செவ்வாய், நவம்பர் 12

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி


 

 








ஏற்றத் தாழ்வில்லா
ஏட்டுக் கல்வி
எண்பதாண்டு கடந்தாலும்
எட்டாக் கனியா
கற்றலின் கடவுளும்
நீட்டைத் தடுக்காதோ
ஐஐஎம், ஐஐடி
அயலாகி வாராதோ

விருப்பமுள்ளக் கல்வியில்
விண்ணைத் தொடலாம்
ஒருங்கிணைந்தக் கல்வியில்
உலகை அறியலாம்
பருந்தாப் பறக்கையில்
பலதும் காணலாம்
பொருந்தாக் கல்வியில்
புலராது மானுடமே

ஆரியமோ திராவிடமோ
அடிப்படைக் கல்விக்கு
போரிட்டு போனவுயிர்
போகட்டும் என்பீரோ
கோரிக்கை வைப்பதா
குடிகளின் உரிமை
பேரிகையை முழக்கு
பேதமற்ற கல்விக்கு

சனி, நவம்பர் 9

அத்தானின் ஆசை

 
















அடியே உனைபார்க்க
ஆரத் தழுவது மனது
வடிவ ழகுதானே
வச்ச கண்மூட மறக்குது
துடிக்கும் நெஞ்சமது
தூதுச் சொல்லி வைக்குது
முடியுமா முத்த மொன்று
மூச்சு முட்டிப்போகுது


அத்தானின் ஆசைக்கென்ன
அளவில்லா வெள்ளம் போல
முத்தத்தின் தேவையென்ன
முக்கனிச் சுவையைத் தேடவா
மொத்தத்தில் வித்தைகள்
மோன நிலையில் அறியவா
நித்தமும் நீயெனை
நீங்காது காப்பாயா வேலவா


கற்ற லென்பது அனுவபம்
கண்மணி ஒத்துழைக்க குதுகலம்
பற்றிப் படரட்டு மின்பம்
பயிற்சிகள் பெற்றிடும் காலம்
அற்றைத் தினத்தின் அழகை
அன்றே ரசித்து மகிழ்வோம்
அற்புதம் இதுவென அன்பே
ஆயுள் முழுக்க வாழ்வோம்

செவ்வாய், நவம்பர் 5

தெவிட்டாத இன்பம்




 








குறள் 1328:

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு.


ஊடிய பிறகு

கூடியதால்
நாடி நரம்பெல்லாம்
ஆடி அதிர
வடிந்த நெற்றி வேர்வையில்
தேடினாலும் கிடைக்காத
தெவிட்டாத இன்பம்


மீண்டும்
ஊடிக் கொள்ள
விளைந்திடுமோ?!!

சனி, நவம்பர் 2

நிலையானது?!!!

 








பணம் புகழுக்கு
பகீரத பிரயத்தனம்
பலகாலம் நிலைத்திருக்குமோ?

ஆண்டாண்டு கால
அதிகாரம் அப்படியே
அடுத்த தலைமுறை தொடரவா?

இழப்பதற்கு துணிவில்லை
இறப்பதற்கு எண்ணமில்லை
எனினும் நடப்பதென்னவோ

ஆர்டிக் உருகுது
ஆங்கொரு புல்லினம் மடியுது
ஆலமரமும் அடியோடு சாயுது

நிரந்தரத்தைத் தேடுவதும்
நினைத்ததை தக்க வைப்பதும்
தேக்கமடைய வைக்கிறது….

வாழ்க்கை
வற்றாத நதி போல
வழிகளை உருவாக்கி ஓடட்டும்

மேடு பள்ளங்கள்
காடுகள் மலைகள்
கலங்கி நிற்பதில்லை

வாழ்வும் அப்படிதான்
சாசுவதத்தை தேடாது
சஞ்சரிக்க பழகுங்கள்

திங்கள், அக்டோபர் 14

பங்குச் சந்தை

 












யாரோ
யாருடையப் பணத்தையோ
திருடிக் கொண்டிருக்கிறார்கள்

பதினாறு இலட்சம் கோடி
பங்குச் சந்தையில் காணவில்லையாம்
பதறாமல் விற்பனை தொடருகிறது

கொண்டுச் சென்றவர் யாரென்றோ
கொள்ளையடித்தவர் யாரென்றோ
பணத்தை பறிக் கொடுத்தவர் கேட்கவில்லை

ஹிண்டன்பர்க் அறிக்கையோ
இழந்த உயிர்களோ
ஏதும் செய்ய முடியாது

சட்டம் அங்கீகரித்த
பட்டவர்த்தன  பகற்கொள்ளை
இலாபமெனப்படுகிறது

உலக மயமாக்கலில்
அயலக நிறுவனங்களின் முதலீடு
உன்னைச் சுரண்டவா  

ஒழுங்கமைப்பட்ட திட்டத்தின்
கீழுள்ள முதலீடுகளின் உத்திரவாதம்
கள்ளத்தனமிக்க ஓர் ஒப்பாரி

ஹர்சத் மேத்தாக்கள்
கேத்தன் பரேக்குகள்
நேற்றைய இராசாக்கள்

சித்ரா இராமகிருஷ்ணன்
மாதபி புச்
இன்றைய இராணிகள்

ஊதிப் பெருக்கப்படும்
ஊக வணிகம்
உலகிற்குத் தேவையா

உழைப்பின்றிக் கிடைப்பதால்
உபரியென்று முதலீடு செய்கிறாய்
உள்ளதும் போனபின் ஏன் அழுகிறாய்

ஞாயிறு, அக்டோபர் 6

எட்டாம் பொருத்தம்

















ஏழெட்டுப் பொருத்தம்
எனக்கும் அவனுக்கும்
வாழட்டும் என்றே
வழியனுப்பி வைத்தது
பாழும் கிணரென்று
பாதகத்தி அறிந்தாலும்
சூழல் இல்லையே
சுற்றத்திடம் சொல்லியழ

மனப்பொருத்தம் இல்லாத
மணவாழ்வு இனிக்குமோ
என்வருத்தம் எதுவென்று
எனையீன்றோர் அறிவாரோ
சினமிருந்தும் கட்டியவனின்
சிறகொடிக்க மனமில்லை
வனவாசம் என்றானபின்
வாழ்விற்கு காரணமில்லை

பொருந்தா வாழ்வுதனில்
பொலிவுற வழியில்லை
இருந்தாலும் கனவுகள்
இருளகற்ற போராடுது
வருந்தாத இணையோ
வளையவளைய வருகுது
திருந்தாத மடங்களுக்கு
திசைக்காட்டியும் விளங்காது

ஆசையா நெருங்கவும்
அன்பேயென அரற்றவும்
யாசகமா கேட்பது
இயற்கைக்கு முரணானது
வேசையென பட்டமளித்து
வேண்டாத பொருளாக்க
காசினியில் இருந்தென்ன
காலனிடம் சென்றாலென்ன

வளரும் பிள்ளைக்காக
வசந்தத்தை மறக்க
உளரும் ஊருக்காக
ஒருவேடம் தரிக்க
தளரும் இளைமைக்கு
தண்டணை கிடைக்க
துளங்கா வாழ்வில்
தூண்டுதல் தானாரோ

சுவர்க்கம் தேடினேன்
சூன்யம் சூழ்ந்தது
சுவாசம் நிறுத்திட
சுவரொன்று தடுத்தது
விவாக ரத்தென்றாலும்
விமோசனம் மறுத்தது
உவர்நில மென்றாலும்
உயிரோடு இருக்கிறேன்

எனக்கான வாழ்வு
என்றுதான் கிட்டுமோ
அனலான நெஞ்சமது
அமைதி அடையுமா
புனலாக புதுவாழ்வு
பூரிப்பை தருமோ
வினாவிற்கு விடையுண்டு
விகற்பத்திற் கேதுமில்லை



சனி, அக்டோபர் 5

பனிபடர்ந்த தேசத்தில் பாவையுன்னைத் தேடுகிறேன்






பனிபடர்ந்த தேசத்தில்
பாவையுன்னைத் தேடுகிறேன்
கனியுதட்டின் காயத்திற்கு
கப்பம்கட்டப் போகிறேன்
இனிதென்று வாங்கியதை
இளஞ்சூட்டில் தருவாயோ?
நனியென்று நாயகனை
நாள்முழுக்க கொஞ்சுவாயோ?

பள்ளத்தாக்கின் பசுமையும்
பாய்தோடும் நீரோடையும்
கொள்ளையிடும் காட்சியால்
கொண்டல் பரவசமாக்க
துள்ளிடும் இளமையோ
தூதொன்றை ஏற்குது
உள்ளங்கள் ஒன்றாகி
உருகிதான் போகுது

முடிவில்லா மலைமுகட்டை
மூடிடும் மேகங்கள்
வடிவழகில் மையலுறும்
வண்டுகளாய் நின்றிட
கொடியொன்று அசைந்து
குழப்பத்தை விளைவிக்க
நொடியொன்றை வீணக்காது
நெஞ்சோடு சாய்ந்தாளே

வெள்ளி, அக்டோபர் 4

வெற்றிக் கழகம்

















கூத்துக் கட்டியவன்
குறைகளை களைவதாய்
கூட்டத்திடையே சூளுரைத்தான்

வசனங்கள் வசீகரிக்க
விண்ணதிர கைத்தட்டல்
மகிழ்ந்தது மக்கள் மட்டுமல்ல

கனவு வளர்த்தான்
கறுப்பை செலவளித்தான்
காசுக்கு கூட்டம் சேர்ந்தது

பலம் வாய்ந்தவனென
பத்திரிக்கைகள் புல்லரித்தன
பகற்கனவு தொடர்கதையானது

புதிய வரவாய்
வெற்றிக் கழகம்
போற்றிப் பாடுமா தமிழகம்

அரிதாரங்களாய்
அவையடக்கம் அறிந்து
அமைதி காத்தவர்கள்

புயலாக வருவதாய்
புழுதியை கிளப்ப
புலிகள் உறுமுகின்றன

மக்களுக்கு
தையல் இயந்திரமும்
தரை டிக்கெட்டும் கொடுத்த

வள்ளல்
ஊழல் பெருச்சாளிகளிடம்
ஒரு சீட்டுக்கு மண்டியிடுவாரா?

கழகங்களில் ஒன்றாய்
கடைச் சரக்கை விற்க
கபட நாடகம் நடத்துவாரா?

ஜோசப்பின் தேசமல்ல
என்றபோது
ஓசன்னா என முனுமுனுக்காதவனா

உழைக்கும்
உங்களை இரட்சிக்க
ஓடோடி வருவான்

ஆட்சி அதிகாரம்
அன்னமிடும்
அட்சய பாத்திரமா

அவர்கள் சொத்தை
நூறாயிரம் மடங்காய்
மாற்றும் தந்திரமா

என்ன செய்வான்
எப்படிச் செய்வான்
ஏதாவது சொன்னானா?

மக்கள் சேவை
மகுடம் தரித்த
தொழிலாக மாறியதாலும்

கொள்ளையடித்தாலும்
குற்றமில்லை என்று
நீதியரசர்கள் தீர்ப்பெழுதுவதாலும்

வெற்றுக் கூச்சலோடு
வெற்றிக் கழகமென வருகுது
விழிப்பாயிரு தமிழா…

வியாழன், செப்டம்பர் 12

திருட்டு

 


ரூ,1500

ரூ. 5000 ஆனது
விலைவாசி அல்ல

28 டாலர்
72 டாலராக மாறியது
இலாபமல்ல

ரூ.1500
மின்சார கட்டணமல்ல
72 டாலர்
நிலக்கரியின் விலையுமல்ல

ரூ.61832 கோடி கடனில்
ரூ.15977 கோடி மட்டுமே
வங்கியால் வசூலிக்க முடிந்தது

10 பேர் வாங்கியதை
ஒருவர் மட்டும் தீர்த்த கதை
தீர்ப்பாயம் மட்டும் அறிந்தது

மூலதனம் குவிந்தாலும்
முதலிடத்தை தவற விட்டான்
ஹிண்டன்பார்க் அறிக்கையால்

களவாடப்படுகிறது
களவெனஅறியாது – மக்கள்
கவலைக்கடமான நிலையில்

வாக்கு அரசியலில்
வாய்கரிசி மக்களுக்கு
ரூ,500 அல்லது ரூ,1000

மக்களாட்சியில்
இராசராசன் குவிப்பது
கோடிகளில்

கட்டணங்கள் உயர்வது
கார்ப்பரேட்டுகள் கொழிக்க
கட்டாயமாக்கப் பட்டவை

சட்டங்கள்
சாமனியர்களின்
சமதர்ம வாழவிற்கல்ல

சட்டப்படி கொள்ளையிட
சமூகம் வேடிக்கைப் பார்க்க
சரித்திரம்

அதிகார அமைப்புகள்
ஜனநாயக தூண்கள்
அனைவருக்குமானதல்ல

திருட்டு தொடர்கிறது
உபா, குண்டர் சட்டங்கள்
ஒன்றும் செய்யவில்லை

அது அப்படிதானென
அவரவர் ஏற்றுக் கொண்டனரா
அதை மாற்றுவதெப்படி

                                        என யோசிக்கும்



புதன், செப்டம்பர் 4

முப்பாட்டன் முருகன்
















தென்னாடுடைய சிவன்
எந்நாட்டவருக்கும் இறைவனானதால்
முப்பாட்டன் முருகனுக்கு
முத்தமிழ் மாநாடு

சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும்
அக்கக்காய் ஆய்ந்த
நக்கீரனுக்கு ஈடில்லை என்பதால்
தக்கதொரு வாய்ப்பிழக்க

இயலிசை நாடகமென
இகலோகத்திற்கு வாழ்வளிக்கும்
சரஸ்வதியை - சபதமெடுக்கும் போது
சமாளித்துக் கொள்ளலாமென்று

சிந்தையில்லா அரசு
சந்தையில் இராமனுக்கெதிராய்
தந்தை சிவனைத் தவிக்க விட்டு
கந்தனைக் கவசமாக்கிக் கொண்டது

அரசியல் சாசன
அடியொற்றி
ஆரம்பித்தனர் மாநாடு – ஆம்
அறுமுகனை வணங்காதவரெல்லாம்
                                    …………….. தமிழரல்ல

சொல் வழக்கு
சொலவடையில்
செந்தமிழ் செழித்திருக்க
சேயோனும் வாழ்ந்திருந்தான்  

கல்லில், ஏட்டில்
எழுத்தாணிகள்
எழுதி வளர்த்த தமிழ்
காணாது போமோ

அசை, சீர், சொல்லென
அலசி ஆய்ந்த
தொல்காப்பியனுக்கு
தொகைகளை கற்றுத் தந்ததாரோ

சுடலை மாடனும், ஐயனாரும்
இசக்கியும், பேச்சியும்
மாரியம்மனும், பச்சைம்மாளும்
ஊருக்கு வெளியில் உக்கிரமாய்

கருப்பசாமி, முனியாண்டி
நீலியும், வேடியப்பனும்
தமிழெனும் ஆகமத்திற்குள்
அடைபடாத காரணத்தால்

ஆயிரம் கோடிகள்
அறநிலையத் துறையிடம்
எங்ஙனம் சிலவழிப்பதென
எழுதிய தீர்ப்பு

தமிழரைப் பிரிக்கவேத்
தடத்தினை உருவாக்கியது
தர்க்கம் ஏதுமின்றி
தந்தனத்தோம் என்றது அரசு

பார்பனரல்லா இயங்கங்கள்
பல்லிளித்து எழுதியப்
பொழிப்புரையில் ஒன்று
ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இட ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு
கோவணாண்டிகள் கேட்க
முருகனடிமை என்கிறது அரசு

இறை தூதனாய்
இயேசும் அல்லாவும்
இதயங்களை கவர்ந்தாலும்
அவர்கள் தமிழரில்லை

பறையடித்து
இறையாண்மை கொன்ற
திராவிடத் திரிபுகளை
தீர்க்கமாய் எதிர்த்திட

தமிழ் கடவுள்
உலகைச் சுற்றி
ஒருபழத்திற்கு ஏமாந்ததை
உணரும்படிச் சொல்லுங்கள்

மாட மாளிகைகள்
அதிகாரத்தின் குறியீடு
மானுடம் ஏமாற
அம்மதங்கள் தேவையா?



புதன், ஜூன் 12

உன் பார்வையின் பொருள்

 



தொல்காப்பியத்தில்
தேடத் தொடங்கினேன்
இலக்கண விதிகள் – பார்வைக்குத்
தட்டுப்படவில்லை

சங்க இலக்கியத்திலும்
சதுரகராதியிலும்
சுழன்றுத் தேடினேன்
சரியான விளக்கங்களில்லை

வள்ளுவன், கம்பன்
வகைவகையாய் வர்ணித்ததை
பாரதிதாசன் - புதுக்
கவிதையில் வடித்திருந்தாலும்

ஒவ்வொரு பார்வைக்கும்
ஓர் ஒற்றுமையுமில்லாது
ஓராயிரம் பொருளிருப்பதாய்
உள்ளுணர்வு உரைத்ததால்

புதையலைத் தேடுவது போல்
பார்வையின் இலக்கணத்தையும்
பாவலரின் விளக்கத்தையும்
பலவிடங்களில் தேடினேன்

மாயகோவ்ஸ்கியும்
பாப்லோ நெருடாவும்
தேடித்தேடி எழுதியும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

பலநூறாண்டுகள்
பார்வை பரிமாற்றம்
பல்பொருள் அளித்திருக்கலாம்
ஆயினும்

உன்விழித் தாக்க
என்னுள் அதிர்வுகள்
ஏழெட்டு ரிக்டரென
காதல் கடவுள் கணித்ததால்


தடுமாறும் அன்பன்
அ. வேல்முருகன்


சனி, ஜூன் 1

ரஃபா









அவர்கள்
எங்க வீட்டை
குண்டுகளால் அழித்து விட்டார்கள்

புழுதிப் படிந்த உடலோடு
குருதி வழிய
புலம்பிச் செல்பவள்

அயலகத்து குழந்தை யென்று
தியானத்திலமர்ந்து
கடந்துச் செல்லாதீர்கள்

எதற்காக எனவறியாது
யாராலெனப் புரியாது
குழந்தைகள் மரணிக்கின்றன

அதே மதவாதம்
எதேச்சையாக
எங்கும் நிகழலாம்

அதிகார போதையில்
ஆங்காங்கு பிரித்தாளும்
ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்

வேட்டுச் சத்தம்
கேட்டுக் பழகியிருக்கலாம்
வாழ்ந்து பாருங்கள்

சிறுச் சத்தத்திற்கு
மரணத்தை எதிர் நோக்கி
திடுக்கிட்டெழும் சிறார்கள்

ஐந்து இலட்சம் குழந்தைகள்
ஐயோ……….
ஆரும் கேட்பாரில்லை

ஐக்கிய நாடுகள் சபை
ஆட்சியாளர்கள் சார்பாக
இரைஞ்சுவதாக நடிக்கிறது

ஹார்வர்ட் பல்கலை மாணவர்கள்
பாதகை தாங்கி – உலகை
பார்க்கத் தூண்டுகிறார்கள்

விடுதலை தாகத்தோடிருந்தவனா
கொலைகளத்தை விரிவுப்படுத்தி
சாத்தானாக மாறிவிட்டான்

இறைவனால் படைக்கப்பட்ட
இந்த இனம் - யாருக்கு
இறப்பைக் காணிக்கையாக்குகிறது

அகதியாய் முகாம்களில்
ஆயினும் வான்தாக்குதலில்
ஆயிரமாயிராய் கொல்லப்பட

நிலத்தின் எல்லையா,
மதத்தின் தேவையா
இனத்தின் மீதான வெறுப்பா

குற்றம் புரியாத
குழந்தைகள் கொலையாக
குற்றம் புரிந்தவன் யார்?

அமெரிக்காவை
ஐநா சபையை ஆட்டுவிக்கும்
இஸ்ரேலியர்கள்

உளவில், சிந்தனையில்
உயர்ந்தவனாய் வேடமிடலாம்
ஆயினும் மானுடத்தின் எதிரிகள்

நீதி வேண்டுவது
“ரஃபா” வுக்கு மட்டுமல்ல
மானுடத்திற்கு



அ. வேல்முருகன்

ஞாயிறு, மே 19

வல்லினக் காதல்


 

ன்னியின் வேண்டுதல்
காளையால் கைகூடுமோ
ந்த காதல்
காக்க வழிகாட்டுமோ
கண்வுடன் அழைத்து
காதலி கைப்பற்றுமோ
கலந் மனங்கள்
களிப்புற்று வாழ்ந்திடவே
கட்டுப்ட்ட காளையாய்
காதலன் வருவானா
காதல்பற் மெல்லினத்தை
கலப்பானோ வல்லினமாய்

சனி, மே 18

கண்மூடும் வேளையிலே





கண்மூடும் வேளையிலே
கனவில் வந்தவளே
பண்பாடி அலைந்தோம்
பசுமைச் சூழ்வெளியில்
தண்நிலவு நீண்டிருக்க
தந்தநின் முத்தங்கள்
மண்ணுலகில் உன்னிடமே
மறுபடியும் வேண்டுகிறேன்

தண்டையிடும் சத்தம்
தளிர்நடை என்றானதே
சண்டையிடும் மனதும்
சங்கமத்தை வேண்டுதே
தொண்டுச் செய்ய
தோழமையை விரும்பும்
வண்டு பூவிடம்
வனைந்த பாவிது

கண்விழிக்க கலைந்தன
கண்மணி யாரென
அண்டை அயலகத்தில்
ஆர்வமாய் தேடிட
எண்ணிய வண்ணம்
எவரும் இல்லை
கண்ணூறுப் பட்டிருக்கும்
காத்திரு காதலிக்க

செவ்வாய், மே 14

ஜெய்ஸ்ரீராம் - நல்லகாலம் பொறக்குது




ஹிஜாப் – மதஉரிமை
திருநீறு – இந்துத்துவம்



வெறுப்பை விதைக்கும்
வேத விற்பன்னர்களோ
வேண்டாத மதவாதிகளோ
மேற்கூறியவை

நாலு வரியில்
நால் வர்ணத்தையல்ல
நாட்டை பிளவுபடுத்த
முகநூலில் வெளியிட்டவை

பொய்யும் புனைச்சுருட்டும்
பிழைப்பாய் கொண்டவர்கள்
வாழ்வை அழிக்க
வதந்தியை பரப்பினாலும்

ஆய்ந்தறியும் திறன்
அறிவுடைத் தமிழனுக்கு
ஆதியிலிருந்து உண்டென்பதால்
அடியிற் காணும் விளக்கங்கள்

மடிசார், பஞ்சகச்சம்
கொடியிடை மறைக்க
குற்றமேதுமில்லை

கலாச்சாரத்தின் அடையாளமாய்
காணும் ஆடைகளை
கலவரமாய் மாற்றுவதேன்

ஜப்பான், பூட்டான் ஆடைகளை
சீர் செய்ய கிளம்பாமல்
ஹிஜாப் –ல் நுழைவதேன்

பிடி சாம்பலாய்
பிணமான பின் மாறும் உடலில்
தரிக்கும் திருநீறு

சைவத்தின் அடையளாமாம்
இந்துத்துவம் – இங்கே
வந்துதிப்பது எதற்காக

திருமண், சந்தனம்
குங்குமம் குறியீடுகளாய் இருக்கலாம்
குழப்பம் விளைவிக்கவல்ல


புர்கா – மதஉரிமை
காவித்துண்டு – மதவாதம்



பூணூல், உச்சிக்குடுமி
சர்வாதிகார சாதியாய் இருக்கட்டும்
சமுகத்தை பிரிக்காத வரை

மங்களூர் கலவரம்
மானுடத்தின் நிலவரமா
மதவாதத்தின் எதிர்வினையா?

கருப்பு திரவிடமாய்
சிகப்பு கம்யூனிசமாய்
பச்சை விவசாயமாய்

மஞ்சள் மங்களமாய்
மாநிலத்தில் இருக்கையில்
காவி கலவரமாவதேன்?

ஹலால் உணவு - மதஉரிமை
வெஜிட்டேரியன் உணவு – பார்பனியம்



கிடைத்ததை உண்டு
காலத்தை வென்றவன்
ஹலால் அசைவமென்கிறான்

கனியோ காய்கறிகளோ
மனிதன் உண்ண
மண்ணில் விளைந்தவை

குதிரைகளை கொன்று
அசுவமேத யாகம் வளர்த்தவர்கள்
அக்லக்கை கொன்று – தாங்கள்
அசைவமல்ல என்கிறார்கள்

ஆடு, மாடு, கோழிகள்
அறுத்து ஏற்றுமதி செய்பவர்கள்
அவாள்களாக இருக்க

அடுத்தவன் உண்பதை
அவமானமாக சொல்பவனின்
அழுக்கை யார் சொல்வது

மச்ச, கூர்ம, வராகம்
அவதாரங்களா….. மாமிசமா ......
கொல்கத்தா பிராமணனுக்கும்
ஆமைக்கறி சீமானுக்கும் தெரியாதா


அல்லாஹூ அக்பர் – மதஉரிமை
ஜெய்ஸ்ரீராம் – தீவிரவாதம்


இறைவனே மிகப் பெரியவன் எனும்
இஸ்லாத்தின் அல்லாஹூ அக்பரை
இவர்கள் ஏன் சீண்டுகிறார்கள்

ஓம்….
ஓங்காரமாய், பிரணவமாய்
ஒலிக்க ஒரு உபவத்திரமில்லை

ஹரஹர மகாதேவ
அரோகரா, கோவிந்தா ஒலிகளில்
பக்தியே தவழ்ந்தது

புத்தம், சரணம், கச்சாமி
பரலோகத்திலுள்ள பிதாவே
அல்லாஹூ அக்பர்
ஒன்றிணைந்தே இருந்தோம்

மகமாயி, மாரியாத்தா
முருகன், சிவனை
முடக்கவா ஜெய்ஸ்ரீராம்

ஜெய்ஸ்ரீராம் ஒலித்தவுடன்
ஜெக்கம்மா
கெட்டகாலம் பொறக்குது என்றாளே?

புதன், ஏப்ரல் 17

தேர்தல் 2024










நாட்டின் வளங்களை
நாலு பேருக்கு விற்க
நாடி வருகிறார்கள்
நாள் 19 ஏப்ரல் 2024

பத்தல பத்தல
பத்தாண்டுகள் என்றே
பகற்கனவோடு வருபவனை
பாராள அனுமதிப்பாயா?

அக்மார்க் இந்துக்கள்
ஆட்சிக் கட்டிலை
அயோத்தி இராமனிடம் கேட்காது
அர்பன் நக்சல்களிடம் கேட்பதேன்

பொற்கால ஆட்சியாளர்கள்
பொய்மானைத் தேடி
சரயு நதிக்கரைத் துறந்து
இராவண தேசம் வருவதேன்

கோயபல்ஸ் கொள்கை
பொய்களை உண்மையாக்குவதில்லை
உண்மையாய் இருக்குமோ என
உன் உள்ளுணர்வைத் தூண்டுவது

வாக்குறுதிகள்
வெற்றுக் கூச்சல்கள்
நிறைவேற்ற அவர்கள்
மக்களில் ஒருவரல்ல

மாட்சிமை தங்கிய
மன்னராய் வாழ்பவர்கள்
முடிச் சூட்டியப் பின்
மாக்களாய் உனை நடத்துபவர்கள்

பக்தியில் பசுவைத் தொழவும்
புத்தியில் அக்லக்கைக் கொல்லவும்
சிந்தனை உனக்கிருந்தால்
நந்தனை எரித்த வாரிசு நீயே

சனநாயகத் தூண்கள்
வீழ்ந்து கிடப்பதை
எழுப்புமோ உன்வாக்கு
சவக்குழியைதான் ஆழமாக்கும்

நோட்டாவைப் பலப்படுத்திட
நோஞ்சான் சனநாயகம்
விரீட்டெழுந்து
விடியலைத் தருமா?

பதிவாகாத வாக்கும்
பயனற்ற நோட்டாவும்
பெரும்பான்மை என்றானால்
பாசிசமே வெல்லும்

மின்சார விளக்கணைத்து
மெழுவர்த்தி ஏற்றியவர்களே
கைத்தட்டி கொரானாவை
கொல்ல வழிகாட்டியவர்களிடம்

மொழியொரு கருவி
முழக்கமிடும் இனத்தின் அடையாளம்
ஓட்டுக்கு முனகும் உனக்கோ
அவ்வுணர்வு புரியாதெனச் சொல்

வாங்கும் வரிகளை
வாரிவழங்கும் வள்ளலாய்
வடிவமைப்பட்ட கதைகள்
வந்த பெருமழையில் கரைந்தன

ஊழலற்ற உத்தமர் பட்டம்
உச்சநீதி மன்றம் உத்தரவிட
பாரத வங்கி
பல்லிளித்து வழங்கியது

கட்சிகளை உடைத்து
ஆட்சி அமைப்பது
அவர்களுக்கு அத்துபடியான பின்
ஐந்தாண்டு தேர்தல் ஏன்

கட்டளைகளுக்கு பணியாதவர்களை
காராகிரகத்தில் அடைக்க
பூஜ்ய மதிப்பெண்கள்
ராஜ்யத்தோடு ராசியாகி விட்டன

ஓய்வுப் பெற்ற நீதியரசர்கள்
உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கிறார்கள்
எதற்கென்று
யாருக்கும் தெரியவில்லை

ஈ.டி, ஐ.டி., சி.பி.ஐ
நிர்வாகங்கள்
நேர்மை துறந்ததை
நெஞ்சுயுர்த்தி சொல்கிறது

ஏறிய விலைவாசியை
தேடும் கருப்புப் பணத்தில்
வேலைவாய்ப்பை உருவாக்க
தேனாறும் பாலாறும் ஓடுமா

செய்தி ஊடகங்கள்
சப்பாணி ஆனதை
அண்ணாமலை அறிவிக்க
சமூக ஊடகங்கள்தானே மறுக்கிறது

இவையெல்லாம் அறிந்ததால்
“ஏப்ரல்”, “மே” யில்
ஏமாறாதே என்கிறேன்
ஏற்பவர் ஏற்க!! ஏற்காதவர்??!!!!

திங்கள், ஏப்ரல் 1

டி.எம். கிருஷ்ணா

 




கர்நாடக சங்கீதம்
கருவறை பொக்கிஷமா
காப்பாற்ற வேண்டுமென
கதறுதே ஓரு கூட்டம்

ரஞ்சினியும் சுதாக்களும்
ராக ஆலாபனையில்
ரசாபாசம் உள்ளதென்றா
ரசிகையாய் ஆட்சேபிக்கின்றனர்

சுருதிபேதம் உள்ளதாய்
துஷ்யந் ஸ்ரீதர் உரைப்பது
சுத்த கர்நாடகமாய் இல்லாது
சிந்தித்து செயல் படுவதா?

தாளகதி மாறியதோ
மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணம் வீசுமென்று
மேடையில் கலகக்குரலோ

இராமா ஏழுந்திருவென
அட்சர சுத்தமாய்
அவாள் மட்டும்தான்
ஆலாபிக்க முடியுமா

இசை மக்களுக்கா
இல்லை கலைக்கா
கோபுர வாதிகளுக்கா
கோபுரத்தின் உள்ளிருப்பவருக்கா

இராமனை பாட வேண்டியவன்
இராமசாமியை பாடியதாலும்
சலாத்துல்லா சலாமுல்லா என்று
இசையை இணைப்பதாலும்

சங்கீத கலாநிதி
அகௌரவம் ஆனது
சங்கீத வித்வத் சபை
சந்திக்கு இழுக்கப்பட்டது

சந்தைக்காக
அமெரிக்கா, பிரான்ஸில்
அரங்கேற்றம் செய்பவர்கள்
காசுக்குதானே விற்கிறார்கள்

கலை
வர்க்க பேதமற்றது
கடைக்கோடி ரசிகனின்
ரசனையை உயர்த்துவதும் அதுவே

பண்ணைபுரத்து ராசைய்யா
பாடியது மக்களிசைதானே
மாநிலமல்ல மண்ணுலகமெல்லாம்
மருகி உருகுதுதானே

உயர்குடி இசையை
ஊருசனம் ரசிக்கல
உன்சாதி மட்டுமே
ஒய்யாரமா நினைக்குது

ஒப்பாரி வைக்கும்
ஒன்றுமில்லா இசையை
ஒருவருக்கும் ஓதாது
ஒளித்து வைப்பதால் உயர்ந்ததா?

பொதுவெளியில்
பொற்காசு கிடைக்குமென்று
பிதற்றலை பரப்புவர்கள்
புனிதமென்று கூவுவதேன்

புறகணிப்பதால்
புனிதம் மீட்கப்படுமோ
புறகாரணிகள் வேறுவேறு
புறந்தள்ளுங்கள் இவர்களை

கற்றலுக்கு உரியவை
கலையும் அதன் நேர்த்தியும்
ஏகலைவன்
எப்போதும் கற்பவனே

ஏனோ
வர்ண பேதத்தை
வாழ்வில் நுழைத்து
வாராது காம்போதி என்றதை

ஆமோதிக்காது - கலை
ஆருக்கும் உரியது
அனைவரும் கற்கலாம்
அது கர்நாடகமாயிருந்தாலும்

இனப் படுகொலை
ஈவெரா வேண்டியதாய்
இட்டுக் கட்டும் காதைகள்
ஏராளமாய் கடந்தும்

பெண்ணடிமை விலக
போராடியப் பெரியாரை
பெண்ணே இழித்துரைப்பது
பேதமை எனினும் பொய்கள்தானே

ஆண்டைகளின் அதிகாரம்
ஆங்கு முடிவுற்றதால்
அவதூறுகளை
அள்ளித்தெளிக்கின்றனர்

அசாதாரணத் திறமையிருந்தும்
அங்கிகாரம் வேண்டி
அவாளாக வேடமேற்றதாய்…….
அதுவொரு விமர்சனம்

கொட்டு அடிக்க
கோமாதா தோல்
அக்லக்கை கொல்ல
கோமாதா புனிதமாகிறது

இந்த அரசியலை
இதுவரை பேசாதவர்கள்
சிந்திக்கச் சொன்னவர் என்றவுடன்
சினம் கொள்கின்றனர்

கலைஞர்களுக்குள்- இது
காலை வாரும் அரசியல்லல்ல
கற்றல் பரவலாக்குவதை
காயடிக்கும் அரசியல்

அ. வேல்முருகன்

 


புதன், மார்ச் 20

மேல்பாதி திரௌபதி




ஆறுகால ஆராதனையின்றி
அம்மன் அவதியுறுவதாய்
ஆங்கொரு புலம்பல்

அரவமில்லாது
ஆலயத்தை திறந்து
ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும்

பக்த கோடிகள்
பக்கம் வந்திடாது
பார்த்துக் கொள்ளவும்

காவல் தெய்வத்திற்கு
கட்டளையல்ல
காவலர்களுக்கு

மேல்பாதி திரௌபதி
நீதியரசருக்கு கட்டுப்பட்டு
சாதிசனத்தைக் கைவிட்டுவிட்டாள்

சூதாட்டத்தில்
சுற்றமும் நாடுமிழந்தாள்
பாண்டவரின் திரௌபதி

சாதிய வெறியட்டாத்தில்
சாத்தியக் கதவுகளைத் திறக்க
நீதிமன்றத்தையே நாடுகிறாள்

தீர்ப்பென்னவோ
வனவாசமாய்தான் இருக்கிறது
எக்காலத் திரௌபதிக்கும்

திறந்தவுடன் மூடி – யாரைத்
திருப்தி படுத்துகிறார்
நீதியரசர்

மாவட்ட ஆட்சியருக்கும்
காவல் கண்காணிப்பாளருக்கும்
தேர்தல் கவலைகள்

ஏற்றத் தாழ்வுகளை
மாற்ற முடியாத தெய்வங்கள்
நீதிமன்றத்தில் ஒளிந்து கொண்டு

தனக்கு பூசைகள் வேண்டுகின்றன
தங்களின் சமுகநீதியை 
தரமுயர்த்துவார்களா பக்தகோடிகள்?!

வெள்ளி, மார்ச் 1

மன்னிப்பு





மாறிடுமோ நடந்தைவைகள்
மன்னிப்பதால்
மறந்திடுவோமா

கொட்டிய வார்த்தைகள்
தேளின் வலியாக - சுண்ணாம்பு
விஷத்தை முறிக்குமோ

காயமோ வடுக்களோ
கண்களில் படும்போது
வலிகள் வந்துதான் போகும்

மனதும் மௌனமாகும்
கடந்து செல்லக்
கடினமாகும்

பகை வளர்த்து
பழியோடு வாழலாமா?
பண்பல்லவென மாறலாமா?

மறப்போம் மன்னிப்போம்
மனதிற்கல்ல
மாறாதத் தேவைக்கு

நெருப்பு

 


 

.

 





 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்

                                       குறள் 1104


தகதகவெனத் தகிக்கறாள்
தத்தையைப் பிரியும் பொழுதில்
அகலாது அருகிருக்க
அருஞ்சுனைக் குளிரைத் தருகிறாள்
தகனத் தட்பத்
தலைகீழ் நுட்ப மொன்று
இகத்தில் இவளுக்கு
இலகுவாய் வாய்த்த தெப்படி?

காதல் சின்னம்




ஷாஜகான் கட்டியக்
கல்லறையா
சகலரும் எண்ணும்
இதய வடிவமா?

கட்டி அணைத்து
கனன்ற வெப்பத்தை
கட்டிலில் தணித்து
தொட்டிலில் தாலாட்டுவதா?

கணையாழி அணிவித்து
காதல் சின்னமென
கல்லறை வரை
கழற்றாமல் காப்பதா?

ஒற்றைப் பூவை
ஒய்யராமாய் சூட்டி
ஒப்படைத்தேன் எனையென்று
ஒன்று படுதலோ?

எக்காலமும் நினைவிலிருக்க
எதிர்பாரா முத்தமொன்றை
ஏந்திழைக்கு அளிக்க
எண்யெண்ணி மகிழ்வதா?

அல்ல அல்ல
அர்பணிப்பாய்
ஆயுள் முழுவதும்
அவளோடு பயணிப்பது

மதம்






அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது

பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது

மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது

மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது

குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது

நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது

வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது

வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே

திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது

நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது

ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது

பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது

குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது

பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது

அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது

பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது

கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு

வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்

நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்

மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்

சனி, பிப்ரவரி 10

வலி

      




பார்வையால் வீழ்த்தி 
வார்தைகளால் வாட்டிடும்
ஏரார்ந்த கன்னியவளை
எங்ஙனம் பகைத்திடுவேன்

அத்தனை ஆசை
அவளிடம் கொண்டதால்
சித்திரத்தை பழிக்காது
சிரித்துச் செல்வேன்

ஊடல் கொண்டதில்
ஓர் இடைவெளி
வாடல் தொடராதிருக்க
ஐக்கியமாவதே வழி

அன்பைச் சோதிக்க
அவள் உதிர்ப்பவை
அறமற்றது என்பதால்
அமைதி காத்திடுவேன்

இடைவெளி காலத்தில்
ஏங்கிய நினைவுகளால்
கடைச்சங்கப் புலவன்
கன்னியிடம் ஏதோ உரைக்க

உண்மையா பொய்யா
உதடுகள் படபடக்க
ஓராயிரமுறை புலம்பியவளிடம்
ஒன்றுமில்லையென நகர்தேன்

வஞ்சியை வஞ்சிக்கல்ல
வலிதனை உணர்த்திட
வாடியவளுக்காக வாடினேன்
வாடாதிருக்க பாடினேன்.

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...