சனி, மே 9

கடிதத்தில் என் நெஞ்சம்



வண்ணப் பூவாய்
   வாசலில் மலர்ந்த
அன்னப் பறவையே
   அன்புடன் எழுதுகிறேன்

எண்ணக் கனாவில்
   எனையே வாட்டும்
கண்ணே காதலில்
   காவியம் பாடுகிறேன்

தினமும் நினது
   திருப்பார்வை பட்டால்
வனங்கள் எல்லாம்
   வசந்தமாய் தெரியுதடி

சரணம் தேவி
   சம்மதம் அருள்வாய்
காரணம் தேடி
   காய்தல் செய்யாதடி

இகத்தில் உனையன்றி
    இங்குயாரை பூசித்தேன்
முகத்தை திருப்பினாய்
    முகவரிகள் மாறிவிட்டதே

ஏனடி கோபம்
   எதுவடி காரணம்
நானடி சோகத்தில்
   நலிகிறேன் மாதத்தில்

ஏதோ நடந்தவை
    எல்லாம் மறந்துவிடு
இதோ நெஞ்சம்
    இனியுனது தஞ்சம்

மறவா



மறவேன் மறவேன் என்றுரைத்தே
    மறந்தீரோ மறவர் குலமகனே
மறவா நானும் வாடுகிறேன்
    மதிமுகிலும் உனைத் தேடுகிறேன்
உறவாய் வருவாய் என்றே
    உள்ளத்திற்கு நாளும் சொல்கிறேன்
பறவை   உறவை  கண்டதும்
    பசலை நோயால் வாடுகிறேன்

மாலையில் மன்னா உனக்காக
    மருளமருள விழித்து நின்றபோது
வேளையில் வாராது என்னை
    வேதனை செய்ததை நினைக்கிறேன்
சோலையில் நீயும் நானும்
    சோடியாய் திரிந்ததை எண்ணுகிறேன்
பாலையில் வாடும் எனக்கு
    பன்னீர்  அதுதான் தெளிக்குதய்யா

கணையை தொடுத்து வீழ்த்திய
    கண்ணா உனைநான் தேடுகிறேன்
அணைத்து கண்ட இன்பத்தை
    அன்றே நீயும் மறந்தாயோ
சுனையில் இறங்கி நின்றாலும்
    சுடுதே  தேகம் தனலாக
மனையாள் நீயே என்றுரைத்த
   மன்னா மறையாது வருவீரோ





தட்சணை


சொர்க்கத்தின் கதவுகள்
   சொத்தி ருந்தால் திறக்க
தர்க்கத்தில் அவையாவும்
   தவறில்லை நியாயமாகும்

ஏலச் சந்தையில்
   ஏட்டுச் சுரைக்காய்கள்
வாழ வருபவளோடு
   வண்டிகளை கேட்கும்

எடுத்த ஏலம்
    எட்டாம்நாள் சொத்தை
திருப்பி அனுப்பி
    திங்களில் அபராதம் கேட்டனர்

ஆயிரம் பொய்கள்
    ஆராய்ச்சியில் வெளிபட
போயிரும் பலஉயிர்கள்
     பொழைச்சி ருக்கும்சில

வாழை இங்கு
    வாடி கொண்டிருக்க
தாழை மணம்
    தவழ்வதாய் பொய்கள்

ஆடை அவிழ்ப்பு
    ஆசையின் முகூர்த்த மல்லவோ
பாடை வரைக்கும்
    பாவியின் காயங்கள் ஆனதே

சாந்தி முகூர்த்தம்
   மனசாந்திக்கு ஏங்கலாம்
வாந்தி முகூர்த்தம்
   வாழ்க்கையின் தொடக்கமாகலாம்

பதினாறு செல்வமும்
    பெருவாழ்வும் சாத்தியமோ
விதியை நொந்தும்
     விடியாத வாழ்வானதே

என்சொத்து அவ்வளவு
    எனக்கு வேண்டும் அவ்வளவு
கண்பிதுங்கி வாழும்
    கடைநிலை தந்தை இவர்கள்

வட்டிக்கு வாங்கி
    வாழ அனுப்பும் கோலங்கள்
குட்டி போடும் நினைப்பில்
     திரும்ப அனுப்பும்  ஜாலங்கள்

கண்ணீர் காவியமாக
    கரைதேடும் மங்கையவள்
கரையை காணாது
    கடலில்  முழ்கி மாள்கிறாள்

நரைத்த பின்பும்
    நங்கை ஒருத்தியை தேடுகிறான்
வாழையை மீண்டும்
   வளர்ப்பதாக ஊருக்கு சொல்கிறான்

யாருக்குத் தெரியும்
   யாத்திரையின் நடுவழி
போருக்கு ஆயுத்தமாகும்
   பொல்லா இச்சமுகத்தில்

கருகி வாழும்
   கண்ணகியின் உலகமிது
மருகும் இளங்கோ
   மன்னனாக மணையில் உள்ளதால்

புரட்சி கவி



அடங்கி கிடக்க ஆக்களா
   ஆளும் உரிமை நமக்குண்டு
முடங்கி கிடக்கும் மக்களே
   மூடவழக்கம் அகற்று என்று
ஓடுங்கி கிடக்கும் ஓடப்பர்களை
   ஒப்பப்பர் ஆவாய் என்றுரைத்தே
தொடங்கி வைத்தான் போரை
   தோளோடு தோளாய் நின்றே

சாதிக் கொடுமை சகியாது
   சாடி மக்களை திருத்த
வாதியாய் நின்று பாடினான்
   வருணா சிரம்தனை எதிர்த்தான்
நாதியற்ற பாட்டாளி நீங்கள்
   நாலு சாதியாய் பிரிந்திருப்பதோ
ஓதினான் உலகிற்கு நீதி
   ஒற்றுமையே உயர்வுக்கு வழியென்று

பெண்ணின்  கைமை  நிலைகண்டு 
    புதியபாதை  கோடிட்டு காட்டினான்
வெண்சேலை விட்டு வெளிவர
    வேள்வி தீயை மூட்டினான்
எண்ணும் மனமும் எழுச்சியும்
    எல்லாம் நிறைந்தவள் பெண்ணவள்
பின்னும் ஏனோ வீழ்ச்சி
    பகர்வீர் பதிலை இந்நாளில்


தீந்தமிழ் உலகம் பரவிட
    திக்கெட்டும் தமிழன் புகழோங்கிட
அந்நிய மோகம் அழிந்திட
    அன்னைமொழி ஆட்சி மொழியாகிட
முந்தைய மூடவழக்கம் அகன்றிட
     மனதில் பகுத்தறிவு புகட்டி
வந்தே வாழ்வளித் திட்ட
     வேந்தன் கனகசுப்பு ரத்தினமே



விலையோ விலை



ஆயக்கலை
மாயக்கலை
அல்லஅல்ல
மன்மதக் கலை

கண்ணசைப்பாள்
காரியமென்பாள்
காசவளுக்குக்
கல்லாவுக்குத் தக்கவாறு

கணக்கிருக்கு
காலநேர கணக்கிருக்கு
காலம் கூடுமென்றால்
காசும் கூடும்

நாளொன்றுக்கு
நால்வர் என
நன்றாய் வியாபாரம்
நடக்கலாம்

நடையாய் நடந்தாலும்
படியளப்வளை
பாராமல்
பாழும் வயிறு காயலாம்

நவீனக் கைபேசி
நுனிநாக்கு ஆங்கிலம்
நுரைததும்பும் திரவம்
காணிக்கை வேறுபடலாம்

அரிதாரம் பூசும்
அழகென்றால்
அதன் விலை
அதன் தரகு வேறுவேறு

சந்தை நிலவரத்தை பொறுத்து
சதைக்கு விலை
சல்லாபம்
சத்துள்ளவனோடு மட்டும்

தேவைக்குத் தேடுபவனும்
தேரிழுக்கும் ஊரும்
தொடர்பில்லாக் கொடுப்பது
தேவதாசி ப்பட்டம்

வயிற்றுக்கு வாவென்பவளும்
வசதிக்கு வாவென்பவளும்
வழங்குது இன்பம்தான்
வாழ்வின் சுவை அதுவல்லதான்


வேண்டும் தீ



ஒன்னா வளர்ந்த ஊரிலே
    ஓதிய வேதம் புரியல
சின்னாள் கழிந்த பின்னாலே
    சிவனும் நபியும் சேரல
இன்னல் மின்னலா தொடர
    இவர்கள் சிறுபான் மையினரோ
என்னால் இவைகளை மாற்ற
    ஏது செய்யலாம் என்போரே


ஒற்றுமை குலைக்கும் ஓநாய்களை
    ஓடோட விரட்டி ஒழிக்கனும்
வேற்றுமை நினையா தோழனாய்
     வீதியில் அன்பை விதைக்கனும்
முற்றுமை ஆனது புரட்சியென
   முடங்கிடாது  தீமூட்டி காத்திட்டு
கொற்றவனுக் குணர்த்திடு மானுடமே
   கொலைகள் இனியில்லை மதத்தாலென
 


 

புதிய பாதை




கயிறு மாட்ட நேரம் பார்த்து
கழுத்தை நீட்டி என்ன கண்ட
கழுதை யின்னு பேரு வாங்கி
கண்ணீர் விட்டு தெருவில் நின்ன

சம்பாதித்து கொடுத்து சத்தை இழந்து
சட்டுன்னு வந்து சமையல் செஞ்சு
சாயுற நேரம் தலை சாயுற நேரம்
சாயுறான், அவன் காரியம் சாதிக்கிறான்

சுகமே யில்லாது வருஷத்தை ஓட்ட
சுடுதோ நெஞ்சிலே பிள்ளை இல்லாதது
சுற்றமும் சாடுதோ உற்றதும்   வெறுக்குதோ
சுருக்கென தைக்குதோ சொல்லுற வார்த்தை

தழைக்கிற குடும்பம் எங்க குடும்பமின்னு
பழிக்கிற அத்தையும் முழிக்கிற புருஷனும்
அழித்திட உன்னை திட்டம் தீட்டினாலும்
விழித்தே நீயும் விவாகரத்து கோரடி

பொட்டைக் கழுதைக்கு திமிரை பாரென்றும்
போட்டு உதைக்க தாங்கிய கொடுமையும்
புழுவில்லா மலடியென பொய்யுரைத்த காதையும்
புழுவாய் கொட்டதுடித்து நின்றாயே

மலடியான நீயும் மருத்துவம் பார்க்க
மழலை  அரும்ப வழியுண்டு என்றே
மருத்துவன் சொல்ல மனதுக்கு மகிழ்ச்சி
மாற்றுப் பாதையில் சென்றால் உயர்ச்சி

மங்கா வாழ்வின் அனுமதி மறுமணம்
மணந்தால் வாழ்வில் நிம்மதி தருமணம்
மங்கையே மனதில் தவழும் அருமணம்
மலர்ந்திட நீயும் புரிந்திடு புதுமணம்


எழுதிய ஆண்டு 1989

சொந்தம் தொடர


உதிக்கும் போதே எனக்கு
    உத்திரவாத சாசனம் எழுதி
மரிக்கும் நிலைக்கு தள்ளியது
    மடமை வேத சொந்தம்மா
தாய்க்கு தம்பி என்று
   தாரமா னேன்ஒரு நன்னாளில்
நாய்க்கும் கீழாக இன்று
    நான் வாழும் நிலையானேன்

விட்ட உறவை தொடர
    கட்டி வைத்தனர் என்னை
கிட்ட வந்த அவனிடமோ
    கெட்ட வாடை வீச
எட்டி சென்ற என்னை
    திட்டிய ஒற்றைச் சொல்லோ
பெட்டை கோழியே உன்வேலை
     குட்டி போடுவது என்றானே

ஆயிரம் சொத்து இருந்தும்
    ஆங்கொரு நிம்மதி இல்லை
போயிரும் உயிரை நானும்
     போகாது பிடித்து வைக்க
வளர்த்தவளும் வந்து பார்த்து
    வண்டியாய் கண்ணீர் விட்டாள்
மலராது கருகும் வாழ்வு
    மடியும் காலம்வரை  துரும்பாகவே
   

வெள்ளி, மே 8

அய்யோ...!!! கடவுளே...!!!



காய்ந்த தலையுடன்
காலத்தை ஓட்டும்
கண்ணீர் கலங்களாக
கரைசேரும் புதல்வர்களை

வேய்ந்த கூரையிலிருந்து
வேடிக்கை பார்க்கும்
வேலவனே மாற்றோனே
வேள்வியா பெரிது

தோய்ந்த எண்ணையில்
தேகத்தை வளர்ப்பவனே
தோல்சுருங்கி வாட
தலைவிதியை நிர்ணயித்தவனே

மாய்ந்த இவர்கள்
உனை சேவித்தும்
வினை எனசொல்லி
விளையாடுவது நியாயமோ

முக்கண் நாயகனே
மூவுலகமும் அறிந்தவனே
முலைப்பாலின்றி வதங்கி
மூச்சு விடுவதேனோ?

ஞானசம்பந்தனுக்கு
ஞானப்பால்
நியாயமா தேவி - இத்தளிர்களுக்கு
தாயில்லையோ நீ

குடமுழுக்கென்று
குடம் குடமாய்
கொட்டும் பாலெல்லாம்
குழந்தைக்கு கொடுத்தால்

ஒருவேளை சோற்றுக்கு
ஓடியோடி உழைத்து
சக்கையை ஊண்டு
சாகிறான் மனிதன்

உனக்கோ ஆறுகால உணவு
கணக்கோ கண்பிதுங்கும் அளவு
உலகோ பசியால் பிளவு
உணவோ அங்கு தொலைவு

நெய்யென்றும் பாலென்றும்
பஞ்சாமிருதம் பன்னீரென்றும்
பச்சைக் கல்லில் கொட்டி
பாவத்தை போக்குகிறார்களாம்

பாவம் செய்ய முடியாமல்
பாழும் வயிற்றுகாக அலைகிறேன்
கல்லே எனக்கொரு வரம்கொடு
கல்லாக நான்மாற வேண்டும்

வானமே கூரையாக
வாழ்வை நடத்தும்
வக்கற்ற எங்களை விட்டுவிட்டு
வசதியாய் நீ மட்டும்

வானளாவ வீடுகட்டி
இல்லறம் நடத்தும்
நல்லறம் சொன்னவனே
இதுவா அறம்

அறுபடை வீடு கொண்டவனே
உனக்கோ தெருவுக்குத் தெரு
ஊருக்கு ஊர்
மாட மாளிகைகள்

ஒன்றுக்கு இரண்டென
உல்லாச வாழ்வு நடத்தும்
காம நாயகனே
கற்பு என்றால் என்ன?

கல்லே, தெய்வமே
தூணிலிருப்பவனே
துக்கம் அளிக்கிறாயே
தொலைந்து போயேன்

ஏகாதிபத்தியம் நடத்துபவனே
எச்சரிக்கை விடுக்கிறோம்
வானமே கூரையிருந்தாலும்
வரண்டுவிடாது எங்கள் புரட்சி

பலவுருவம் கொண்டவரே
பலத்தை சற்று காட்டுங்களேன்
பணம் வேண்டுமானாலும் தருகிறேன்
தினம் அருள்புரிய வேண்டுகிறேன்

அய்யோ...... கடவுளே..... கல்லே....
என் கேள்விகளுக்கு பதில்
நீயில்லை என்பதால்
இன்றுவரை கிடைக்கவில்லை

குழந்தையும் கல்வியும்



சின்னபுள்ள சித்தாளா போகையில
   சிந்தை கொஞ்சம் கலங்குதம்மா
என்னகொடுமை படிக்கும் வயதில
   எட்டணா கூலிக்கு போகுதம்மா
அன்னமில்லா வறுமை காரணத்தால்
    அடிப்படை  கல்வியும் கிட்டலியே
என்னவிலை கொடுத்தா இந்தநிலை
     எந்தன் நாட்டில் மாறுமம்மா


மத்தபுள்ள படிக்க போகையில
    மருகி  நிக்கு  இந்தபுள்ள
கத்தைபுத்தகம் சுமக்கும் ஆசையில
    கனவ வளர்க்கு சின்னபுள்ள
குத்தவாளி யாருயிந்த கொடுமையில
    குறைய  தீர்க்கவும் சட்டமில்ல
வெத்துவேட்டு அரசியல் கூட்டத்தில
      விடியும் வாழ்வின் எல்லை 

மருளும் மானுடம்



மதம் என்பது மார்க்கமா
   மானுடத்தின் பிரிவினை தர்க்கமா
நிதம் நிதமொரு மார்க்கமா
   நீயும் நானும் வேறானமோ
வதம் புரிந்த அவதாரங்கள்
   வரங்கள் அளித்ததோ வாழ்வழிக்க
பதம் பார்க்கும் கடவுளை
   பாரினில் இல்லாது ஆக்கிடுவோம்

பெரியாரின் சீர்த்திருத்தம்
   பேதை மக்களை மாற்றலியே
உரியோருக்கு மனமிருந்தும்
   உலகை மாற்ற எண்ணமில்லையே
உணர்வோடு விளையாடும்
   உதவாத மதங்களை ஒழிக்கலியே
தளர்வோடு நாமிருந்தால்
   தரணி சிறக்க வழியில்லையே

மானுடம் என்பதால்
   மனமைதிக்கு மதங்கள் வேண்டுமோ
காணும் சரித்திரத்தில்
   கண்ட புதைகுழிகள் போதாதோ
சமணம் அழிந்து
   சைவம் தழைத்தது அறியாததா
அம்மணம் ஆயினம்
   அதுவொரு மதமா  வளரனுமா

ஊனம் உள்ளத்திலிருக்க
   உதவுமோ உபநிடத கதைகள்
நானும் மறந்திட்டேன்
   நான்கு பிரிவினைகள் அதில்தானே
பேணும் மனுநீதி
   பெரியோன் இங்கு சங்கராச்சாரி
நாணம் எவருக்குமில்லை
    நானும் மனிதனென உரிமைகோரி

தமிழா



உள்ளத்து மொழியில் பேசிடவே
   உண்மை உரைப்பேன் தோழர்களே
தெள்ளத் தெளிவா கூறிடுவேன்
   தென்சீமை தமிழ் உயர்ந்ததுவே
அள்ள அள்ள அமுதாவதை
   ஆங்கிலத்தில் டமில் என்றுரைப்பதோ
கொள்ள வேண்டிய தமிழை
    கொல்ல துணிந்தீரே தோழரே

மின்னும் அழகை ரசித்து
    மீண்டும் தவறு செய்கிறீரே
தின்னும் யாவும் நல்லதல்ல
  திகட்டி  விடாதோ தோழரே
பொன்னும் விஞ்சும் ஒளியாய்
   பொதிகையில் தவழ்ந்து வருகிறாள்
இன்னும் அவள் கன்னியாய்
   இந்த உலகில்தான் வாழ்கிறாள்

அம்மா என்ற தமிழோ
   அந்தோ மலர்ந்தது மம்மி
சும்மா சொல்லக் கூடாது
   சொரணையில் இவர்கள் டம்மி
இம்மா மொழியின் பெருமை
   இவ்வுலகில் யாருக்கு கம்மி
எம்மா புகழ் வந்தாலும்
   என்மொழிக்கு இடரில்லை இம்மி

கடைக்கண் பார்வை



 

கன்னியின் கடைக்கண் பார்வை
   கண்டவனுக்கு காதல் உண்மை
அன்ன ஆகாரமில்லா காளைக்கு
    அணங்கிடம் தோற்க வெறுமை
சன்னியாசி கோலம் பூண்டே
    சதிகாரி என்பதோ பொய்மை
உன்னாசை மாறிட்டாலும் - காதல்
    உலகம் இயங்குவதால் பருண்மை

மாளும் ஈரூடலால் மீளுமோ
    மறித்த தெய்வீக காதல்தான்
வீழும் உலகின் விதிவசமென
    வீணணாய் இருப்பது வாழ்வோ
செழுமை பெற்ற காதலாய்
   சேர்ந்து இணைந்து வாழ்ந்திட
நாளும் உழைப்போம் - நரம்பிசைக்க
    நாமும் காதல் புரிவோம்

கன்னி



நறுமணம் உலவி வர
நந்தா விளக்கு ஓளிவீச
நாற்திசையும் புகழிருக்க
நான் காணுகிறேன் கன்னியவளை

பெயர் சொல்லி அழைக்கிறேன்
பேதையவள் துள்ளித் திரிகிறாள்
பொன்னுடல்தனை தொட்டு பார்க்க
புன்னகையை அள்ளி வீசுகிறாள்

பேரழகி என் கைபிடிக்க
பண்டிதனாய் கிறுக்க
பாவையவள் தீஞ்சுவை என்றாள்
பலவித கனவு கண்டேன்

அமுதொன்று பருகினேன்
அஃது  போல் வேறொன்றில்லை
அது மா, பலா போன்றதென - சுவை
அறியா நாவலர்  உரைக்கலாம்

என்னை பேச வைத்தாள்
எழுலுகை பாட வைத்தாள்
எங்கெங்கும் அவள் ஓவியம்
எனினும் எனக்கவள் காவியம்

ஆன்றோர் பலரும் வாழ்த்த
அவளை நானும் மணக்கிறேன்
என்னுடன் வாழும் நேரிழையாள்
ஏகாந்த "தமிழ்" கன்னியல்லவோ




பட்டிபுலத்தானின் பரிதவிப்பு



பட்டினச் சிறகை
   பட்டிபுலத்தில் ஒடித்தது யாரோ?
எட்டின உறவாய்
   ஏமாற்றி மறைந்தது யாரோ?
கொட்டின அழகை
   கொள்வதற்குள் கொண்டதாரோ
கிட்டிட தவங்கள்
    கடவுள் கருணை புரிவாரோ

கெண்டை விழியாள்
   கொட்டிய சுகங்கள் அப்பப்பா
தண்டை மேனியாள்
   தவிக்க விட்டது அப்பப்பா
அண்டை நண்பனும்
   ஆகா  என்றதும் அப்பப்பா
முண்டா கட்டிட
   மனது எண்ணியதும் தப்பப்பா

கடலாடும் நேரத்தில்
   காரிகை நினைவில் வரவே
மடல்கள் மனதில்
   மாரிபோல் பொங்கி எழவே
ஊடலால் அவளோ
   உத்திரவு இன்றி  சென்றதாய்
வாடிய எனக்கு
   வருத்தி சமாதானம் சொன்னேன்

மௌனத்தில் என்னை
   மறந்து மறைந்து சென்றாயோ
யௌவனத்தில் கலை
   யிழந்து வாடுகிறேன் வாராயோ
அவ்வண்ணம் நீயிருந்தால்
   அடுத்த நொடியில் தோன்றாயோ
செவ்வண்ண இதழில்
     சிவக்க முத்தம் தாராயோ


குறிப்பு:   பட்டிபுலம் மாமல்லபுரம் அருகில் உள்ள கிராமம்
                  எழுதிய ஆண்டு 1992




புதன், மே 6

எட்டாக் கல்வி



ஆசையா படிக்க போனேன்
   ஆனால் எனக்கு இடமில்லை
கசையடியா நுழைவுத் தேர்வு
   கழிச்சு கட்டும் வழியல்லோ
திசைக்கொரு அரசியல் கட்சிகள்
   தீர்ப்பதா வாக்குறுதி அளிக்குது
வசைப்பட்டு  சாகும் நாங்களோ
   வக்கற்ற கீழான சாதியோ

கிராமத்து பள்ளியில் படிச்சதை
   கேள்வியில் காணம தவிச்சோமே
திறமத்து விட்டோ மென்றே
   தீர்ப்பு எழுதி ஏமாற்றினரே
அறமத்து நடக்கும் ஏலத்தில்
   அய்யகோ   கழிக்கப் பட்டோமே
சுரமத்து ஏதோ படிக்கிறோம்
   சூழ்நிலையில் எங்கோ ஒதுங்குறம்


மேல்மட்ட படிப்பு எங்களுக்கு
  மேட்டினில் இரைத்த நீரோ
கால்பட்டா தீட்டாகுமோ ஐஐடி
   காசிருந்தா  புனிதமா மருத்துவம்
பாழ்பட்ட எங்கள் நிலையோ
    பலவருட சுதந்திரத்தில் தீரலயே 
மல்கட்ட முடியாம தவிச்சே
   மரணத்தை தழுவுகிறோம் அனிதாவா


செவ்வாய், மே 5

அபச்சாரம்




இல்லாத ஒருவன் கல்லாகி
   இருக்கு மிடம்செல்ல தடையோ
பொல்லா  ஆரிய வேதங்கள்
  பொறித்த சூத்திரம் சூத்திரனோ
அல்லாத சாதியில் முடக்கியே
  ஆகம  விதியால்  தாழ்ச்சியோ
கல்லாத கபோதி  ஆனதால்
   காலகாலமா ஏமாந்து போனாயோ

அவனை காண தடையில்லை
  ஆனால் தொடதான் விதியில்லை
தவமே கொண்டாலும் பயனில்லை
  தனலால் நந்தனவாய் வியப்பில்லை
கவனம் இனிதான் தேவையே
    காவிகள்  வரலாற்றில் நீஇந்துவாம்
 உவந்து  நீயும் செல்வாயே
    உடன்பிறப்பை  கொல்லத் துணிவாயே

சந்தனம் நீட்டும் சதிகாரன்
  சாணிப்பால் அளித்த கயவன்
வந்தனம் கூறும் வக்கிரம்
  வாயிலில் தடுக்கும் அக்கிரமம்
இக்கணம் நீவீர் புரிந்திருப்பீர்
  இன்னும் ஏனோ உடனிருப்பீர்
தாக்கனும் தகர்த்து ஒழிக்கனும்
  தகவமைக்க மாற்றம் வேணும்


   

திங்கள், மே 4

சகலமும் நீயே



எம்மன ஆலயத்தின்  தேவியாய்
    என்னை கவர்ந்தவள் அமர்ந்திருக்க
அம்பலத்தில் இல்லாத தேவிக்கு
     ஆராதனை  ஆராட்டு  ஏனோ
சுடரொளியாய் விளங்கும் விழியில்
     சுழன்றடிக்கும்   வெளிச்ச மிருக்க
சடங்காய்  தீபவொளி எதற்கு
    சர்வேஸ்வரி  எனமுகம் காட்டவோ
   
தேவியின் கடைக்கண் வேண்டிட
       தருணம் இதுவல்ல என்றாளே
கூவியும் தராத தேவியிடமா
    கும்பிட்டு  வரங்கள் கேட்பேன்
ஆவியும் நினது சரணமென
    ஆவண சாசன  மாக்குகிறேன்
புவியில் வாழும் வரையில்
    பேதையே தாராயோ நினதருளை

ஆடும் ஆங்கார நாயகிக்கு
      ஆறுகால  அருஞ்சுவை உணவிருக்கு
பாடுபட கைகள் இரண்டிருக்கு
    பாதையில் இணையாய் வாமயிலே
மாடுமனை மச்சான் நானிருக்கேன்
    மண்ணைத் திருத்தவோம் பொன்மயிலே
வீடுநிறை  விளைச்சலால் பெண்ணே
    வீதியோடு விருந்துண்டு மகிழ்வோம்


ஆயுதத்தால் என்ன பயனடி
     ஆரை  வதைக்க அவதாரமடி
பாயும் விழியின் வீச்சால்
    பணிந்தேன் உன்னிடம் சரணமடி
சூரனை  சூலத்தால் கொல்ல
     சூத்திரம் வகுத்தவள் சாமுண்டி
தீரனம்மா திலகமிடு மெல்ல
     தீஞ்சுவை வாழ்வை வேண்டி

நான்மாட கூடலில் வாழ்வதற்கு
     நான்கு வாசல் கொண்டவளாம்
உன்னோடு கூடி வாழ்வதற்கு
    உன்னிதய வாசல் போதுமடி
அனலாய் அக்னியான அவளா
    அகிலதிற்கு அருள்வாள் சொர்க்கம்
தனலாய் தகிக்மெனை அணைத்திட
    தணியுமே  காண்பேனே சொர்க்கம்


 

புதன், ஏப்ரல் 29

தள்ளுபடியல்ல?!




வாராக்கடன் தள்ளுபடியா?!!!!   

மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட பல கடன்தாரர்களுக்கு ரூ.68000 கோடி தள்ளுபடியென தவறான தகவல்கள் ஊடகங்களின் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் இது தள்ளுபடியல்ல. இது ஒரு வங்கியின் கணக்கியல் நடைமுறை

தள்ளுபடி என்றால்

வங்கியில் கடன் பெற்றோர் வாராக் கடன் காலத்திற்கு பின் ஒரு தீர்வை (settlement) அணுகும் போது அளிக்கும் சலுகையே தள்ளுபடி.  அதுபோல் எந்தவொரு மேற்கண்ட பெருமுதலாளிகளும் கடனை அடைக்க இக்கால கட்டத்தில் முன் வரவில்லை.  ஆக இது தள்ளுபடியல்ல. பிறகு……………..

சொத்தின் மதிப்பை குறைத்தல்

இங்கே சொத்து என்பது பணமாக கொடுத்த கடன் (Loan Advances). இந்த சொத்து வினையாற்ற வேண்டும் அதாவது வட்டியை ஈட்ட வேண்டும். இல்லையெனில் இது வினையாற்ற இயலாத சொத்து (Non Performing Asset) (NPA) என வகை மாறுபாடு செய்வர். அதன் பின் இதை ஒடுக்கப்பட்ட சொத்து என அழைப்பர் (Stressed Assets).   அதாவது தரமான (Standard Asset) சொத்து தரமற்ற சொத்தாக (Substandard Asset) வகைப்படுத்துவர்.

வங்கி தான் கொடுத்த கடன், வாரா கடன் என வகைப்படுத்திய முதலாண்டில் 15% த்தை வினையாற்ற இயலா சொத்து (NPA Amount) என வகைப்படுத்திய நாளன்று உள்ள நிலுவைத் தொகையில் கழிப்பர். அதாவது வினையாற்ற இயலாத சொத்தின் மதிப்பை குறைப்பர்.

எதற்காக மதிப்பு குறைப்பு செய்யப்படுகிறது

இது வங்கியின் நடைமுறை.  இந்த தொகை அந்த ஆண்டின் இலாபத்தில் கழிக்கப்படும்.  ஒரு வியாபாரம் பல்வேறு காரணங்களால் நொடித்து போகிறது. அதாவது அரசின் கொள்கை முடிவுகள் (சீனாவிலிருந்து இறக்குமதி), போட்டிகள் இன்னும் பல காரணங்கள்.  அந்த வியாபாரம் அல்லது அந்த நிறுவனம் திரும்பி எழ எவ்வளவு காலம் ஆகும் என்பதை கணிப்பது சற்று கடினம்.  அதனால் வாராக் கடனை மொத்தமாக கழிப்பதற்கு பதிலாக நான்கு ஆண்டுகளில் கழிக்கின்றனர். அதாவது
     முதலாண்டில்         15%
     இரண்டாமாண்டில்     25%
     மூன்றாமாண்டில்      40%
     நான்காமாண்டில்      முழுவதும்  

அதாவது மொத்த வாராக்கடனையும் ஒரே நாளில் இலாபத்தில் கழித்தால் வங்கி திவால் ஆனாது போல் ஒரு தோற்றம் ஏற்படும் அதை தவிர்க்கவே இதுபோன்றதொரு ஏற்பாடு அல்லது நடைமுறை.

வட்டியும் கடனும் என்னவாகும்

வினையாற்ற இயலா சொத்து என வகைப்படுத்திய நாளிலிருந்து கடனுக்கு வட்டி கணக்கிடமாட்டார்கள்.  ஆனால் ஒப்பந்த முறைப்படி வட்டி கணக்கிடுவார்கள். ஏனென்றால் வட்டி என்பது வருவாய்.  அசலே வாராதிருக்கும் போது வட்டி எப்படி வரும்.  எனவே வாராக் கடனுக்கு வட்டி கணக்கிட்டு வங்கி தன் சொத்து மதிப்பை உயர்த்தக் கூடாது என்பது உலகலாவிய ஒரு மதிப்பீடு. அந்த வட்டி Unapplied Interest  என தனியாக கணக்கீடு செய்து வைப்பர்.  ஒருவர் தன் கடனை அடைக்க வரும்போது நாளது தேதி நிலுவையாக, வினையாற்ற இயலா சொத்து என வகைப்படுத்திய நாளிலிருந்த தொகை மற்றும் Unapplied Interest கணக்கிடப்படாத வட்டி என இரண்டையும் கூட்டிதான் தெரிவிப்பர்.

உதாரணத்திற்கு (தோராய மதிப்பு)

2015 ல் மல்லையாவின் கடன் அனைத்து வங்கிகளுக்கும்   ரூ.6000 கோடி
2020 ல் மல்லையாவின் கடன் அனைத்து வங்கிகளுக்கும்   ரூ.9000 கோடி

இங்கே கணக்கிடப்படாத வட்டி Unapplied Interest  ரூ.3000 கோடி. இந்த கணக்கிடப்படாத வட்டி ஒவ்வொரு கடனுக்கும் தீர்வு (settlement) ஏற்படும் வரை தொடரும்.

தீர்வு ஏற்படுமா அப்படியெனில் எப்படி

1.   Normal Recovery
2.   One Time Settlement
3.   RDDBFI Act
4.   SARFAESI ACT
5.   NCLT

சாதாரண கடன் வசூல் (Normal Recovery)

கடன் பெற்றவர் நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தி கடனை முறைபடுத்தி கொள்வார் இல்லையெனில் எவ்வித தள்ளுபடியும் பெறாமல் மொத்த கடனையும் செலுத்தி வெளியேறி விடுவார்.

ஒரு முறை தீர்வு (One Time Settlement)

தான் பெற்ற கடனை ஒரே முறையிலோ அல்லது ஒரு குறுகிய காலத்திலோ மொத்தமாக செலுத்துவது.  இது

Ø  தானாக முன்வந்து தீர்வு காண்பது
Ø  அந்தந்த வங்கிகள் அளிக்கும் திட்டத்தின் மூலம் தீர்வு காண்பது
Ø  மத்திய வங்கி (RBI) அறிவிக்கும் திட்டத்தின் மூலம் தீர்வு காண்பது

மேற்கண்ட வழிகளில் பெரு நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் தனி நபர்கள் சலுகை அதாவது தள்ளுபடி பெறுவர்.  வெகுசில நேரங்களில் அசல் நிலுவை தொகையில் 50% வரை தள்ளுபடி கிடைக்கலாம்.  குறித்த காலத்தில் கடனை செலுத்தவில்லையெனில் வங்கிகள் தள்ளுபடியை திரும்ப பெற்று முழுத் தொகையும் வசூலிக்க சட்ட நடவடிக்கையை தொடருவர்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் நிலுவை வசூல் சட்டம் 1993 (RDDBFI Act 1993)
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது கடன் வசூல் தீர்ப்பாயம் எனப்படும் நிறுவனங்கள்.  தமிழ்நாட்டில் சென்னையில் மூன்றும், கோவை மற்றும் மதுரையில் ஒன்றும் செயல்படுகிறது.

இந்த தீர்ப்பாயம் மூலம் இந்த நிறுவனம் அல்லது இன்னார் இவ்வளவு கடன் வட்டியுடன் தரவேண்டும் என ஒரு தீர்பாணை வாங்கி வைத்துக் கொள்ளலாம். தற்போது ரூ.20 இலட்சத்திற்கு மேலுள்ள கடன் நிலுவைக்கு இத் தீர்ப்பாயத்தை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ அணுகலாம்.

இந்த தீர்ப்பாணையின் படி அடமான சொத்தை தீர்ப்பாயம் விற்று பணத்தை வங்கிகளுக்கு அளிக்கும்.  மீதமுள்ள தொகைக்கு கடன்தாரரின் மற்ற வில்லங்கமில்லாச் சொத்தை தீர்ப்பாயத்தின் மூலம் இணைத்து (Attachment(ABJ) தீர்வு காணலாம்.  மேற்கண்ட தீர்ப்பாயத்தின் ஆணை 12 ஆண்டுகள் செல்லுபடியாகும்

பிணைக்காப்பு, நிதி சொத்து, மறுசீரமைப்பு மற்றும் பிணைக்காப்பு செயலாக்கச் சட்டம் 2002 (SARFAESI Act 2002)
இந்த சட்டப்படி கடன் பெற்ற ஒருவர்  கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனில், வங்கியே அடமான சொத்தை விற்று கடனை நேர் செய்து கொள்ளலாம். குறைந்தபட்ச கடன் ரூ.100,000 மேல் இருக்க வேண்டும்.  வங்கியில் அடமானமாக வைத்த விவசாய நிலத்தை வங்கி இச் சட்டத்தின் கீழ் விற்க இயலாது.  ஆனால் கடன் வசூல் தீர்ப்பாயம் மூலம் விற்கலாம்.

தேசிய நிறுவன சட்ட தீர்பாயம்
2012 ஆண்டிற்கு பிறகு பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் பெருமளவில் வாராதிருக்க, அரசு இச்சட்டத்தை 2016 ஆண்டு அறிமுகப்படுத்தியது.   குறைந்தபட்ச கடன் ரூ.100,000 மேல் இருக்க வேண்டும்.  இந்த ஊரடங்கு காலத்தில் இதை தளர்த்தி உள்ளதாக ஒரு செய்தி குறுந் தொழில்களை பாதுகாக்க என்பதற்காக.
இச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தை நொடித்த நிறுவனமாக அறிவித்து அந்நிறுவனத்தை கலைத்தோ, சொத்துக்களை விற்றோ, வேறு ஒரு நிறுவனத்தோடு இணைத்தோ அதில் கிடைக்கும் பணத்தை அந் நிறுவத்திற்காக கடன், பொருள் வழங்கியவர்கள், பணியாற்றிய தொழிலாளர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகள் ஆகியவற்றை கலைப்பு அதிகாரி வழங்குவார்.
உதாரணத்திற்கு
எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்திற்கு கலைப்பு அதிகாரி எவ்வாறு கைமாற்றினார் என்பதை ஆராய்வோம்.  பல்வேறு நிறுவனங்கள், கடன் கொடுத்தோர் தங்களுக்கு வரவேண்டிய தொகையென நிறுவன கலைப்பு அதிகாரியிடம் உரிமை கோரிய தொகை ரூ.82000 கோடி அவர் ஏற்றுக் கொண்டது ரூ.69,192 கோடி ஆனால் நிறுவனம் கைமாறிய தொகை ரூ.42000 கோடி.  இந்த ரூ,42000 கோடியை அவரே இறுதி செய்த  ரூ.69192 கோடிக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்.  இதன் மூலம் 60% கடன் திருப்பி அளிக்கப்படும். மீதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். 

'Total debt payable to ‘Financial Creditors’ & ‘Operational Creditors’


1. Financial Creditors                      Rs. 4,94,73,00,00,000/-
2. Operational Creditors                  Rs. 1,97,19,20,90,980/-
Total                                     Rs. 6,91,92,20,90,980/-   

Against                                 Rs. 6,91,92,20,90,980/-,

Arcelor Mittal Ltd offered            Rs. 4,20,00,00,000/-.

Therefore %age wise, the amount will be – 4,20,00,00,00,000 * 100 = 60.7% (approx.)

இந்த கலைப்பு நடைமுறை 6 அல்லது 9 மாதங்களுக்குள் முடிக்க சட்டம் சொல்கிறது.  ஆனால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

இந்த தள்ளுபடி பெருமுதலாளிகளுக்கு மட்டுமா இதர கடன்தாரர்களுக்குமா

இந்த மதிப்பு குறைப்பு என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் அனைத்து வகையான கடன்களுக்கு பொருந்தும்.

அடமான கடன், கல்வி கடன், வாகன கடன், சிறு வணிக கடன், பெரு நிறுவனங்களுக்கான கடன். ஆக எந்த வகையான கடன் என்றாலும் இந்த நடைமுறையை பின்பற்றிதான் ஆக வேண்டும்.

என்ன, ஒரு பெரு முதலாளிக்கு கொடுக்கும் கடனை ஒரு லட்சம் நபர்களுக்கு விவசாய கடனாக பகிர்ந்தளிக்க முடியும்.  ஆனால் ஒரு நிறுவனம் 1000 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கமுடியும்.


கடன் வசூலானல் நிலை என்ன?

கடன் வாங்கிய ஒருவர் தொடர்ந்து 4 வருடங்கள் செலுத்தவில்லை என்றால் அவருடைய கடன் முழுவதும் வங்கியின் விதிகளின் Writeoff செய்திருப்பர்.  அவர் தன்னுடைய கடனை தீர்க்க செலுத்தும் தொகை தற்போது இலாபத்தில் காண்பிக்கப்படும்.  கடந்த நான்கு ஆண்டுகளில் நட்டத்தில் காண்பிக்கப்பட்ட தொகை தற்போது இலாபத்தில் காண்பிக்கப் படுகிறது. அவ்வளவுதான்

வசூல் தொகை எவ்வாறு கணிக்கப்படுகிறது

வங்கிக்கு வரவேண்டிய தொகை நாளது தேதி வரையான வட்டியுடன் கடன் வசூலிப்பது என்பதாகும்.  ஏனெனில் வங்கி பொது மக்களிடம் பெறும்   நிலையான வைப்புத் தொகைக்கு (Fixed Deposit) வட்டி வழங்க இயலாது என சொல்ல இயலாது அவ்வங்கி நொடிந்து போகும் வரை.

கடனுக்கு தீர்வு ஏற்படும் நேரத்தில்தான் பேரம் ஆரம்பிக்கப்படுகிறது. வங்கி நாளது தேதிவரையான நிலுவைத் தொகையை கணக்கில் கொள்ளும் மற்றும் அடமான சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் கொள்ளும்.

உதாரணம் நிலை ஒன்று

கடன்                      ரூ.6000 கோடி
கணக்கிடப்படாத வட்டி      ரூ.3000 கோடி
மொத்தம்                  ரூ.9000 கோடி

சொத்தின் மதிப்பு           ரூ.15000 கோடி

இந்த சூழலில் தள்ளுபடி வழங்க வாய்ப்பு மிக குறைவு ரூ. 9000 கோடி வாங்க வங்கி நினைக்கும். அசாதாரண சூழலில் கணக்கிடப்படாத வட்டியில் ஏதாவது தள்ளுபடி வழங்கலாம்

உதாரணம் நிலை இரண்டு

கடன்                      ரூ.6000 கோடி
கணக்கிடப்படாத வட்டி      ரூ.3000 கோடி
மொத்தம்                  ரூ.9000 கோடி

சொத்தின் மதிப்பு           ரூ.5000 கோடி

இங்கேயும் வங்கி மொத்த கடனை வசூலிக்க நினைக்கும் குறைந்தது அசலை வசூலிக்க நினைக்கும்.  ஆனால் இந்த சூழலில் கடன் பெற்ற நிறுவனம் தள்ளுபடி கோரும். சொத்து மதிப்பிற்கு  குறைவாக கடன் தீர்வு ஏற்படுவது மிக கடினம்.

ஆக ரூ68000 கோடி தள்ளுபடியல்ல அதுவொரு வங்கியியல் நடைமுறை. ஆயினும். கடன் தொகை அளவுக்கு அடமானச் சொத்து இல்லையெனில் தள்ளுபடிகள் சாத்தியமே.

ஏதேனும் விளக்கம் வேண்டுமெனில் கேள்விகள் எழுப்பவும்


திங்கள், ஏப்ரல் 27

மார்க் அம்பானி




பாஷாவின்
மார்க் அன்டனியல்ல
பணம் படைத்த
மார்க் - அம்பானி

ஒரேயாரு
பாஷா அல்ல
தேவையெனில் - இவர்கள்
கூட்டணி வைத்துக் கொள்பவர்கள்

ஜோதிகாவின்  பொன்மகள் வந்தாள்
திரையரங்கில் வாராது
"அமேசானில்" வெளிவருவதால்
100 அரங்கம் பாதிக்கப்படலாம்

ரூ.287,505 கோடி கடனடைக்க
சவுதியின் ஆராம்கோவை நாடினார்
மார்க் மாட்டிக் கொண்டார்
மக்களே நமக்கென்ன?!!!

பங்கு சந்தை
பாதாளத்தை நோக்க
அம்பானியின் மதிப்பு
அரோகரா ஆவதற்குள்

கைத்தூக்கி விட
கார்ப்ரேட் தரகர்கள்
கண்டுபிடித்த வழி
10 %  க்கு ரூ.43,574 கோடிகள்

ஜியோவின் 10%  பங்கு
விற்பனையால்
ரிலையன்ஸின் கடன்
குறையலாம்

அதனால் ஆபத்தா?
அது அவர்களின் வணிகம்!!
உலகமாயக்கலின் உன்னதமென
ஊமையாய் இராதே!!!

இந்த இணைவால்
இங்கிருக்கும் 
சிறு குறு வணிகன்
சிக்குற்று மாள்வான்

நடுத்தர வர்க்கம்
நன்மை பயக்குதென
நாலுகால் பாய்ச்சலில்
பின் தொடரும்

முகநூல், வாட்ஸ்அப்
மார்க்கினுடையது
ஜியோ - ஜியோ மார்ட்
அம்பானியுடையது

மார்க்கின் கனவு - இந்தியாவின்
60 மில்லியன் வணிகம்
அம்பானிக்கோ
3 கோடி சிறுகுறு கடைகள்

இடையில் யாரிவர்கள் 
என்றாவது யோசித்தாயா?
என்ன செய்து விடுவார்களென
வாளாயிராதே

தூண்டிலில் சிக்க
கோழியை இரையாய் வைப்பர்
கோவணமும் இல்லாது
சிந்தித்து கொண்டிருப்பாய்

புதிய வேலைவாய்ப்புகள்
புயல் வேக டெலிவரிக்காக
பொறியியல் படித்தவன்
பொறியில் சிக்குவான்

சிறுதுளி பெருவெள்ளம்
சிறு வணிகனுக்கா
கணினியில் - உன்னை 
கண்காணிப்பவனுக்கா

நாளொன்றின் இலாபம்
கடையொன்றுக்கு ரூ.100 எனில்  
3 கோடி கடைகளுக்கு
ரூ.300 கோடி

கணினியின் நுண்ணறிவு
காட்டிக் கொடுக்கும் - நீயோ
ஆபத்பாந்தவனென
ஆர்பரிப்பாய்

மின்ணணு தொழில்நுட்பம்
ஒருவனுக்கா
ஒவ்வொருவனுக்கா - லாபம்
ஒருவனுக்கு மட்டுமே

அருகில் உள்ள கடையில்
அவசர தேவைகளுக்கு
அவனில்லாது - மக்களே
இயங்க முடியாதா

இலாப நட்டம்
உனதருகில் இருப்பவனுக்கா
உனக்கானதா
உடனே முடிவெடு

வீதிக்கு வா
வேண்டியதை வாங்க
வீணாய் கொடுக்காதே
இடையில் இணைபவனுக்கு

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...