இலங்கை, மொரிசியஸ்
இங்கிலாந்து கனடா - என
சிறக்கும் தமிழை

இங்கிருக்கும் கட்சிகள்
இனவுணர்ச்சியற்று
இராமா இராமா - என
இறைஞ்சுவார்களா?

மொழியொரு கருவியே
எனினும் வழிவழி வந்த
இனத்தின் அடையாளமே
எனவே உரிமையுமானதே

அறிவல்ல
அத்தனை மொழி அறிவது
நெறியல்ல
நெற்றிகண் திறப்பினும்.....

கற்பது நன்றென
கயவர்கள் கதைத்தால்
வீழ்வது தமிமெனில்
வேடிக்கைப் பார்ப்பாயா?

தமிழனாய் இருப்பதனால்
தரணியில் இந்தியனானாய்
இந்தி படிப்பதனால்
இங்குநீ யாராவாய்?

தேவையெனில் - எவரும்
தேர்ச்சியுறுவர்
ஜெர்மன், ஜப்பான்
சீன, கொரிய மொழிதனில்

செயற்கை நுண்ணறிவு
சில நொடிகளில்
பெயர்க்கும் மொழிதனை
சிரமத்திலேன் கற்க வேண்டும்

புரணாங்களையும்
வரலாற்று திரிபுகளையும்
புதிய கல்வி என்றால்
புறம் தள்ளுவோம்

கழுத்தறுத்துக் கொண்டே
காருண்யமிக்கவானாய்
கபடநாடகம் நடத்துவது
காசி தமிழ் சங்கமமன்றோ

நிதி மறுத்து
நிராதரவாய் நிறுத்தினாலும்
நிராகரிப்போம்
மும்மொழித் தாக்குதலை

கூட்டாட்சியில்
கூழைக் கும்பிடுபவனுக்கும்
உரிமைக் குரலெழுப்பவனுக்கும்
நீதி வேறு வேறானால்

ஒன்றியத்தில்
உனக்கென்ன வேலை
உம்மென்று இருப்பாயா?
உலகம் கவனிக்க ஓங்காரமிடுவாயா?

சனி, பிப்ரவரி 15

அழகெனும் மாயை

 












கட்டழகு என்றே
காளைகள் தடுமாற
தொட்டுப் பழகிட
தொலைந்தன மாயை

வெண்ணிலவு அழகென்ற
விளக்கவுரை கற்பனையே
எண்ணங்களில் ஏற்படும்
எழில்யாவும் சொற்சுவையே

நிறத்தில் தேடுவதும்
நிகரென உரைப்தும்
அறமென அறியாது
அழகை ஆராய்வது

மாயப் பிசாசென்று
மாதரை பழித்து
காயம் பொய்யென
கதைத்ததை மாற்றிட

மானமும் அறிவும்
மனிதருக்கு அழகென
ஊனச் சமூகத்தில்
ஊட்டிய பகுத்தறிவால்

விழைவு ஏதென்று
வீதியில் காணீர்
அழகெனும் மாயை
அகன்றது பாரீர்

                                    அ. வேல்முருகன்

வெள்ளி, பிப்ரவரி 14

பிப்ரவரி - 14















ஐம்பதிலும் ஆசை வரும்
அந்நாளில் பாடியதை
அத்தான் "ஐ லவ் யூ" என்றாள்
அத்தியாயம் தொடரட்டுமென்றேன்

பிப்ரவரி - 14
பிரபஞ்சத்தின் பிரமோற்சவமென
பிரகடனப்படுத்த
பிராட்டியின் கோரிக்கை

ஆகட்டும் தேவி
அடியேனின் காதல்
ஆயுள் உள்ளவரை
அர்பணிக்கப் பட்டதென்றேன்

காதல் மட்டுமா
கட்டியவள் கண்நோக்க
கன்னத்தில் முத்தமொன்று
கமுக்கமாய் வைத்தேன்

பற்றாக்குறை கணக்கொன்றை
பட்டியலிட்டாள்
தீர்க்க கூடியதுதான் - ஆயினும்
திருப்தி அடைவாளா?

மணக்கும் மல்லிகை
மன்னவனின் ஆசையென்றாலும்
மந்தைகளின் தேர்வாக
ஒற்றை ரோசா

நிலவரம் தானறிந்து
நிபுணர்கள் பலரிணைந்து
நினைவு பரிசென்று
நிறைத்திருந்தனர் நாளங்காடிதனை

அது இதுவென்று
அத்தனையும் வேண்டுமென்று
அட்டவணை தயாரிக்க
அனாதிகாரணம் அறிவாயா?

பித்தாக நானிருக்க
புதிராக அவளிருக்க
முத்தாய்ப்பா வர்த்தகம்
முன்னேற்றம் காணுது

ஓவ்வொரு நாளும்
ஒன்றாய் அமர்ந்து
ஓராயிரம் கதை பேசி
ஒட்டி உறவாடுதன்றோ காதல்

இன்றினிய நாள் மட்டும்
இலக்கணப் போலியாய்
ஏனிந்த ஏற்பாடு
ஏக்கத்துடன் வாழவா

காசிருக்கோ இல்லையோ
கண்மணி - நின்
கண்ணசைவில் பிறக்கும்
காதல் தினம் தினமே

                                அ. வேல்முருகன்

வியாழன், பிப்ரவரி 6

ஊழ்துணை










வாட்டி வதைக்கும்
வஞ்சிக் கொடியே
ஆட்டிப் படைக்க
அஞ்சி இருப்பேனோ
ஈட்டிச் சொற்கள்
ஈர்க்கம் பாகிட
நீட்டிக்குமோ உறவு
நீயே கூறடி

பாட்டின் இராகம்
பாடுபவர் அறிவர்
ஏட்டின் கருத்தை
எவரும் தெளிவர்
ஊற்றின் கண்ணில்
ஊசியை நுழைக்காதே
கூட்டின் இனிமையை
கூத்தாடி உடைக்காதே

ஊழ்துணை நீயென
உலகம் அறியும்தானே
வாழ்வின் சுவையை
வர்த்தகமா பார்க்காதே
தோழனின் துணையை
தொடுதலோடு இணைக்காதே
சூழல் எதுவாகினும்
சூன்யத்தை நாடாதே


அ. வேல்முருகன்

காரணங்கள்
















காதல் வேண்டி
கட்டியவளிடம் கோரிக்கை
காதில் வாங்கவில்லை

ஆண்டு முழுதும்
ஆண்டனுபவிக்க
அருள் கேட்க

பட்டத்தரசி
பட்டியலிட்ட காரணங்கள்
பட்டினிக்கே வழி வகுக்க

எட்டூர் பஞ்சாயத்தார்
ஏதேனும் தீர்த்திருந்தால்
எடுத்தியம்ப சரிசெய்யலாம்

ஆடிக்கொன்று
அம்மாவாசைக் கொன்றென
ஆபத் பாந்தனவள்தான்

ஆயினும் பால்நிலவு
ஆசையை தூண்டுவதால்
ஆறுகால பூஜையை வேண்டினேன்

அவளோ, ஆசைக்கு
அளவு வைத்து
ஆட்டிப் படைக்கிறாள்

வேண்டாம் என்று
வேடிக்கைக்காக அல்ல
வேண்டுமென்றே உரைக்கிறாள்

அயர்வாக இருக்கிறதென
அந்தபுரத்திற்கு
அனுமதி மறுக்கிறாள்

ஊதக் காற்று வீசுகையில்
உறக்கம் வருகிறதென
உருட்டுகிறாள்

ஆலாபிக்க ஆரம்பித்தேன்
அர்த்த சாமமாகி விட்டதென
ஆட்சேபிக்கிறாள்

அமுதகானம் பாடி
ஆலிங்கனம் செய்ய
ஆர்வமில்லை என்கிறாள்

எப்போது பார்த்தாலும்
இதே ஞாபகமாக
எட்டி நில்லென எச்சரிக்கிறாள்

வெண்சாமரம் வீசி
விண்ணப்ப மெழுதினேன்
வெக்கையா இருக்கென வெகுள்கிறாள்

என்ன அவசரம்
இவ்வளவு சீக்கிரம்
இம்சை ஆரம்பம் என்கிறாள்

இன்பம் துய்க்க
இத்தனை தடைகளை
எங்ஙனம் தகர்ப்பது

ஒன்றா, இரண்டா
உண்மைதானென உணர்ந்து
ஒதுங்கிச் செல்ல

அடுக்கும் காரணங்களுக்கு
ஆம் என்றிருந்தால்
அடங்கி போவதாகாதா

ஆயினும், அன்பு கிடைக்குமெனும்
அந்த நம்பிக்கையில்தான்
அகிலம் இயங்குது

சனி, பிப்ரவரி 1

தடுதாட்கொள் புராணம்







 

தனித்தீவா நானிருந்தேன்
தடுத்தாட் கொள்ளவந்தாய்
இனியென்ன என்றபோது
இதயமதை தந்தாய்
பனிபடர்ந்த பொழுதிலும்
பாற்கடல் அமுதளித்தாய்
எனினும் ஏனின்று
ஏசிச் செல்லுகிறாய்

அன்பிலே விளைந்ததை
அறிவினால் ஆய்திடாதே
துன்பத்திலே வீழ்வதற்கு
தூபத்தை போடாதே
இன்னலில் விடுபட
இசைவோடு வாழ்ந்திட
கன்னலே கனிவோடு
கண்ணாளனை காத்திடு
 
ஆழிப் பேரலையாய் நீவந்தாய்
ஆடிய தாண்டவ தானறிந்தேன்
ஆழி விரலிட்ட கணையாழியை
ஆலகால மென்றே வீசுகிறாய்
நாழிகை நாளென்ன தேவி
நற்றுணை நானுனக்கு வாராய்
வாழிய தலைவி என்றே
வையம் வாழ்த்திட வாழ்ந்திடவே


                                      அ. வேல்முருகன்


வெள்ளி, ஜனவரி 31

செயற்கை நுண்ணறிவு




செயற்கை நுண்ணறிவு
செல்லாக் காசாக்கியது
செருக்குடனிருந்த அமெரிக்காவை

51 இலட்சம் கோடி
அங்கு காணாமல் போனது
ஆரெடுத்தனர் அத்தனை கோடிகளை

கொள்ளை நிகழவில்லை
எல்லைக்கு வெளியில்
ஏதோவொரு கண்டுபிடிப்பு

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தை
உடைத்துப் போட்டது

தென்னையில் தேள் கொட்ட
பெரும்பண்ணை அமெரிக்கா
பேயறைந்தது போல் தடுமாறுது

"டீப் சீக்"
டிராகன் தேசத்து
திடீர் வெளியீட்டால்

திருக்குறளாய்
திக்கட்டும் தீர்க்கமானதால்
உலகப் பொதுமறையானது

உள்ளூர் சரக்கைக் காட்டிலும்
உசத்தி யனாதால்
உச்சி மோந்தனர்

அறிவை
அள்ளியணைக்க
அமெரிக்கர்கள் முன்வரிசையில்

"டீப் சீக்" செயலி
தீப்பற்றி எறிய
சிலிக்கான் வேலி உருகியது

எவரும் அறிந்திடவும்
எளிய வழிகளால்
வடிவமைக்கப்பட்டதாலும்

கொள்ளும் சிலவு
கொஞ்சம் என்பதாலும்
கொஞ்சுகிறது அகிலம்

மானுட உழைப்பு
மனிதரில் சிலருக்கு மட்டுமல்ல
பேரண்டத்திற்கும் அல்லவோ?!

வியாழன், ஜனவரி 30

அழிவற்றதோ ஆன்மா

 



அழிவற்ற ஆன்மா
அகிலத்தில் உண்டோ
எழில்மிக்க மானுடத்தில்
எதுவென்று உரைப்பீரோ
மொழியற்று இருக்குமோ
மெய்யற்று வேறாகுமோ
வழிவழியாய் ஆன்மா
வந்ததை யாரறிவார்

உலராது எரியாது
உன்புத்திக்கு எட்டாது
புலன்கள் அறியாதது
புவனத்தில் நிலையானது
கலங்கிட வேண்டாம்
கண்டிப்பாய் மறுமையில்லை
புலம்பாதே புண்ணியாத்மா
பூநாகமா யிருக்கலாம்

புல்பூண்டின் ஆன்மா
புவியில் உண்டுறங்குமோ
அல்லலுடை நரகத்தின்
ஆயுதங்கள் சிதைக்காதோ
சொல்கேட்டு இயங்குமோ
சொர்கத்தில் தங்குமோ
வல்லுனர் எவருண்டு
வகுத்து சொல்லிட

சாந்தி அடைந்தால்
சாதுவாக இருக்குமோ
ஏந்திழையின் ஆன்மா
ஏமாந் திருக்குமோ
வேந்தன் என்றால்
வேற்றூரில் சஞ்சரிக்குமோ
சீந்து வாரின்றி
சீவனை இழக்குமோ

பூதஉடலில் நீங்கிட
புகலிடம் கொடுப்பதாரோ
ஆதாமின் ஆன்மா
அன்றிருந்த வாரிருக்மோ
சாதனையா நியூட்டனை
சந்திக்க வழியுண்டா
ஆதார மில்லையென
ஆருடம் சொல்வோமா

செவ்வாய், நவம்பர் 12

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி


 

 








ஏற்றத் தாழ்வில்லா
ஏட்டுக் கல்வி
எண்பதாண்டு கடந்தாலும்
எட்டாக் கனியா
கற்றலின் கடவுளும்
நீட்டைத் தடுக்காதோ
ஐஐஎம், ஐஐடி
அயலாகி வாராதோ

விருப்பமுள்ளக் கல்வியில்
விண்ணைத் தொடலாம்
ஒருங்கிணைந்தக் கல்வியில்
உலகை அறியலாம்
பருந்தாப் பறக்கையில்
பலதும் காணலாம்
பொருந்தாக் கல்வியில்
புலராது மானுடமே

ஆரியமோ திராவிடமோ
அடிப்படைக் கல்விக்கு
போரிட்டு போனவுயிர்
போகட்டும் என்பீரோ
கோரிக்கை வைப்பதா
குடிகளின் உரிமை
பேரிகையை முழக்கு
பேதமற்ற கல்விக்கு

சனி, நவம்பர் 9

அத்தானின் ஆசை

 
















அடியே உனைபார்க்க
ஆரத் தழுவது மனது
வடிவ ழகுதானே
வச்ச கண்மூட மறக்குது
துடிக்கும் நெஞ்சமது
தூதுச் சொல்லி வைக்குது
முடியுமா முத்த மொன்று
மூச்சு முட்டிப்போகுது


அத்தானின் ஆசைக்கென்ன
அளவில்லா வெள்ளம் போல
முத்தத்தின் தேவையென்ன
முக்கனிச் சுவையைத் தேடவா
மொத்தத்தில் வித்தைகள்
மோன நிலையில் அறியவா
நித்தமும் நீயெனை
நீங்காது காப்பாயா வேலவா


கற்ற லென்பது அனுவபம்
கண்மணி ஒத்துழைக்க குதுகலம்
பற்றிப் படரட்டு மின்பம்
பயிற்சிகள் பெற்றிடும் காலம்
அற்றைத் தினத்தின் அழகை
அன்றே ரசித்து மகிழ்வோம்
அற்புதம் இதுவென அன்பே
ஆயுள் முழுக்க வாழ்வோம்

செவ்வாய், நவம்பர் 5

தெவிட்டாத இன்பம்




 








குறள் 1328:

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு.


ஊடிய பிறகு

கூடியதால்
நாடி நரம்பெல்லாம்
ஆடி அதிர
வடிந்த நெற்றி வேர்வையில்
தேடினாலும் கிடைக்காத
தெவிட்டாத இன்பம்


மீண்டும்
ஊடிக் கொள்ள
விளைந்திடுமோ?!!

சனி, நவம்பர் 2

நிலையானது?!!!

 








பணம் புகழுக்கு
பகீரத பிரயத்தனம்
பலகாலம் நிலைத்திருக்குமோ?

ஆண்டாண்டு கால
அதிகாரம் அப்படியே
அடுத்த தலைமுறை தொடரவா?

இழப்பதற்கு துணிவில்லை
இறப்பதற்கு எண்ணமில்லை
எனினும் நடப்பதென்னவோ

ஆர்டிக் உருகுது
ஆங்கொரு புல்லினம் மடியுது
ஆலமரமும் அடியோடு சாயுது

நிரந்தரத்தைத் தேடுவதும்
நினைத்ததை தக்க வைப்பதும்
தேக்கமடைய வைக்கிறது….

வாழ்க்கை
வற்றாத நதி போல
வழிகளை உருவாக்கி ஓடட்டும்

மேடு பள்ளங்கள்
காடுகள் மலைகள்
கலங்கி நிற்பதில்லை

வாழ்வும் அப்படிதான்
சாசுவதத்தை தேடாது
சஞ்சரிக்க பழகுங்கள்

திங்கள், அக்டோபர் 14

பங்குச் சந்தை

 












யாரோ
யாருடையப் பணத்தையோ
திருடிக் கொண்டிருக்கிறார்கள்

பதினாறு இலட்சம் கோடி
பங்குச் சந்தையில் காணவில்லையாம்
பதறாமல் விற்பனை தொடருகிறது

கொண்டுச் சென்றவர் யாரென்றோ
கொள்ளையடித்தவர் யாரென்றோ
பணத்தை பறிக் கொடுத்தவர் கேட்கவில்லை

ஹிண்டன்பர்க் அறிக்கையோ
இழந்த உயிர்களோ
ஏதும் செய்ய முடியாது

சட்டம் அங்கீகரித்த
பட்டவர்த்தன  பகற்கொள்ளை
இலாபமெனப்படுகிறது

உலக மயமாக்கலில்
அயலக நிறுவனங்களின் முதலீடு
உன்னைச் சுரண்டவா  

ஒழுங்கமைப்பட்ட திட்டத்தின்
கீழுள்ள முதலீடுகளின் உத்திரவாதம்
கள்ளத்தனமிக்க ஓர் ஒப்பாரி

ஹர்சத் மேத்தாக்கள்
கேத்தன் பரேக்குகள்
நேற்றைய இராசாக்கள்

சித்ரா இராமகிருஷ்ணன்
மாதபி புச்
இன்றைய இராணிகள்

ஊதிப் பெருக்கப்படும்
ஊக வணிகம்
உலகிற்குத் தேவையா

உழைப்பின்றிக் கிடைப்பதால்
உபரியென்று முதலீடு செய்கிறாய்
உள்ளதும் போனபின் ஏன் அழுகிறாய்

ஞாயிறு, அக்டோபர் 6

எட்டாம் பொருத்தம்

















ஏழெட்டுப் பொருத்தம்
எனக்கும் அவனுக்கும்
வாழட்டும் என்றே
வழியனுப்பி வைத்தது
பாழும் கிணரென்று
பாதகத்தி அறிந்தாலும்
சூழல் இல்லையே
சுற்றத்திடம் சொல்லியழ

மனப்பொருத்தம் இல்லாத
மணவாழ்வு இனிக்குமோ
என்வருத்தம் எதுவென்று
எனையீன்றோர் அறிவாரோ
சினமிருந்தும் கட்டியவனின்
சிறகொடிக்க மனமில்லை
வனவாசம் என்றானபின்
வாழ்விற்கு காரணமில்லை

பொருந்தா வாழ்வுதனில்
பொலிவுற வழியில்லை
இருந்தாலும் கனவுகள்
இருளகற்ற போராடுது
வருந்தாத இணையோ
வளையவளைய வருகுது
திருந்தாத மடங்களுக்கு
திசைக்காட்டியும் விளங்காது

ஆசையா நெருங்கவும்
அன்பேயென அரற்றவும்
யாசகமா கேட்பது
இயற்கைக்கு முரணானது
வேசையென பட்டமளித்து
வேண்டாத பொருளாக்க
காசினியில் இருந்தென்ன
காலனிடம் சென்றாலென்ன

வளரும் பிள்ளைக்காக
வசந்தத்தை மறக்க
உளரும் ஊருக்காக
ஒருவேடம் தரிக்க
தளரும் இளைமைக்கு
தண்டணை கிடைக்க
துளங்கா வாழ்வில்
தூண்டுதல் தானாரோ

சுவர்க்கம் தேடினேன்
சூன்யம் சூழ்ந்தது
சுவாசம் நிறுத்திட
சுவரொன்று தடுத்தது
விவாக ரத்தென்றாலும்
விமோசனம் மறுத்தது
உவர்நில மென்றாலும்
உயிரோடு இருக்கிறேன்

எனக்கான வாழ்வு
என்றுதான் கிட்டுமோ
அனலான நெஞ்சமது
அமைதி அடையுமா
புனலாக புதுவாழ்வு
பூரிப்பை தருமோ
வினாவிற்கு விடையுண்டு
விகற்பத்திற் கேதுமில்லை



சனி, அக்டோபர் 5

பனிபடர்ந்த தேசத்தில் பாவையுன்னைத் தேடுகிறேன்






பனிபடர்ந்த தேசத்தில்
பாவையுன்னைத் தேடுகிறேன்
கனியுதட்டின் காயத்திற்கு
கப்பம்கட்டப் போகிறேன்
இனிதென்று வாங்கியதை
இளஞ்சூட்டில் தருவாயோ?
நனியென்று நாயகனை
நாள்முழுக்க கொஞ்சுவாயோ?

பள்ளத்தாக்கின் பசுமையும்
பாய்தோடும் நீரோடையும்
கொள்ளையிடும் காட்சியால்
கொண்டல் பரவசமாக்க
துள்ளிடும் இளமையோ
தூதொன்றை ஏற்குது
உள்ளங்கள் ஒன்றாகி
உருகிதான் போகுது

முடிவில்லா மலைமுகட்டை
மூடிடும் மேகங்கள்
வடிவழகில் மையலுறும்
வண்டுகளாய் நின்றிட
கொடியொன்று அசைந்து
குழப்பத்தை விளைவிக்க
நொடியொன்றை வீணக்காது
நெஞ்சோடு சாய்ந்தாளே

வெள்ளி, அக்டோபர் 4

வெற்றிக் கழகம்

















கூத்துக் கட்டியவன்
குறைகளை களைவதாய்
கூட்டத்திடையே சூளுரைத்தான்

வசனங்கள் வசீகரிக்க
விண்ணதிர கைத்தட்டல்
மகிழ்ந்தது மக்கள் மட்டுமல்ல

கனவு வளர்த்தான்
கறுப்பை செலவளித்தான்
காசுக்கு கூட்டம் சேர்ந்தது

பலம் வாய்ந்தவனென
பத்திரிக்கைகள் புல்லரித்தன
பகற்கனவு தொடர்கதையானது

புதிய வரவாய்
வெற்றிக் கழகம்
போற்றிப் பாடுமா தமிழகம்

அரிதாரங்களாய்
அவையடக்கம் அறிந்து
அமைதி காத்தவர்கள்

புயலாக வருவதாய்
புழுதியை கிளப்ப
புலிகள் உறுமுகின்றன

மக்களுக்கு
தையல் இயந்திரமும்
தரை டிக்கெட்டும் கொடுத்த

வள்ளல்
ஊழல் பெருச்சாளிகளிடம்
ஒரு சீட்டுக்கு மண்டியிடுவாரா?

கழகங்களில் ஒன்றாய்
கடைச் சரக்கை விற்க
கபட நாடகம் நடத்துவாரா?

ஜோசப்பின் தேசமல்ல
என்றபோது
ஓசன்னா என முனுமுனுக்காதவனா

உழைக்கும்
உங்களை இரட்சிக்க
ஓடோடி வருவான்

ஆட்சி அதிகாரம்
அன்னமிடும்
அட்சய பாத்திரமா

அவர்கள் சொத்தை
நூறாயிரம் மடங்காய்
மாற்றும் தந்திரமா

என்ன செய்வான்
எப்படிச் செய்வான்
ஏதாவது சொன்னானா?

மக்கள் சேவை
மகுடம் தரித்த
தொழிலாக மாறியதாலும்

கொள்ளையடித்தாலும்
குற்றமில்லை என்று
நீதியரசர்கள் தீர்ப்பெழுதுவதாலும்

வெற்றுக் கூச்சலோடு
வெற்றிக் கழகமென வருகுது
விழிப்பாயிரு தமிழா…

வியாழன், செப்டம்பர் 12

திருட்டு

 


ரூ,1500

ரூ. 5000 ஆனது
விலைவாசி அல்ல

28 டாலர்
72 டாலராக மாறியது
இலாபமல்ல

ரூ.1500
மின்சார கட்டணமல்ல
72 டாலர்
நிலக்கரியின் விலையுமல்ல

ரூ.61832 கோடி கடனில்
ரூ.15977 கோடி மட்டுமே
வங்கியால் வசூலிக்க முடிந்தது

10 பேர் வாங்கியதை
ஒருவர் மட்டும் தீர்த்த கதை
தீர்ப்பாயம் மட்டும் அறிந்தது

மூலதனம் குவிந்தாலும்
முதலிடத்தை தவற விட்டான்
ஹிண்டன்பார்க் அறிக்கையால்

களவாடப்படுகிறது
களவெனஅறியாது – மக்கள்
கவலைக்கடமான நிலையில்

வாக்கு அரசியலில்
வாய்கரிசி மக்களுக்கு
ரூ,500 அல்லது ரூ,1000

மக்களாட்சியில்
இராசராசன் குவிப்பது
கோடிகளில்

கட்டணங்கள் உயர்வது
கார்ப்பரேட்டுகள் கொழிக்க
கட்டாயமாக்கப் பட்டவை

சட்டங்கள்
சாமனியர்களின்
சமதர்ம வாழவிற்கல்ல

சட்டப்படி கொள்ளையிட
சமூகம் வேடிக்கைப் பார்க்க
சரித்திரம்

அதிகார அமைப்புகள்
ஜனநாயக தூண்கள்
அனைவருக்குமானதல்ல

திருட்டு தொடர்கிறது
உபா, குண்டர் சட்டங்கள்
ஒன்றும் செய்யவில்லை

அது அப்படிதானென
அவரவர் ஏற்றுக் கொண்டனரா
அதை மாற்றுவதெப்படி

                                        என யோசிக்கும்



புதன், செப்டம்பர் 4

முப்பாட்டன் முருகன்
















தென்னாடுடைய சிவன்
எந்நாட்டவருக்கும் இறைவனானதால்
முப்பாட்டன் முருகனுக்கு
முத்தமிழ் மாநாடு

சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும்
அக்கக்காய் ஆய்ந்த
நக்கீரனுக்கு ஈடில்லை என்பதால்
தக்கதொரு வாய்ப்பிழக்க

இயலிசை நாடகமென
இகலோகத்திற்கு வாழ்வளிக்கும்
சரஸ்வதியை - சபதமெடுக்கும் போது
சமாளித்துக் கொள்ளலாமென்று

சிந்தையில்லா அரசு
சந்தையில் இராமனுக்கெதிராய்
தந்தை சிவனைத் தவிக்க விட்டு
கந்தனைக் கவசமாக்கிக் கொண்டது

அரசியல் சாசன
அடியொற்றி
ஆரம்பித்தனர் மாநாடு – ஆம்
அறுமுகனை வணங்காதவரெல்லாம்
                                    …………….. தமிழரல்ல

சொல் வழக்கு
சொலவடையில்
செந்தமிழ் செழித்திருக்க
சேயோனும் வாழ்ந்திருந்தான்  

கல்லில், ஏட்டில்
எழுத்தாணிகள்
எழுதி வளர்த்த தமிழ்
காணாது போமோ

அசை, சீர், சொல்லென
அலசி ஆய்ந்த
தொல்காப்பியனுக்கு
தொகைகளை கற்றுத் தந்ததாரோ

சுடலை மாடனும், ஐயனாரும்
இசக்கியும், பேச்சியும்
மாரியம்மனும், பச்சைம்மாளும்
ஊருக்கு வெளியில் உக்கிரமாய்

கருப்பசாமி, முனியாண்டி
நீலியும், வேடியப்பனும்
தமிழெனும் ஆகமத்திற்குள்
அடைபடாத காரணத்தால்

ஆயிரம் கோடிகள்
அறநிலையத் துறையிடம்
எங்ஙனம் சிலவழிப்பதென
எழுதிய தீர்ப்பு

தமிழரைப் பிரிக்கவேத்
தடத்தினை உருவாக்கியது
தர்க்கம் ஏதுமின்றி
தந்தனத்தோம் என்றது அரசு

பார்பனரல்லா இயங்கங்கள்
பல்லிளித்து எழுதியப்
பொழிப்புரையில் ஒன்று
ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இட ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு
கோவணாண்டிகள் கேட்க
முருகனடிமை என்கிறது அரசு

இறை தூதனாய்
இயேசும் அல்லாவும்
இதயங்களை கவர்ந்தாலும்
அவர்கள் தமிழரில்லை

பறையடித்து
இறையாண்மை கொன்ற
திராவிடத் திரிபுகளை
தீர்க்கமாய் எதிர்த்திட

தமிழ் கடவுள்
உலகைச் சுற்றி
ஒருபழத்திற்கு ஏமாந்ததை
உணரும்படிச் சொல்லுங்கள்

மாட மாளிகைகள்
அதிகாரத்தின் குறியீடு
மானுடம் ஏமாற
அம்மதங்கள் தேவையா?



புதன், ஜூன் 12

உன் பார்வையின் பொருள்

 



தொல்காப்பியத்தில்
தேடத் தொடங்கினேன்
இலக்கண விதிகள் – பார்வைக்குத்
தட்டுப்படவில்லை

சங்க இலக்கியத்திலும்
சதுரகராதியிலும்
சுழன்றுத் தேடினேன்
சரியான விளக்கங்களில்லை

வள்ளுவன், கம்பன்
வகைவகையாய் வர்ணித்ததை
பாரதிதாசன் - புதுக்
கவிதையில் வடித்திருந்தாலும்

ஒவ்வொரு பார்வைக்கும்
ஓர் ஒற்றுமையுமில்லாது
ஓராயிரம் பொருளிருப்பதாய்
உள்ளுணர்வு உரைத்ததால்

புதையலைத் தேடுவது போல்
பார்வையின் இலக்கணத்தையும்
பாவலரின் விளக்கத்தையும்
பலவிடங்களில் தேடினேன்

மாயகோவ்ஸ்கியும்
பாப்லோ நெருடாவும்
தேடித்தேடி எழுதியும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

பலநூறாண்டுகள்
பார்வை பரிமாற்றம்
பல்பொருள் அளித்திருக்கலாம்
ஆயினும்

உன்விழித் தாக்க
என்னுள் அதிர்வுகள்
ஏழெட்டு ரிக்டரென
காதல் கடவுள் கணித்ததால்


தடுமாறும் அன்பன்
அ. வேல்முருகன்


இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...