திங்கள், பிப்ரவரி 17

இந்துவா நீ


எப்படி நீ
இந்து ஆனாய் – ஆனால்
தப்பாய் சொல்லாதே 

கருணாநிதி
அகராதி தேடி
இந்துவுக்கு விளக்கம் சொல்வார் 

மவுண்ட் ரோடு
மகா விஷ்ணு என
மெட்ராஸ் வாசிகள் சொல்வர் 

இந்து ………. சரி
எந்த வகையறா… - அட
யார் வகுப்பது 

முனிக்கும்
பச்சையம்மாளுக்கும்
தீ மிதிக்கையில் 

சனி
சத்தமில்லாமல் வந்தததால்
இந்துவானாயா

அய்யனாரும்
இசக்கியும்ஆடிய
தாண்டவத்தில் 

பிள்ளையரப்பன்
பித்து பிடித்து நின்றதால்
இந்துவானாயா

 சுடலையும்
பேச்சியும்
பேசாதிருந்த போது 

பெருமாள்
பள்ளி கொள்ள
இந்துவானாயா

நடுகல்லை வணங்கிய இடத்தில்
நைசா துண்டு போட்டு 
இந்துவானாயோ

ஊருக்கு வெளியில்
உக்கிரமாய் நின்ற நீ
எப்படி இந்துவானாய்

கம்புயூட்டர் படித்து
கையில் காசு பார்த்ததால்
ஜென்ம பூமியில்” எழுப்பும்

செங்கல் அய்யனாரோடு
கருங்கல் பிள்ளையார் அமர
இந்துவானாயோ

ஆடு கோழி வெட்டியா – அல்ல
அரோரா என்று சொல்லி
இந்துவானாயா


சங்கராச்சாரியும் ‘அக்யுஸ்ட்’
சாதிக்கொரு ரவுடியும் ‘அக்யுஸ்ட்’ – இந்த
சமதர்மத்தால் இந்துவானாயா

கண்ணப்பன் நாயனரானார்
காஞ்சிபுரம் ‘அக்யுஸ்ட்’ ஆனது – இந்த
திருவிளையாடலால் இந்துவானாயா?   
  
இரட்டை குவளையும்
இட ஒதுக்கீடும்
இந்துவென நிலைநிறுத்தவா?

மேலவளவும்
மண்டைக்காடும் – நீ
பெரும்பான்மை என சொல்லவா

ஐந்தை பெற்றாலும்
பேதமின்றி பெற்ற
கருவறை இதுவென்பாள்

கருவறை நுழையாது
கடவுளை அர்ச்சிப்பவன்
எந்த இந்து

கருவறைக்கு உள்ளே ஒருவரும்
கருவறைக்கு வெளியே பலரும்
காட்டுதே இந்து யாரென?

நால் வருணமாய்
நானூறு சாதியாய்
பிரித்தாளே இந்து “பராசக்தி”

ஜகம் நீ
ஜகத்காரணி நீ – என
உருகிய பண்ணைபுரத்தான்

அல்லாவை
அண்ட வைத்த காரணி
இந்துதானோ?
  
சம்புகன், ஏகலைவன்
நந்தன் வந்து சொல்லுவானா – நான்
இந்துவென

உன் அடையாளம் இழந்து
ஏன்  இந்து  இந்துவென
ஏமாற்றிக் கொள்கிறாய்?

இந்து என்பதை விட
இவ்வுலகில் – மதமின்றி
மனிதனென இருந்து பார்







வெள்ளி, பிப்ரவரி 14

ரௌலட் சட்டமும் ராட்சசியும்



நான் கண்ணனோ
நீ ராதையோ
அல்லதான்

கண்களால் கவனித்து
கனிந்த இதயத்தால்
காதலர்கள்தான்

அடியே
ஆயினும் என்ன
அவசரச் சட்டம்

பிப்ரவரி 2014 ல்
பேசாமல் வதைக்கும்
ராட்சசியே

மார்ச் 1919-ல்தான்
ஆங்கில சர்காரின்
ரௌலட் சட்டம்

பேச்சும், எழுத்தும்
ஒத்த கருத்துடையோரும் – அன்று
கூடுவது தடையாயிருந்தது

கல்யாண ஊர்வலமும்
கனியகனிய பேசுதலும்
கூடுதலுக்கு வழியடி

காரணமின்றி கைதாவது
காதலிலும் உண்டு – அந்த
ரௌலட்லிலும் உண்டு

சந்தேகப் படுதல்
உன்னிலும் உண்டு
உரிமையற்ற அதிலுமுண்டு

விசேட நீதிமன்றத்தில்
விதியின்றி விசாரிப்பர்
மேல்முறையீடும் இல்லாதென்பர்

வாதமும் மேல்முறையீடும்
வாய்தா இல்லா வாய்ப்பு
வாழ்க்கையில் இணைய

உயிர்
மாட்சிமை தங்கிய
மன்னரின் கருணை

ஆம். தேவி
கருணை வேண்டுமடி - உனது
கண்ணாளன் நானடி

சத்தியாகிரகம், ஒத்துழையாமை
சட்டென்று நிறுத்தினார்
உத்தமர் காந்தி

உத்தமியே
ஊடலின் துன்பத்தை
உடனே நிறுத்தடி

ஜாலியன் வாலாபாக்
ரௌலட் சட்டம் – அது
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்

வாலிபன் வாழ
தடா, பொடா தவிர் – இது

இந்திய குடியரசுயாயினும்

சனி, ஜனவரி 11

“தமிழ்” கடவுள்



பன்மொழி புலமை
பக்தனுக்கு உண்டா
ஏழேழு உலகை
இரட்சித்து காக்கும்
பரமனுக்கும் உண்டா

அறிந்தது அறியாதது
தெரிந்தது தெரியாதது
புரிந்தது புரியாதது
சிவாஜி  - சிவனாய்
உச்சரிக்க அழகு

அழகன் முருகனோ
அவனப்பன் சிவனோ
அவதார பெருமாளோ
அவர்களது பத்தினிகளோ
அறியாதது ஏதுமுண்டோ?

கைலாய வாசமென்பதால்
காதில் விழுந்தவை
சமஸ்கிருதமாம் - ஆதலால்
பைந்தமிழ்
மைந்தனுக்கும் தெரியாதாம்

காமாட்சி
“கற்றது தமிழ்” அல்லவாம்
மீனாட்சிக்கு
சொக்கனை தெரியுமாம்
சங்கத்தமிழ் புரியாதாம்

தேவாரமோ திருவாசகமோ
தமிழில் ஒரு வாசகமோ
புரியலையாம்
தில்லை நடராசனுக்கு – இது
தீட்சிதர்கள் சொன்னது

ஆலயத்தம்மனும்
பாளையத்தம்மனும்
பைந்தமிழில் பூசிக்க
பரவசமடைந்ததாய்
பக்தர்கள் சொல்ல

சுப்புணி சுட்டபழம்
சூத்திர மொழியில்
கேட்டதாக அவ்வை
பாட்டெடுக்க - அவாள்
தேவமொழி என்றனரே

அனந்தனுக்கு
ஆராரோவோ அல்ல
பூபாளமோ
சமஸ்கிருதத்தில் வேண்டுமென
சட்டம் போட்டானா?

அண்ட சராச்சரத்தை காப்பவனுக்கு
அய்யாயிரமாண்டு தமிழ் தெரியாதாம்
அப்படியா! – அக்குடும்பத்தை
ஆரம்ப பள்ளிக்கு அனுப்புவோமா
ஆனா, ஆவன்னா கற்க?!





செவ்வாய், டிசம்பர் 24

ஆதார் அட்டை



ஆதார் அட்டை
அட்சயப் பாத்திரமா?
ஆட்காட்டி பத்திரமா?

கண்ணின் கருவிழி
காமிராவில் பிடிக்கிறான்
களவாடினாயா நீ

பத்துவிரல் ரேகையை
பதித்து பாதுகாக்கிறான்
பாகிஸ்தான் ஆளா நீ?

காஸ் இணைப்புக்கு
கையில் காசென்கிறான் - அட
காச நீதானே கொடுக்கிற

வங்கி கணக்கிற்கு
வசதி படுமென்கிறான் – இப்ப
கஷ்டமா படுகிறாய்?

ரேஷன் மானியம்
நேரடியா வருமாம் – அட
நீரா ராடியாவுக்குமா?

கொடுத்த பணத்தை
எடுத்துக் கொடுத்தா
கடன்தானே கழிந்தது

நாளொரு இடம்
பொழுதொரு வாழ்க்கை
புரட்டிடும் திரட்டிடும் அட்டை

சொத்து வாங்கிட
விவாகரத்து செய்திட – அரசு
அனைத்தும் அறிந்திடும்

ஒவ்வொரு நடவடிக்கையும்
ஒவ்வொரு நாளும் – அட்டை
ஒற்றனாய் தொடரும்

விழித்துக் கொள்ளடா!
வேண்டாம் வேண்டாம் – இந்த

ஆதார் அட்டை

செவ்வாய், அக்டோபர் 8

கலியுகம்



திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம்,

அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும் வராக அவதாரம் கொண்டு இராமேஸ்வரம் கோயில் சென்றதாகவும், பக்தகோடிகள் மிரண்டு போனதாகவும் அதனால் வராக அவதாரமும் மிரண்டதாகவும் செய்தி

அத்தோடு செய்தி முடியவில்லை

இராமனால் வழிப்பட்ட சிவனை இரண்டு வாசல் கடந்து பார்க்க முடியவில்லை வராக அவதாரத்தால்.

அதற்கே தீட்டு பட்டதாக கோயிலை மூடி பரிபாரம் செய்தனராம் சிவாச்சாரியர்கள்

வராக அவதாரம் எடுத்து உள்ளே நுழைந்ததே தீட்டு என்றால் மாம்ச மனிதா நீ நுழைந்தாலும் தீட்டு என்றுதானே கருவறைக்கு வெளியே நிறுத்தப்படுகிறாய்.

பன்றி நுழைந்து விட்டது இராமேஸ்வரம் கோவிலில்

மக்களிடம் மூட நம்பிக்கையில்லை அது அவதாரம் இல்லை பன்றி என கண்டுபிடித்து விட்டனர்.

ஆனாலும் தீட்டு.............................

சனி, செப்டம்பர் 14

மாற்று தீர்ப்பு எழுதுங்கள்

ஒன்றோடு
ஐந்தென்றால்
முறையாகுமா?

கன்றோடு
காளையென்றால்
நன்றாகுமா?

எட்டும்
நாற்பதும்
இணையாகுமா?

ஏமனில்
எட்டில் திருமணமாகி
எமனை கண்டாள்

இருபதில்
இந்திய தலைநகரில்
இல்லாமல் போனாள்

அகிலமெங்கும்
அவதிபடுவது
பெண்தான்

காமம்
கரு உருவாக
கருவறுக்கல்ல

மிருகமாய் புணர
மனித உயிரதெற்கு
மரித்து போகட்டுமே

மதமா
மழழையை
மணப்பெண்ணாக்கியது

மானுடமே
மழழையை, மாதை
மாற்றி பார்க்குது

மரண தண்டனை
மாற்றம் தருமோ
மனித சமுகத்திலே

நேற்று இன்றென
நெடுங்கதையாய்
தொடர்வதால்

மாற்றி சிந்திப்போம்
வெட்டி விடுவோம்
வேண்டாத உறுப்பை

ஆம்
காயடிப்பது
மிருகத்திற்குதான்




வெள்ளி, செப்டம்பர் 13

ஏலம் நான்கு கோடி...........ஒரு தரம்.........





முதுநிலை மருத்துவ படிப்பு சீட்டுக்கு ஏலம் நடத்துகிறார்களாம். இருக்கும் ஆறெழு சீட்டுக்கு அகப்பட்டவனிடம் பேரம் பேசுகிறார்கள்.  அவன் 4 கோடி தருகிறேன் எனும் போது நீ கூடுதலாக கொடுத்தால் உனக்கு இடம் என்கிறான்.

ஆக 4 கோடி முதலீட்டில் படிப்பவனின் சேவை எப்படி இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிர்ணயிக்கப்பட்ட விலை ஒரு கோடி இன்று ஏலம் நான்கு கோடி அதுவும் ரேடியாலஜி படிப்புக்கு

தேர்வு எழுதியவன் படிக்க முடியாமல் இருக்கிறான். பணம் வைத்திருப்பவன் "பாஸாக" படிக்கிறான்

இளநிலையே 50 இலட்சத்திற்கு போகும் போது முதுநிலை அப்படிதான் என்கிறார்கள்.

ஏன் இப்படி

தேவையோ இல்லையோ, ஒரு SCAN, MRI. 3D Scan, 64 slice இப்படி கமிஷனுக்கு எழுதி தள்ளினால் போதும் கஜானா நிறைந்து விடும்.

சோதனைக்கு இங்கு எலிகள் 130 கோடிக்கு தாண்டி போய் கொண்டிருக்கிறதே.

கோக் இந்தியாவிற்கு வரும் போது சொன்னான். 100 கோடி மக்களில் ஒரு கோடி பேர் தினம் கோக் வாங்கினால் போதும் என்று.  அதே " formula" இங்கேயும்.  அதனால்தான் ஏலம் நான்கு கோடி

99.9 எடுத்தவன் அரசு கோட்டாவில் இடம் கிடைத்து விடும்.  இப்போதும் 99.9 கூட்டம் அதிகமாகி விட்டது. 96%  எடுத்தாலும் இடம் கிடைப்பது குதிரை கொம்பு.

75% எடுத்தவன் பணம் கொடுக்க தயாராகி விட்டான். 

பல் மருத்துவம், அதுவும் விலைதான். பல் வலிக்கு உப்பை தேய்த்து குணமாக்கியவன்.  இப்போது மருத்துவரிடம்.  மீண்டும் மேலே சொன்ன formula.

பெண்கள் BDS படிக்கிறார்கள்.  எத்தனை பேர் அதில் மின்னுகிறார்கள். 

MDS. இதற்கு தனி விலை அதுவும் இலட்சங்களில்தான்.

இப்பொழுதெல்லாம் இளநிலை அதாவது வெறும் MBBS என்றால் மதிப்பில்லை கூடுதலாக ஒரு டிப்ளமோ, அல்லது MD அல்லது FRC இப்படி தகுதிகள் தேவை படுவதாக இவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.

மருத்துவம் சேவை என்பதிலிருந்து பணம் காய்க்கும் மரமாக மாறி விட்டதால்தான் முதலாளிகள் இதற்கு வந்து விட்டனர்.  அரசு கை கழுவி விட்டது.

பிறகு, திருமண பேரத்திற்கு கூடுதல் தகுதி

சோதனைக்கு தன்னையே அர்பணித்து மருத்துவத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நாட்டுக்கு அர்பணித்த மக்கள்  இல்லாமல் போய் விடலாம்.

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்கள் இந்த சமூகத்தை காப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டும் பொய்த்து விட வில்லை

செவ்வாய், செப்டம்பர் 3

வீரமா?.............................



கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே


பிச்சை எடுக்கும் நிலை உனக்கு ஏற்பட்டாலும் கற்றலை விட்டு விடாதே, கற்பது நன்று என வெற்றிவேற்கை கூறுகிறது

ஒரு குறும்படம் பார்க்க நேரிட்டது. 

ஏழ்மையான குடும்பம், நிலையற்ற வருமானம், அடுத்தவேளை சோறு கேள்விகுறி. பெண் குழந்தையை வகுப்பில் ஆசிரியர் வெளியே துரத்துக்கிறார். வீட்டின் நிலை கடன் வாங்கவும் தாய் தவிக்கிறார்.  ஆயினும் பிள்ளையை தூண்டுகிறார். பெண் பிள்ளையோ தன் சேமிப்பை அம்மாவிற்கு கொடுத்து உதவுகிறது.  ஆனால் தனக்கு வேண்டிய Geometry box வாங்க, கோயில் வாயிலில் அமர்ந்து பிச்சை எடுத்து வாங்கி ஆனந்தப் படுகிறது.

எதிர்மறையாக படம்பிடித்து கல்வி கற்க போராடும் நிலையை சொல்லியுள்ளார். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும்.................................

ஆனால்

காசுள்ளவனுக்கு கல்வி என்னும் நிலையில் வாழ்கிறோம்


கல்வி அடிப்படை உரிமையன்றோ மனிதனுக்கு


ஆனால், அதை பிச்சை எடுத்தாவது படி என்ற நிலையில் உள்ளது. குறும்படம் பார்த்து கலங்கிய உள்ளங்கள், என்ன செய்ய முடியும், நாலு சொட்டு கண்ணீர்......

இதை எப்படி மாற்றுவது, பணமில்லாதவன் படிக்க முடியாது, கோடிகளில் புரள்பவன் படிப்பது மருத்துவம், இலட்சங்களில் பொறியியல், ஆயிரங்களில் கலை மற்றும் அறிவியல்.

நூறுகளில் வாழ்பவன், எட்டு, பத்தை தாண்டுவதில்லை

வாழ்வில் கடைத்தேற வாய்த்ததை படித்துவிட்டு பகற்கனவு காணுது கூட்டம்.

ஆயினும் அவரவருக்கு ஒரே நாளில் பணக்காரனாக வேண்டுமென ஆசை. அதனால்தான் சூழற்சி முறையில் ஈமு கோழித் திட்டத்தை கடந்து வந்திருக்கிறான்.

 கல்வி என்பது தனிபட்ட உரிமையா? அரசுக்கு இதில் பங்கு இல்லையா, தன் குடிகள் கற்றவர்களாக இருக்க வேண்டும் என எண்ண கூடாதா? அப்படியெனில் அரசின் வேலை குடிகளிடம் வரி வசூலிப்பது மட்டுதானா?

காலை எழுந்தவுடன் துலக்கும் பற்பசையிலிருந்து இரவு படுக்கும் மெத்தை வரை வரிசெலுத்தும் மக்கள் தான் விரும்பிய படிப்பை பிச்சை எடுத்துதான் படிக்க வேண்டும். அதற்கு வள்ளல்கள் வேண்டுமா?

ஏன் இந்த தனியார் மயம்?  யார் வாழ கல்வி தனியார் மயமானது. எதற்கு பிச்சை எடுத்து படிக்க வேண்டும்.  வரி வாங்கும் அரசல்லவா படிக்கவும் வசதி செய்து தரவேண்டும்.

அப்படி கொடுக்காத அரசு என்ன அரசு, பிச்சை எடுத்து படித்துக் கொள் என்று சொன்னால், எத்தனை பேர் பிச்சை எடுப்பான்.

அப்புறம் பிச்சைக்கார நாடு இந்தியா என்பான்

இதை நான் சொல்லவில்லை

அப்போ குறும்படம் எப்படி இருக்க வேண்டும்.  இப்போது அவர் சொல்லட்டும்


H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...