திங்கள், நவம்பர் 23

இது காதலா?!

 










மணமாகாத
மணம் வீசும் மங்கை நான்
அவன் மன்னவன்தான் – என்னவனல்ல
ஆனாலும் யாரும் நெருங்கவில்லை 

என்னவன் இவனென
எல்லையைத் தீர்மானிக்க
எனக்குச் சுதந்திரமிருந்தாலும்
இணை இவனெனச் சட்டப்படி யாருமில்லை
 


எனினும் என் மனதை
எனை அறியாமல்
கைப்பற்றி விட்டான்
கோரிக்கை ஏதும் வைக்காமலே

எங்ஙனம் நிகழ்ந்ததென்று
எனக்கோ புரியாத புதிர்
எனினும் அவன்
ஆவலைத் தூண்டுகிறான் 

யாரைத் தேர்ந்தெடுப்பதென்பது
என் விருப்பமென்றாலும்
ஏனோ அவன் நினைவு
என்னைத் தடுமாறச் செய்கிறது
 

காத்திருக்கக் கட்டளையில்லை
களவியல் காதலியென்றோ
வருங்கால வாழ்விணையென்றோ
வரம்பேதும் இல்லை
 

என்றோ தீர்மானித்த
என் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்றபடி ஒருவன்
எதிரே இருந்தாலும் ஏற்க மறுக்கிறது
 

அவனுக்கு மட்டுமே என்ற
அர்ப்பணிப்பு நிலை
ஆழ்மனதில் படிந்திட
அகற்றிட இயலவில்லை


நிறை குறைகள் இருந்தாலும்
நெஞ்சம் நிறைந்ததனால்
உறுதியான உணர்வுகள்
உரக்கச் சொல்வது - காதலா?!

 

அ. வேல்முருகன்

ஞாயிறு, நவம்பர் 22

தீபமேற்று

 










தூங்கா நகரமருகே
தூமணி மாடத்தில்
தீபமேற்றத் தீர்ப்பு

தாய் மாமன் உறங்கிட
திருப்பாவை
திருத்தப்பட்டது

விமர்சனம் – வியாக்கியானம்
தடை அளிக்கப்பட்டது
தடையின்றித் தீபமேற்ற

காற்றில்லை
கரெண்டில்லை என்பதால்
கடைகோடி மன்றமும்

விடிவெள்ளி போன்று
விளக்கேற்று என்றே
விசில் ஊதிவிட்டது

இந்துக்கள் ஒன்றுபட்டனர்
மனிதர்கள் பிரிந்தனர்
ஆறுமுகத்தான் வருவானா

மயிலேறி வாராததால்
மாண்பமை மன்றம்
மாண்பைக் காப்பாற்றிதோ!!

அ. வேல்முருகன்

 

பிரிவு - இயல்பா ? !

 

























நீளும் உறவில்
நீயின்றி நானில்லை
ஆளுகை யாரென
அனத்துவதில் அர்த்தமில்லை

தனித்திருக்க இன்பமில்லை
தாயே சரணமென
கனிந்திருக்க அரும்பும்
காதல் கசந்ததில்லை

வாதங்கள் பாதகமா
வாட்டும் கேள்விகளால்
ஆதாமின் பிரிவை
ஆங்கே மொழியாதீர்

   எதிர்பார்ப்பு ஏதோதோ
   எனினும் கேட்டிடு
   எல்லாமே நிறைவேறா
   இருப்பினும் உடனிரு

   பிரிவு இயல்பென
   பிணைப்பின்றி இருக்காதே
   உரியப் பொழுதில்
   ஊனத்துடன் வாழாதே

   பேசிக்கொள்ள
   பேதம் விலகும்
   ஏசிக்கொள்ள
   எலியும் பூனையாகும்

   உயரமதை எட்டிடவே
   உதவாத உறவுதனை
   தயக்கமின்றித் தள்ளியே
   தனித்திருப்பது சுதந்திரமா?

   இணைந்திருக்க விட்டுக்கொடு
   இயலாதெனில் அமைதியாயிரு
   திணையில் உயர்திணையெனில்
   திருத்திக்கொள் தீஞ்சுவையாய்

   ஆளுக்கொரு மூலையிலே
   அவரவர் வேலையிலே
   நாளெல்லாம் போகையிலே
   நானெங்கு பேசிடுவேன்?

   மானுட வாழ்வில்
   மனதிற்குள் பேசியா
   கானகப் பரப்பில்
   காலம் கழிப்பேன்?

   நீ பேச நான்பேச
   நீளும் கதைப்பிலே
   ஆவேச வேளையிலே
   அடங்கி நிற்கையிலே

   அந்நினைப்பில் அந்நாளும்
   அலுக்காமல் சென்றிடும்
   அந்தியில் கைகோர்த்து
   அளவளாவிட அகமகிழ்ந்திடும்

   சிந்தை எல்லாம்
   சிரிப்பும் துடிப்புமானால்
   நிந்தனை ஏது?
   நிம்மதிதானே, கூறு!

 

    அ. வேல்முருகன்




வியாழன், நவம்பர் 19

கொற்றவனை வென்றவளே





சிலையே செந்தமிழே
சிற்பியாய் செதுக்கவா
கலையா நினைவுகளில்
காதலைச் சொல்லவா

இலைமறை காய்போல
இச்சொந்தம் இருக்குமோ
மலைநாடன் மாலையிட
மாநிலம் அறியுமே

ஏழ்பிறப்பும் என்னிணை
நீயென்று ஏடெழுதவா
யாழிசைத்து யௌவனத்தின்
இரட்சகியாய் உனையாக்கவா

வீழ்ந்தாலும் எழுவேனென
வித்தையினை நிகழ்த்தியே
வாழ்வின் நொடிகளில்
வரலாற்றை உருவாக்கடா

நெஞ்சில் நிறைந்தவனே
நெடும்பயணத் துணையே
எஞ்ஞான்றும் நீங்கேன்
என்னுயிர் உள்ளவரை

கொஞ்சங் கொஞ்சமாய்
கொற்றவனை வென்றவளே
நெஞ்சு கலந்தபின்
நெஞ்சக்கூடு நீதானடி


அ. வேல்முருகன்



வியாழன், நவம்பர் 12

தேன்நிலவு

 














மானே, தேனே,
தென்றலே எனக் கொஞ்சி
தேனிலவைப் பார்த்திருக்க
ஆறு மாதமானது என்றனர்.

தேனும் பாலும்
தேவைக்கு அதிகமாக
திக்கற்றவர்களுக்குக் கிடைக்குமென
திடுக்கிடும் செய்தி! 

அன்னியோன்யம் ஆவதற்குள்
மின்சாரம் இல்லை.
இன்னதென்று அறிவதற்குள்
ஏகப்பட்ட விலையேற்றம்! 


உன்மத்தம் தெளிந்தது,
ஊரும் அறிந்தது.
ஒய்யாரக் கொண்டையில்
ஒளிவட்டம் பிரமையென்று

கன்னியிடம் கன்னமிடாது
கலெக்டரிடம் வைத்திட,
புன்னகையோடு புகாரில்லை எனப்
புறந்தள்ளுகின்றனர். 

காற்றில்லை, “கரண்டு” இல்லை.
“சோப்பு”, “ஷாம்பூ”வால் ஆற்றில் நுரை.
கடந்த ஆட்சியே காரணம்,
காழ்ப்புணர்ச்சியால் அவதூறு! 

பாட்டிலுக்கு இருபது ரூபாய்,
போதைக்கு மெத்தப்பெட்டமைன்.
ஓட்டாண்டிக்கு உதை,
உழவனுக்கு ஒன்றுமில்லை.

கதைகளும் கருத்துகளும்
கண், காது, மூக்கோடு
கண்டம் விட்டு,
கண்டம் கடந்தாலும், 

அறமற்ற ஆட்சியில்
ஆண்மையுள்ள முதல்வன்
அத்தனையும் பார்த்து
அமைதி காப்பான் எனில், 

ஐந்தாண்டும் தேனிலவு!
ஐரோப்பாவில் வலம் வருவர்.
ஐந்திணையும் அல்லலுறும்.
ஐயகோ! தமிழன் நிலை!

 

அ. வேல்முருகன்


திங்கள், நவம்பர் 9

நட்டம் - நாற்பத்து மூன்று காசுகள்

 












நாற்பத்து மூன்று காசுகள்
நட்டம் என்பதால்
நாளும் கிழமையுமாக
நசுங்கிச் சாகிறோம்! 

இந்திய ஜனநாயகத்தில்
இங்கிதமாகச் சொல்வதென்றால்
மூன்றாம் தரக் குடிகள் – அல்ல,
“திமாங்கி நக்சல்கள்!”

குறைந்தபட்சக் கட்டணம்
எழுபதுகளில் இருபது காசுகள்;
இன்றோ ஐந்து ரூபாய் – எனினும்
நட்டக் கணக்கு!

முதலீட்டுச் செலவுகள்
80 ஆண்டுகளாய் அதிகரித்தாலும்,
நாற்பத்து மூன்று காசுகள்
நட்டம் குறையாமல் பார்த்துக் கொண்டனர்!

ஓட்டுப் பொறுக்குபவனும்,
ஓட்டுக்குக் காசு வாங்குபவனும்
ஏன்? எதற்காக நட்டமென
என்றாவது யோசித்ததுண்டா?

விரைவு இரயிலை
அதிவிரைவு என்றறிவிக்க
மறைமுக விலையேற்றம்!
மக்கள் ஊமைகள் என்பதால்

இராசாக்களுக்கு இராஜதானி,
சத்தானவர்களுக்கு சதாப்தி, தேஜஸ்,
புதிய பணக்காரர்களுக்கு
வந்தே பாரத் கொடுக்கும் அரசு!

சாதாரணப் பயணிகளுக்கு
மூன்று பெட்டிகள்,
நடைவழிக் கழிவறை,
சிறைகளில் அடைபட்ட பயணங்கள்!

நகரங்களைக் கட்டமைக்க
நாற்புறமும் வந்து உழைத்த
அசாமியர்கள், பீகாரிகள்
அல்லல்பட்ட காட்சிகள்!

இந்து இராஷ்டிரத்தில்
சூத்திரர்களின் நிலை இதுவென்ற
சூழ்ச்சி அறியாதவர்களின் முழக்கம்!
பாரத் மாதா கி... ஜே! 

ஜப்பானிய இரயிலின் வேகம்
1960-இல் மணிக்கு 320 கி.மீ.ல் ஆரம்பிக்க,
சீனா, பிரான்ஸ், ஸ்பெயின் – இன்று
மணிக்கு 500–600 கி.மீ. தாண்டுது!

இந்தியாவின் புல்லட் இரயிலின்
புறப்பாடு எப்பொழுதென்று
இந்திய இரயில்வேயிடம்
யாராவது கேளுங்கள்!

ஆங்கொரு குரல்:
தன்னிறைவுற்ற இந்தியா
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு
ரூ. 26,000 கோடிக்கு ஏற்றுமதி என்றே!

வார இறுதி நாட்களிலும்,
பண்டிகைக் கொண்டாட்ட நாட்களிலும்
பயணச் சிரமங்களைப்
பழகிக்கொண்டது பாரத தேசம்!

 

அ. வேல்முருகன்


ஞாயிறு, நவம்பர் 1

வந்தேறிகளின் நாட்டில்







வந்தேறிகளின் நாட்டில்
வந்ததொரு தேர்தல்
வாக்கு சேகரிக்க
வரிந்து கட்டின கட்சிகள்

பாரதத்தில் பார்க்காததையா
பலமிழந்த அமெரிக்காவின்
பாராளுமன்றத் தேர்தல் - நம்மை
பரவசப்படுத்தப் போகிறது

ஆட்சிக் கட்டில்
ஆட்டம் காணுமென்பதால்
ஆரவாரப் பொய்களை
அள்ளித் தெளித்தது ஆளும் கட்சி

கொள்ளை அடிப்பதையும்
காப்பீடு மறுப்பதையும்
எல்லையில்லா விலையேற்றத்தையும்
எடுத்தோதியது எதிர்க்கட்சி

அம்பலப்பட்ட ஆதங்கத்தில்
அரபுகளின் கூட்டாளி
அவனொரு தீவிரவாதி - என்று
அப்துல் எல் சையதுக்கு வசவுகள்

அமெரிக்கர்கள் அமெரிக்காவை
ஆள வேண்டும்
அரபு ஆப்பிரிக்கர்கள் – ஆள
ஆசைப்படக் கூடாதென்றனர்

தீவிரவாதிகளுடன் தொடர்பு
ஜிகாதிகளுக்கு ஆதரவு
அயலவன் ஆளுவதோ
ஐயோ, அய்யய்யோ என்றனர்

தேசபக்தி கொண்டவர்கள்
தேர்தல் காலங்களில்
முஸ்லிம்களை வெறுக்க
மக்களுக்குக் கற்பித்தனர்

எல்லையற்ற அதிகாரத்தால்
ஏகாதிபத்தியக் கனவுகளோடு
ஏவுகணைப் போரில்
ஏகப்பட்ட இலாபமிட்ட

அரசியலமைப்புச் சட்டம்
அதிகார மையத்தின்
ஆசைக்கு வளைந்து
ஆபத்தை உணர்த்திட

ஆங்குள்ளவர் மட்டுமல்ல
அவர்களின் நேச நாடுகளும்
அதிபரின் வரிவிதிப்புக்கு
அஞ்சி நடுங்கினர்

பெட்ரோல் டீசல் விலைகள்
போரின் விளைவுகள்
பொதுமக்களின் பற்றாக்குறைகள்
போடும் ஓட்டால் மாறுமா?

மாறாது என்பதை
மாமாங்கமா அறிந்திருந்தாலும்
மக்கள் ஜனநாயகத்தை
மாற்றி அமைப்பார்களா

நானூறாண்டு வரலாற்றில்
அடிமைகள் எழுப்பிய
அமெரிக்க தேசம்
அவர்களுக்குமானது தானே

அ. வேல்முருகன்  

சனி, அக்டோபர் 31

நோய்

 



 








அன்றன்று
அவன் முகங்காண
ஆயிரம் ஆனந்தங்கள்! 

அவன் முகங்காணா
அத்தனை நாட்களும்
மழை பொழியா கருமேகங்கள்!

நாளையும் வருவான்
நாளெல்லாம் கதைப்பான்
நகர்ந்துவிட்டால் தாகங்கள்!

வெறுமை சூழ்ந்து
விழியிமைக்க மறந்து
விடிந்ததும் ஏக்கங்கள்!

என்றென்றும் உன்னோடு
எந்நிலையிலும் பிரியாது
என் நோய் போக்குங்கள்!

 

அ. வேல்முருகன்

 

செவ்வாய், அக்டோபர் 27

பொங்கும் மனம்


 


 

 

 







மனங்கவர் கள்வன்

மாலையில் வருவான்
கனவுலகம் படைத்து
களிப்புறச் செய்வான்

நாட்கள் செல்ல
நாநிலம் அறிந்தது
நாட்டம் குறைந்ததோ?
நனவெனை வாட்டியது

சூட்டுமாலை வேண்டினேன்
சூழல்பல உரைத்தான்
வாட்டும் கேள்விகளால்
வதைக்க நினைத்தேன்

வரட்டும் வடிவழகன்
வாள்வீச்சு வார்த்தைகளால்
புரட்டிப் போட்டு
புலவிட எண்ணினேன்

ஒளிரும் கண்களில்
உருவான புன்னகையில்
“தளிரே!” என்றழைத்தான்
தன்னிலை மறந்தேன்

என்மனம் என்னை
ஏமாற்றிச் சென்றாலும்
பொன்னன் அருகாமையில்
பொங்கியது மனமே!


அ, வேல்முருகன்

 


திங்கள், அக்டோபர் 12

முத்தங்கள் - மூச்சடக்கவா?

 









முத்தங்கள் - மூச்சடக்கி
மோகனம் படிப்பதோ?
ரத்தங்கள் சூடேறி
ரசவாதம் நிகழ்த்துவதோ?

ஒத்திருந்து பொழிந்தே
ஒருமனப்படுவதோ?
பித்தம் தெளிவது
பிரிவினில் என்றாவதோ?

சித்திரத்தைக் கண்டவுடன்
சித்தம் கலங்கியே
நித்தம் வேண்டிடும்
நிலைதனைக் கொண்டதோ?

தித்திப்புப் பண்டமாய்த்
தினம்தினம் கிடைத்திட
யுத்தகள உத்திகளா?
யூகங்கள் வகுப்பதோ?

பத்தன், பாமரன்
பந்தத்தில் விழுந்திட
சத்தமின்றி முத்திரை
சாகசமாய் அளிப்பதோ?

கொத்தும் கிளிக்குக்
கொடுத்துச் சிவக்க
அத்துப்படியாக
அவளும் ஒத்துழைக்க

தனித்ததுவம் என்றே
தந்தவை போதாதென
தத்தையின் வித்தைகள்
“தா... தா...” என்றோதிட

மொய்க்கும் வண்டாகி

மொத்தமாய் கொடுத்திட
மெய் சிலிர்த்தாளே - யானோ
மெய் மறந்தேனே

 

மெய் மறந்த
அ. வேல்முருகன்

ஓட்டுத் திருட்டு
















யாரும்
யாரையும்
காட்டிக் கொடுக்காத
சனநாயகத்தில்

தன்னாட்சி நிறுவனங்கள்
கால் நக்கிப் பிழைத்திட
காக்கிச் சட்டைகள்
கலவரங்களைத் தூண்டுது

நீதியை மறுத்து
சேவைகளை முடக்கி
மக்களைத் தாக்கிட
மகேசன் உத்தரவு

திருடர்களுக்கு எதிராக
தேவதைகள் தெருவில் இறங்கியும்
உச்ச நீதிமன்றம்
உணர்வற்றுப் போனது

குடியாட்சியில்
குரல்வளையை நெறிப்பவர்கள்
தடியடிக்கு
தராதரம் பார்ப்பதில்லை

அஞ்சி நடுங்கி
ஆங்காங்கே தடுப்புகள்
மிஞ்சிடும் கூட்டத்தில்
கண்ணீர்ப் புகைக் குண்டுகள்

மண்ணையும் மனிதத்தையும்
நேசிப்பவர்களை
நகர்ப்புற நக்சல்கள் என்றே
மண்டை உடைப்பாம்

சட்டங்களை மதிக்காத
சர்வாதிகாரிக்கும்
சலாம் போடுபவர்களுக்கும்
இசட் வகைப் பாதுகாப்பாம்

ஓட்டளிக்கும் கடமையை
உனக்களித்த சட்டம்
கட்சிமாறும் உரிமையை
கயவாளிகளுக்குக் கொடுத்ததேன்?

சனநாயகத்தின் கேலிக்கூத்து
எண்ணிக்கையில் இருப்பதால்
பிணங்கள் உலாவரும்
பிரமாத உலகமிது

வீடு வீடாகப் பொறுக்கியதை
விலை பேசும் விற்பன்னர்கள்
வெட்கங்கெட்டவர்கள்
வேசிக்கும் கீழானவர்கள்

மக்கள் நலன் என்பது
வரிக்கு மேல் வரி விதிப்பதா?
கோரிக்கையோடு கொடிபிடிக்க
குண்டாந்தடி பரிசளிப்பதா?

கூடுதல் வரிவசூலில்
கொஞ்சம் இலவசமளித்து
நெருடலின்றி விலையேற்றத்தை
வேடிக்கை பார்ப்பதா?

உண்ணவும், உடுக்கவும்
கற்கவும், உழைக்கவும்
கவலை மறந்து உறங்கவும்
வழங்குவதன்றோ சேவை!

இயற்கை வளங்களைக்
கொள்ளையடிக்கவும்
அரசு நிறுவனங்களை
அடிமாட்டு விலைக்கு விற்கவும்

ஆட்சி நிர்வாகமெனில்
ஆம் என்பாயோ?
அறமல்ல என்று
ஆர்ப்பரித்து எழுவாயா?


அ. வேல்முருகன்

ஞாயிறு, ஆகஸ்ட் 23

இது அரசியல்தான்

 
















தாமரை
நீர்நிலைகளை ஆக்கிரமிக்க
கைகள்
சலனமற்று இருக்கிறது

இலைகள்
உதிர்ந்து கொண்டிருக்க
திடீரென
விசில் சத்தங்கள்

கதிர் அரிவாள்
சுத்தியல்
கொள்கை தடுமாற்றத்தால்
களையிழந்து போக

மாம்பழத்தில்
மரபணு மாற்றம் நிகழ
பம்பரம்
சாட்டையின்றி இருக்குது

பிறைநிலவு
வளரவேயில்லை
டார்ச்லைட்
ஒளியின்றிப் போனது

முரசடிக்க
முகங்களில்லை
குக்கரில் – பருப்பு
வேகவில்லை

சூரிய அஸ்தமனமென 
சூழ்ந்திருந்தவர்கள் விலகிட
பானையும் – ஆங்கே
பொங்கவில்லை  

துடைப்பக் கட்டைகள்
தேய்ந்து போய்விட்டன
வங்கத்து மலர்கள்
வாடிவிட்டன

வில் அம்பை (சிவசேனா)
ராமன் உடைத்துவிட
யானைகள்
பழக்கப்படுத்தப்பட்டுவிட்டன

சங்கு (பிஜூ ஜனதாதளம்)
மக்களால் ஒதுக்கப்பட
சைக்கிள் ஓடுகிறது
இடத்திற்கு தகுந்தாற்போல்

சின்னங்கள் எதுவாயினும்
சிந்தாந்த நக்சல்களால்
கரப்பான் பூச்சிகளைக் கொண்டு
காலத்தை மட்டுமே விரயமாக்கலாம்  


அ. வேல்முருகன்

புதன், ஜூன் 10

H₂O என்றால்...?








கடவுள்—
நம்பிக்கையா?
அனுபவிக்கும் அனுபவமா?

கண்மூடி
காலங்காலமாய் சொன்னதை
கேள்வி கேட்காமல் ஏற்பதா?

நேரடி அனுபவமோ,
நிலைத்திருக்கும் சாட்சிகளோ
இல்லாததா கடவுள்?

ஆதாரம் ஏதுமின்றி
அவதாரங்களைக் கடவுளென்பது
ஆபத்தானது.

ஆதலால் தேடுகிறேன்;
ஆங்காங்கு
அவரவர் வசதிக்கேற்ப.

உருவமற்றோ, உருவத்தோடோ
ஒரு நம்பிக்கையுடன்
ஆராதிக்கின்றனர்.

பூமி சூரியனைச்
சுற்றுவது போல்
கோயிலைச் சுற்றினால்,

இரவு பகல் நிகழ்வது போல்
கடவுள் உண்டு, இல்லையென
காரணம் சொல்லலாமா?

கடவுள் வந்துவிட்டால்,
கற்பித்த நம்பிக்கைகளை
காணும் அனுபவத்தைத் தந்தால்,

எக்குலத்தின் பிரதிநிதியென
ஏடாகூடக் கேள்வி தவிர்த்து,
H₂O வியாபாரம்
செய்யலாமா என்பேன்.

அ. வேல்முருகன்





செவ்வாய், மே 26

கல்நெஞ்சுக்காரி

 










கல்நெஞ்சென உரைத்திட,
கண்ணீர் வடித்தாய்;
சொல்லொண்ணா வலிகளை
சொற்களில் பதித்தாய்.

அல்லலில் உழலுவதை
அடிமனதில் இரசித்தாய்;
இல்லாளன் என்றாலும்
இறைஞ்சிட வைத்தாய்.

என்னவள் என்பதனால்
எதையும் சகித்தேன்;
அன்னியமாய் அளவளாவ
ஆழ்மனதில் அழுதேன்.

என்னாங்கு எதுகுறை
எந்நாளும் அறியேன்;
உன்னத அன்பிற்கு
உடனுறைதல் என்பேன்.

சன்னிதியில் ஊழியம்
சந்ததம் செய்தாலும்,
என் விதி என்னவோ—
ஏகாந்தம் என்றாச்சு.

நன்னாள் என்றாலோ,
நாளெதற்கு வருகுதென
தன்மானம் கேட்டாலும்
தற்காக்குது நம்பிக்கை

வலிமறைத்து வாழ்ந்திட
வலிமை கொண்டேன்;
சலிப்பே வந்தாலும்
சமாதானமாகிறேன்.

பொலிவிழந்த போதிலும்
புலம்பிடாது இருந்து,
கெலித்தே காட்டுகிறேன்;
கெத்தாக உலவுகிறேன்.

அ. வேல்முருகன்


திங்கள், மே 25

புல்டோசர் இந்தியா

 







ஆறுகால பூஜையோ,
ஐந்துவேளை தொழுகையோ,
அவரவர் நம்பிக்கை—
அதில் புல்டோசர் ஏன்?

மசூதிகளை இடித்தால்
வீதிகளில் தொழுவோமென
மார்க்கத்தை நம்புபவர்கள்
மறுமொழி உரைத்திட,

இந்துகளுக்கு மட்டுமே
இவன் சேவை என்பதற்கா
இந்நாடு உருவாயிற்று?
அங்ஙனமெனில் அதை மாற்று.

மன்னனென அகங்காரமா?
மக்களுக்கு எதிராய் அரசாங்கமா?
மசூதிகளை இடிக்கவா
மக்களதிகாரம் அளித்தனர்?

அதிகாரமற்ற புல்டோசர்
அமைதியாய் இருக்கும்;
அரசு இயந்திரம் இயக்கிட
அடிபணியாது எதிர்த்திடும்.

சிறுபான்மையினர் என்றாலும்
சிறப்புடன் வாழ்ந்திடனும்;
சிரமம் என்றானால்
சீரழியும் சமூகமே!


அ. வேல்முருகன்


கோமாதா எங்கள் குலமாதா

 









உழவர்களின்
உபரி வருமானத்திற்கு
உதவிய பசுக்களை,

கோமியம் குடிப்பவர்கள்
“கோமாதா” என்று பாதுகாக்க
கோடிகளில் நிதி ஒதுக்கிட,

கொள்கை முடிவெடுத்து
கோரிக்கை வைத்தனர்
குர்பானி கொடுப்பவர்கள்.

குலமாதா தேசிய விலங்கா?
குறிக்கோள் எதுவென்று
குழப்பங்கள் இந்துகளிடையே.

குறும்பாடு உண்டாலே
கொலை செய்யும் நாட்டிலே
கூர்த்த முடிவு நானென்பேன்.

தேவியைத் துதித்து பாடியதை
தேசப் பாடலாய்
தேர்ந்தெடுத்ததைப் போல,

தேசிய விலங்காய்
கோமாதாவை அறிவிக்க
தீருமோ பிரச்சனை?

நந்தனைத் தேடினர்,
நாயன்மாராகி விட்டதால்
கோரோசனை வேண்டாமென்கிறார்.

இந்துகள் வீட்டில்
இருவேளை உணவில்லை;
கோமாதாவும் பட்டினியோடு.

வளர்த்த மாடுகளை
வாங்க ஆளில்லாததால்,
வயிற்றில் ஈரத்துணியோடு
வாழ்க ஜனநாயகம்...


அ. வேல்முருகன்




தீர்ப்புகள் திருத்தப்படலாம்



















சட்டவிரோத
செலாவணி முறைகேட்டில்
சிறை சென்றவர்
குற்றமற்றவர் என்றொரு தீர்ப்பு.

முப்பத்தொரு மாத
காராகிரகத்தில்
முடங்கிய நிறுவனத்தை
மூழ்கியதாய் அறிவித்தனர்.

திவால் நிறுவனத்தை
திறம்பட கையாள்வோர்
தேசத்தில் ஒருவரே என
காணிக்கையளித்தனர்.

கடன் கொடுத்த வங்கியோ,
கைக்குக் கிடைத்ததை விற்று,
வாராக்கடன் விதிப்படி
வரவு வைத்துக் கொண்டனர்.

ஆங்காங்கே வழக்குகள்
ஆதாரமில்லை என்றே,
அவரை விடுவிக்க
அந்தகாரம் எங்கெங்கும்.

வளர்ச்சி என்பது
தேசத்தில் ஒவ்வொருவரும்
ஒரு படி மேலேறுவதா?
ஒருவர் மட்டும் வாழ்வதா?

அ. வேல்முருகன்

சனி, மே 23

கரப்பான் பூச்சி














 வேலையற்றவர்கள்
 வீதிக்கு வாராது,
 “விதியே” என்று
 விடியலுக்கு தவமிருக்க,

 அதிகாரத்தைச் சுவைத்த
 ஒட்டுண்ணிகள்
 அதிகாரமற்றவர்களுக்கு
 அளித்த பெயர்.
 
    ஆண்டு கணக்காக
    அநீதியாய் வாய்தா;
    மீண்டதோ நியாயம்—
    மக்களின் சோம்பலால்.

    சமூக வலைதளங்களில்
    சந்தி சிரித்தாலும்,
    ஊழல் மயமானவர்கள்
    ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.

    ஊடகமெல்லாம்
    ஊனத்தால் சார்ந்திருக்க,
    ஊமையான மக்கள்
    ஊர்வலம் வந்திட,

    கரப்பான் பூச்சிகள்
    கரையானாய் பரவ,
    கலங்கியது நீதியா?
    கார்ப்பரேட் அரசா?


    அ. வேல்முருகன்

திங்கள், மே 11

யார் எவரோ?!

 










காலாற நடந்து
கைக்கோர்த்து சென்றது
காட்சிப் படிமமாய்
கலங்கச் செய்திட,

மறக்க முயற்சித்து
மனமது இயங்காமல்,
மாயங்கள் நிகழாமல்
மறத்தே போனது.

காயங்கள் ஆறிட
நினைவுகள் அகன்றிடனும்;
நிழலாய் ஏன் இன்னும்
நிம்மதியைக் கெடுக்கிறாய்?

வலிகள் வடுவாக,
வடிகால் இல்லாமல்,
வழி மீள யோசிக்கையில்
வதைப்படலம் நீட்டிக்கிறாய்.

எதிரெதிர் வந்தாலும்
யார் எவரோ என்றே,
எதுவும் நிகழாததுபோல்
எங்ஙனம் நகர்கிறாய்?

அ. வேல்முருகன்


சனகன் மகளாயினும்











எனக்கு மாற்றென
யாரைத் தேடுகிறாய்?
வனப்பு குறைவென்றா
வடிகட்டப் பார்க்கிறாய்?

முன்பின் பழகாமல்
முந்தானையில் முடிச்சிட்டால்,
முதல் நாளே குழப்பங்கள்,
முரண்களின் அணிவகுப்புகள்.

சரியான இணையென
சந்தித்த நொடிகளில்
சாதகமாய் சொல்லுகின்ற
சந்தோஷங்கள் நிலைப்பதல்ல.

சனகன் மகளாயினும்
சங்கடங்கள் உண்டு.
வினாக்களுக்கு விடையுண்டு
விவேகத்துடன் தேர்ந்தெடு

உனை இழக்க விரும்பாததால்
உரிமையோடு சொல்கிறேன்
உருவங்கள் மாறினாலும்
உள்ளக்கிடக்கை யாரறிவார்

முற்றிலும் வலியற்று,
முத்தங்களில் மூழ்கி,
மினுமினுக்கும் காதலெல்லாம்
புனைவுகளிலும் கனவுகளிலும்.

ஆகச் சிறந்த இணைகளாய்
திரைப்படங்களில் மட்டுமே
கற்பனைகள் அல்லவே காதல்;
வலிகளோடுதான் ஆரம்பம்.

முற்றும் முழுமையாய்
முகவரி அறிய
விலகிச் செல்லாது
கற்றுக் கொடு

அறிதலும் புரிதலும்
அந்த நொடியில் நிகழாது;
பரிவும் பற்றுமே
பாதை வகுக்கும்.

துள்ளி மகிழ்ந்திட
துணையிடம் பட்டியலிடு;
அள்ளிக் கொடுத்திட
ஆவணச் செய்கிறேன்.

எது உனை மகிழ்விக்கும்
என அறியா மடந்தையிடம்
எண்ணங்களை சொல்லிடு;
ஏற்றப்படி மாறிக் கொள்கிறேன்

அனைத்தையும் சொல்லாதே — நின்
அகம் மகிழும் விருப்பங்கள்
அறிந்துகொள்ள விழைகிறேன்;
அதற்கேற்றாற்போல் மாறிக்கொள்ள.

பேரிடிகள் வந்தாலும்
பின் நிற்பது நானென
பெரு நம்பிக்கை கொள்;
பேதலித்து விடாதே.

கடந்து செல்லாதே;
கடமையில் குறையிருப்பின்
கட்டியணைத்து பேசு—
கரையேறிட வழியுண்டு.

நான் கவனிக்காததை
நச்சென சுட்டிக்காட்டு- நின்
கணிப்புகள் மாறாது
கடைப்பிடித்து காட்டுகிறேன்.

பற்றாக்குறை காலத்தில்
பதுக்கி விற்பதல்ல;
பருவங்கள் மாறினாலும்
பாசங்கள் மாற்றமில்லாதது.

அத்தகைய காதலை
அருகிருந்து கட்டமைக்க
அன்னியோன்யம் பிறக்கும்;
அகவிருள் விலகும்.

உண்மையான காதல்
ஒன்றிணைந்து வளரும்;
ஒவ்வொருவரின் நிறைகுறைகளை
நிதர்சனமென ஏற்கும்.

அ. வேல்முருகன்


இது காதலா?!

  மணமாகாத மணம் வீசும் மங்கை நான் அவன் மன்னவன்தான் – என்னவனல்ல ஆனாலும் யாரும் நெருங்கவில்லை   என்னவன் இவனென எல்லையைத் தீர்மானிக்க எனக்குச...