ஞாயிறு, மே 31

அண்டமெல்லாம் நந்தவனமோ




அண்டமெல்லாம் அமைதி
ஆனந்தம் ஐம்பூதங்களுக்கு  
ஆறறிவு அடைந்து கிடக்க
அவை வாழத் தொடங்கின 

வரிகுதிரைகள் மான்கள் 
புனுகு பூனை - இன்னபிற 
வனவிலங்குகள் 
நகர்வலம் வந்தன 

இரவு பகலென்று
இடித்து நகர்ந்து
இயங்கிய வாகனங்கள்
எங்கேச் சென்றன

நந்தவனம் ஆனதோ
தாய் திருநாடு - அல்ல
புதிய இந்தியா
பிறந்து விட்டதோ? 

நைட்ரஜன் டையாக்சைட் 
வாகனங்களின் நச்சுவாயு
மரணத்தை முன்கூட்டியும்
ஆஸ்மாவையும் அளிக்குமாம்

தொழிற்சாலைகள் மூடியிருக்க
வாகனங்கள் ஓடாதிருக்க
வானம் வெளுத்திருப்பதாய்
செயற்கைகோள் செய்தி

செயற்கைக் கோள்கள் 
விண்வெளி மையங்கள் 
வானுர்திகள், ஏவுகணைகள் 
ஓசோனைத் துளையிட்டன 

உலகை கைக்குள்ளடக்க
விண்ணில் செலுத்தியக் கலங்களின் 
குப்பைகள் 7000 டன்
என்று விழுமென அறிவாயா

மாசறுப் பொன்னேயென
மாசாத்துவன் மகன்
மனம் மயங்கியே
மனையாளை அழைக்கலாம்

மாசறுக் காற்றேயென
மனிதா அழைப்பாயோ
காசுக் கொடுத்தாலும்
கலப்பிடமின்றி கிடைக்குமோ
 
இத்தனை நாட்கள்
புகையால் மறைத்த
இமயமலை சிகரங்கள்
அழகாய்த் தெரிகின்றன

ஒலியும் ஒளியும்
விரும்பியிருக்கலாம்
உனக்கது மாசானால்
உயிர் சுருங்கலாம்

ஒரியக் கடற்கரையில்
ஆமையிட்ட முட்டைகள்
குஞ்சுகளாய்
கடல் திரும்புகின்றன

மனிதர்களில்லா
கடலோரத்தில் 
கடற் பறவைகள் கூட்டமாய்
மானோத் துள்ளித் திரிகிறது   

மச்ச அவதாரத்தால்
56" மார்பழகனால்
முடியாததை
இயற்கை செய்கிறது

கங்கையில் யமுனையில்
கார்ப்ரேட் கழிவுகள்
கழுவியப் பாவங்கள்
காணாது போயின

மனிதர்கள் இல்லையெனில்
பாவங்களில்லை
பல்லாயிரம் கோடி
பகற்கொள்ளை திட்டங்களும்

வெனிஸ் கால்வாய்களில்
டால்பின்கள் உலவுகின்றன
தண்ணீர் தெளிந்திருக்கிறது
கொண்டோலா படகுகள் ஓய்வெடுப்பதால்

பயணங்கள் இல்லையெனில்
பாரினில் தீங்கில்லையோ
பேரண்டம் அமைதியாய்
மானுடமும் அமைதியாய்

உல்லாசக் கப்பல்கள்
ஊர்சுற்றும் தோணிகள்
சரக்கின் வகைக்கேற்க
நாவாய்கள் முடங்கிட

ஆழிச் சூழ் உலகின்
அளப்பரிய உயிரிகள்
பல்கி பெருகி
பவனி வருகிறதாம்

தெளிந்த நீரோட்டமும்
திரியும் மீன்கூட்டமும்
தேவையை கூறுதோ
தேடலை நிறுத்தென்று ஓதுதோ

கட்டுமரமோ
பாய்மரக் கலமோ
காற்றின் வழி பயணிக்க
கரை சேர்ந்த மனிதன்

எதிர்த்துச் செல்லென்ற
எண்ணம் பெற்றதனால்
எண்ணற்ற நஞ்சைக் கொட்டியதால்
எதுமற்று முடங்கினான் 

மனித குறுக்கீடுகள்
முன்னேற்றம் என்று
மா-நிலத்தைக் காயப்படுத்த
கொரோனாக் காப்பாற்றுகிறது

பாவ மன்னிப்புகள் வழங்கிய
பரமேஸ்வரனும்
பரமபிதா மற்றும்
பலரும் கதவடைத்துக் கொள்ள

புவிப் புன்னகையோடு
புரையோடிய மேனியை
புணரமைத்துக் கொள்கிறது
பராபரனும் பக்தனும் இல்லாததால்




2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புவி புன்னகையோடு
புரையோடிய மேனியை
புணரமைத்துக் கொள்கிறது
பராபரனும் பக்தனும் காணவில்லை

உண்மை
உண்மை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

இன்னும் பல உண்மைகளை உணர யாரும் தயாராகவில்லை...

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...