ஞாயிறு, ஏப்ரல் 26

ஜோதிகா



ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
அடிமைகளால்
அமைத்த கோயில் - இன்றும்
அழகாயிருக்கிறது

அருகிருக்கும் மருத்துவமனையோ
அலங்கோலமாய்! அருவருப்பாய்!!
அது எப்படியோ
ஆனால் நன்றாயில்லை

நடிகையென்பதாலோ
நாக்கிருக்கிறது என்பதாலோ
நாலுபேரிடம் கூக்குரலிடவில்லை
மனதிருப்பதால்

கடைநிலையை கண்டு
கண்கலங்குவது
கனவுலகில்  அல்ல
கண்ட இடத்தில்

ஆட்சியர் வருகையும்
அவலம் நீங்குதலும்
அவர் பொருட்டெனில்
அதை வரவேற்போம்

கோயிலுக்கோ
உண்டியலுக்கோ
கொடுக்க வேண்டாமென்ற
குரலல்ல

மருத்துவத்திற்கும்
கல்விக்கும்
கொடுவென்றே
கோடிட்ட குரல்

குரலிட்டவன் கொடுப்பதுதானே
5 கோடி முதலிட்டு
9 கோடிக்கு விற்றதில்
கொடுப்பார்கள் என கேலிகள்

சமூக தளங்களில்
இரண்டு மூன்று பிரிவுகளாய்
விமர்சனங்கள் - அவர்
பேசியதை கேட்காமலே

ஆம், அவை
அப்படிதான் இயங்குகிறது
ஆயினும் அதை மாற்றிட
என்ன செய்யலாம்?

இவரை  போல் - அங்கிருந்து
இன்னும் சிலர் - அரங்கத்தில்
கூக்குரலிட்டால் - ஏதும்
விமோசனம் கிட்டுமோ?!

ஞாயிறு, ஏப்ரல் 19

காதல் குளம்



மூழ்கி மூச்சடக்கி
முத்தெடுக்க
ஏற்றதொரு குளமோ

பழகி பார்த்தே
பருவ பாடங்களை
படைத்திட உதவும் குளமோ

அழகி நீ அச்சாரமா
அத்தானை முத்தமிட
அருச்சுனையா பொங்கும் குளமோ

குழவி செய்ய
குலம் தழைக்க
குயவருக்கு ஏற்ற குளமோ

தேகமிருக்கும் வரை
மோகமுண்டு என
தாகந்தீரச் சொல்லும் குளமோ

வழிவழியாய்
வாழும் காதலை
வடிவமைத்த வண்ண குளமோ

மலரும் காதலெல்லாம்
மானுட இயற்கையடி - மானே
இப்பொய்கையும்  அப்படிதானடி

வெள்ளி, ஏப்ரல் 17

ஆனந்த் டெல்டும்டே



அதிகாரத்தின்
அடுத்த பலிகடா
அம்பேத்காரியவாதி
ஆனந்த் டெல்டும்டே

அரசு நிறுவனத்தின் - முன்னாள்
தலைமைச் செயல் அதிகாரி - மத்திய
மேலாண்மை கல்வி நிறுவனத்தின்
இந்நாள் பேராசிரியர்

அறிவு ஜீவி
ஆராய்சி கட்டுரைகள்
30 புத்தகங்கள்
அதனாலென்ன

சமூக செயற்பாட்டாளர்
யாருக்கு என்பதில்தான் பேதம்
ஏழைகளுக்கு என்பதனால் -அவர்
அரசுக்கு எதிரானவர்

எங்கும் ஆனந்த்
எதிலும் ஆனந்த்
என்றொரு புனைவு
ஏகமனதாக ஏற்க

பஞ்சன்யாவில் செய்தி
முதல் தகவல் அறிக்கையாக
இந்திய ஊடக நிறுவனங்களோ
மலடனாது

பீமா கோரேகான்
பிரிடிஷ் ஆதிக்கத்தின் போர்களம்
பார்வையிட்டார் அம்பேத்கார்
ஓரு நூற்றாண்டிற்கு முன்பு

பேஷ்வாக்களை வென்ற மகர்கள்
பொதுவாக கூடுவர் ஆங்கே - அது
200 ஆம் ஆண்டு கொண்டாட்டம்
பற்றியது மராத்தாக்களின் கோபம்

யாருமில்லாத வீட்டில்
யாருடுடைய அனுமதியின்றி
எதையோ கைப்பற்றியதாக செய்தி
ஆதாரங்கள் ரகசியமானது

சான்றுகள் - மூடி
முத்திரையிடப்பட்ட உறையிலே
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு - ம்
சாட்சியை கலைத்துவிடுவார்கள்

பேசுங்கள்
உங்கள் முறைக்காக
காத்திராது என்கிறார்
ஊமையானது சமூகம்

பெருங் கட்சிகள்
பேதலித்து கிடக்கின்றன
சொத்துக்களை காக்க
சோதனைகளை தவிர்திட

தேசத்தையும் மக்களையும்
நேசிப்பவன் தேசவிரோதியாய்
அடையாளப் படுத்தப் படுகிறான்
விதைகள் வேர்விட கூடாதென்பதற்காக

எதிர்குரல்கள்
ஒடுக்கப்படுகிறது
மனித உரிமைகள்
மறுக்கப் படுகிறது

இந்திய ஜனநாயம் என்பது
எதிர் கட்சிகள் வாய் மூடியிருக்க
நீதிமன்றங்கள் கண்காது மூடியிருக்க
ஆட்சியாளர்கள் ஆள்வதாகும்

தனி நபர்கள், கலைஞர்கள்
சிறு அமைப்புகள்
குரல் கொடுக்க
குரல்வளை  நெறிக்கப்படுகிறது

தேசிய பாதுகாப்பு சட்டம்
தேச பிதாவை கொன்றவர்கள்
எப்படி கையாள்வார் எனவறிவாய்
ஆயினும் குரல்கொடு தோழனே


குறிப்பு:  பாஞ்சன்யா  RSS பத்திரிக்கை



வியாழன், ஏப்ரல் 16

குத்தமில்ல?!!



குல தெய்வத்திற்கு
காப்பு கட்டிட
குத்தமென - கிராமத்து
எல்லை தாண்டுவதில்லை

எல்லை கடந்து
தொல்லை தரும்
கொரோனாவோ - உலகை
குற்றுயிர் ஆக்குதே

உயிரை காக்க
தேவையை சுருக்கு
ஊரைச் சுற்றாது
உடல்நலம் பேணு

மருந்து இல்லாததால்
மனதை கட்டுப்படுத்து
மனைக்குள் அடங்கு - அல்ல
மயானத்தில் முடுங்குவாய்

காற்று வாங்க போனால்
கொரோனா வாங்கி வருவாய்- அதை
கேட்டு வாங்கி போனால் - விடை
சொல்லிக் கொண்டு போவாய்

நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
இழப்புகள் கூடுவதால்
இங்குமங்கும் சுற்றாதே

வாழும் மக்களின்
வாழ்வாதாரம் - மேலும்
ஓரு வாரம்
தள்ளி போகலாம்

ஊரை காத்திட
முக கவசமும்
தலைகவசமும் போடு - அது
உனையும் காத்திடும்

பசி பட்டினிக்கு
பஞ்சை பராரியோடு
பாமரனுக்கும் உதவி செய்
உன்னையும் பாதுகாத்து


புதன், ஏப்ரல் 15

எங்கே கடவுள் - மார்கண்டேய கட்ஜு



தீர்க்கமான கேள்வி
தீர்க்க வேண்டியதுதானே
தீர்த்த கோமியத்தாலே

வேதனை தீருமென்றால்
விஷத்தை அருந்த - உன்
பிள்ளைகள் காத்திருக்கையில்

எங்கே சென்றாய்
என் கடவுளே
ஏன் கதவடைத்தாய்

எழுப்பியவன் நீதிபதி
எனினும் - ஆண்டவனிடம்
அடிபணிந்து ஆக வேண்டுமோ

அரங்கன்
அவதாரமெடுக்கலாம்
அதுதான் இதுவென்று கதைக்காது

அரன்
அரம்பையோடா - அல்ல
மயானத்தில்லா

மாயவனை
மோகினி வடிவடுக்க  சொல்லி
புணர சென்றிருக்கிறான்

ஏனா? !! வந்த மருத்துவனை
வாயிலேயே திருப்பியவனை
எப்படிச்  சொல்ல

சொர்க்க வாசல் திறக்குமென
சோம்பி கிடக்காதே
சோறு தண்ணிக்கு வழியில்லை

"தெய்வத்தால் ஆகாதெனினும்"
தீர்த்துச் சொன்ன
திருவள்ளுவன் வழியில்

முயற்சி செய் மானுடமே
மர்கண்டேயேனாக வாழவல்ல
கொத்துக் கொத்தாய் சாகாதிருக்க

செவ்வாய், ஏப்ரல் 14

கைத்தட்டாதே





இரண்டு தெரு தள்ளியிருக்கும்
எனை ஈன்ற அன்னையை
பார்க்க சென்றேன்
பார்த்தாளோ என்னவோ
   
நில் அங்கேயென
உள் அனுமதியாது
பார்க்க வந்தவளை
பாதையிலே திருப்பினாள்

இருக்கும் நிலையில்
இனி வராதே என்றாள்
கைபேசியில் நலம் விசாரி
புறப்படு என அனுப்பிவிட்டாள்

மருத்துவர் மாண்டார்
மாண்டவர் யாராயினும்
மானுட நியதி  
நல்லடக்கம்

கார்ப்பரேட் மருத்துவமனை
கருணை கொண்டு
இடுகாட்டின் வாசலில்
வீசி சென்றது

உற்றார் உறவினர்
உடனில்லை ஒருவரும்
கற்ற படிப்பும்
கவைக்கு உதவவில்லை

அரிச்சந்திரன் கதை படித்து
அய்யகோ என மாரடித்து
அழ யாருமில்லை - இடுகாட்டு
ஊழியனும்  ஓடிவிட்டான்

நீத்தார் பெருமையோ
நிறைய சம்பாதித்த கதையோ
கொரோனோவிற்கு முன்
ஒன்றுமில்லை

சமூகம் சமத்துவமானது
மருத்துவனோ ஈன்றவளோ
மரணத்தின் எவ்விளிம்பிலும்
நீ தேவையற்றவன் 

வெள்ளி, ஏப்ரல் 10

புலம் பெயர்தல்




தத்தி தவழ்ந்து
புத்தி தெளிந்த
என் நாட்டை விட்டு
ஏகாந்த தேசம். புறப்பட

சுயம்வர தேடலில்
சோதிடப் பொருத்தத்தில்
சிந்தை கவர்ந்தவனோடு
சென்னை செல்கிறேன்

கொட்டாரத்தில் ஆடியதும்
குளத்தில் நீந்தியதும்
எட்டாது என்றாலும்
எனக்கவன் கிட்டுவானென்றால்

சிட்டாக பறப்பேனே
மொட்டாகக மலர்வேனே
கட்டியம் கூறுவேனே
கண்ணாளன் இவனென்று

முட்டத்து மீனும்
கிட்டத்து தோழியும்
எட்டாது போவர்
என்னத்தான் என்கைபிடிக்க

வெள்ளிமலை முருகனும்
தெருக்கோயில் காவடியும்
விட்டுவிட்டு சென்றாலும்
வேலவன் என்னுடனே

திண்ணியன் என்அத்தான்
திருமுகம் போதுமே
திகட்டாத அன்பை
தினம்தினம் தருவானே

ஏழுகாத தூரமென்றாலும்
எனக்கது கூப்பிடு தூரம்தான்
என்னுறவும் தோழியரும்
எனை புரிந்தவர்தாம்

எண்ணியவுடன் எழுந்தருள
என்னத்தான் கண்ணசைப்பார்
எந்தையும் என்று வருவேனென
எதிர் பார்த்து காத்திருப்பார்

மானமிகு மதிப்பீடு






அணிவகுத்து நின்றன
ஐக்கிய நாடுகள்
ஐயம் கொண்டேன்
எதிரி யாரென்று

எதிரி போர் பிரகடணத்தை
எல்லோருக்கும் அறிவித்து
மாதங்கள் ஐந்து கடந்துவிட்டன
மரணங்கள் 90000 கடந்தன

வல்லரசுகள்
வேடிக்கை பார்த்தன
ஊரடங்கென ஊளையிட்டனர்
உடனே திரும்ப பெற்றன

வெற்றி மட்டும் கிட்டவில்லை
கொத்துக் கொத்தாய் மரணங்கள்
விதிர்த்து நிற்கின்றன வல்லரசுகள்
மூன்றாம் உலகம் கைத்தட்டுகிறது

எதிரிக்கு முன்னே நிறுத்த
பீரங்கி கவசமல்ல
முக கவசம் தட்டுப்பாடு – அய்யோ
மூச்சிறைக்கிறதே

வெடிமருந்துகளென்றால்
வேண்டுமளவு தயாரிப்போம்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
சந்தையில்லை – இருப்புமில்லை

இந்தியா தரவேண்டும்
இல்லையெனில் என்கிறான்
தடைகளை நீக்குகிறோம்
தயாளமாயிரு சீனாவே என்கிறான்

ஆங்காங்கு நிலைகொண்டு
அகிலத்தை அச்சுறுத்தியவர்கள்
கை கூப்புகிறார்கள்
கொரோனோ விலகென்று

அணு ஆயுதங்கள்- அபத்தம்
உதார் விடுவதற்கு மட்டுமே
ஒன்றுக்கும் உபயோகமில்லை
எனவே வீட்டுக்குள் முடங்கு

பட்டினிச் சாவு – பரவாயில்லை
அடுத்தவேளை உணவு
ஆகட்டும் பார்க்கலாம்
அகிலத் தலைவன் - ட்ரெம்ப்

காசு இல்லையெனில்
கதவடைக்கப்படும்
காப்பீடு இல்லையெனில்
காலனை சந்திக்க வேண்டும்

காப்பீடும் கதவடைத்ததே
சேமிப்பும் கரைந்ததே
காலனிடமிருந்து காப்பாற்ற
மதிப்புகு தேசத்திற்கோ வழியில்லை  

லாபம் மட்டுமே குறியென்பதால்
பாவப்பட்ட மக்களை காக்க
பரமபிதாவும் வரவில்லை
பாராள்பவரும் வரவில்லை



உலகப்போர்


உலகப் போரா
உள்நாட்டு போரா
எந்நாட்டுக்கும் தெரியவில்லை
எந்நாட்டுடையோனுக்கும் தெரியவில்லை

புதிய ஏவுகணைகள்
கண்டம் விட்டு
கண்டம் பாயுது
கண்ணுக்கும் புலப்படவில்லை

விமானம் தாங்கி கப்பல்கள்
விரைந்தே செல்கின்றன
வீழ்ச்சி எதிரிக்கல்ல
வைரஸ் உடனிருப்பதால்

திருமுகம் காண.......



உனதானா பெயரைக் கேட்டால்
    உயிர்துடிப்பு உயரஉயர எகிறுதடா
எனதானா நினைவு எங்கும்
   என்நெஞ்சம் ஏங்கேங்கி போகுதடா
திருமுகம் காணவே வேண்டுதலடா
  திருடா தினந்தினம் காட்டாயோ
வருமுகம் கன்னியான் அறிந்தாலோ
   வாடாதடா இந்த வாசமல்லி

தேக்கி வைச்ச ஆசையை
    திறந்துவிடு மேட்டுரூ அணைபோல
காக்க வச்சா தவிப்பேனே
    காய்ந்த  கடைமடை விவசாயியா
சொக்கி  நிற்கும் முல்லைதானே
    சூடிக் கொள்ள மயங்குதானே
முக்கி முத்தெடுக்கும் காலந்தானே
    மூன்றாம் சாமமும் நீளுந்தானே

வைரஸ் - கொரோனா




காற்றிலே உயிரற்று - உன்னில்
கலந்தவுடன் உயிர்பெற்று
எண்ணிலடங்கா படியெடுத்து
யார் மூச்சையும் நிறுத்துவது

தெரிந்தல்ல - தெரியாமல்
அறிந்தல்ல - அறியாமல்
செய்த தவறேதான் - உன்னை
செயலிக்க செய்யும்

சகலமும் குற்றமல்ல
ரட்சிக்க கடவுளுமில்ல
குணமாக்க மருந்துமில்ல
மானுடமே அமைதியாயிரு

கொடிது கொடிது
வறுமை கொடிது
அஃதுபோல்
கொரோனா கொடிது

90000 பலிகளை கடந்தும்
தேவலாயமும் மசூதியும்
திருக்கோயிலும் 
ஏதும் அறியாதிருக்கின்றன

தேகம் காக்க
தெருவை தீண்டாது
குறுகிய காலம்
குடும்பத்தோடு குதுகலி

சுவாச பயிற்சியும்
சகவாசம் தவிர்த்தலும்
உணவே மருந்தென்றும்
உணர்ந்து கொள்

ஆக அறைக்குள் முடங்கு
ஆசையை துற
புத்தனாக மாறவல்ல
பூவுலகில் நடமாட

புதன், ஏப்ரல் 8

வெட்டிவேலை




சட்டம் இயற்றித் தனிமை
   சரித்திரத்தில் இதுவொரு அமைதி
விட்டம் பார்ப்பது நலமோ
   வீணாய் இருப்பதும் சுமையோ
கூட்டில் அடைபட்ட வாழ்க்கை
   கூர்ம அவதாரமாய் நகர
நாட்டில் நடந்ததைக் கண்டே
   நானும் வடித்தேன் கவிதைகளை

செவ்வாய், ஏப்ரல் 7

காணவில்லை




வகைவகையாக
வானில் வந்த
போர் விமானங்களை
காணவில்லை

கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவுகணைகளையும்
காணவில்லை

அங்கே அணுகுண்டு
இங்கே அணுகுண்டு
எங்கே இவர்கள்
காணவில்லை

ஆயுத பேரங்கள்
மேலாதிக்க கனவுகள்
வல்லரசு தேசங்கள்
காணவில்லை

காண்காணித்து
துல்லிய தாக்குதல் நடத்தியவர்கள்
கோரோனா வந்தவுடன்
காணவில்லை

ஆயுதங்களால்
அற்புத மரணமளித்தவர்கள்
கொத்து கொத்தாக
காணவில்லை

ஞாயிறு, ஏப்ரல் 5

இலக்கு - 9 மணி விளக்கு




கொள்ளை நோய்
நூறிலிருக்க
மருத்துவ சேவகனுக்கு
கைத்தட்டு

ஆயிரத்திலிருக்கும்போது
அல்லாவை வணங்குபவனால்
அக்கம்பக்கம்  தொற்றுதென
அவதூறு பரப்பு

நாளைய செய்தியன
எதிர்பார்ப்பை உருவாக்கி
இருக்கும் விளக்கணைத்து
இரவில் தீபமேற்று

நக்கலடிப்பாய்
நன்றாக தெரியும்
விளக்கமாய் விளக்கை
விளக்கிக் கொண்டிருப்பாய்

பகுத்தறிவு சுடர்களை
மடை மாற்றியதற்கு
எக்காளமிட்டல்ல
மௌனமாக சிரிப்பர்

அவர்களின் இலக்கு
முட்டாள் தலைவனென
முச்சந்தியில் உனை
பேச வைப்பது

இங்கேயும் முட்டாள்கள்
மதராஸாவில் கூடுவார்கள்
தென்காசி பக்கம்
திருவிளக்கை திருப்புவார்கள்

நீயோ
அயோத்தி என்பாய்
ஈஷா என்பாய்
இருக்கட்டும் என்பானவன்

ஆக
நீயும் விளக்கேற்று
அந்த இரவிலல்ல
இந்த பகலில்

பகலென்றாலும் - நீ
இருட்டிலிருக்கிறாய்
இலக்கோடு இருப்பவன்
விளக்கேற்ற சொல்கிறான்

வீழ்ந்த பொருளாதாரத்தை
விளக்கச் சொல்
மீட்டெடுக்கும் வழியை
மேய்பரிடம் கேள்

கச்சா எண்ணெய்
100 டாலாராயிருந்த போது
76 ரூ      பெட்ரோல் - இன்று
22 டாலராச்சு கச்சா

4 ல் ஒரு பங்கு
விலை வீழ்ந்தபின்
குறையாத விலைக்கு
விளக்கேற்று

கொள்ளை நோயின்
எல்லை எதுவென்று கேள்
ஒதுக்கிய நிதியின்
பயன்பாட்டை விளக்கச் சொல்

அன்றாடங் காய்ச்சிக்கு
அடுப்பெரிய விளக்கேற்று
அடுத்தநாள் வேலையில்லை
அங்கு விளக்கேற்று

ஓரிரவில் ரூபாய் மதிப்பழித்தாயே
ஓர் ஊரடங்கிற்கு
இரண்டு மாதம் ஏனென
விளக்கேற்று

உண்டு உறங்க
உறைவிடமில்லாது
நீண்ட பயணங்கள் - அங்கே
விளக்கேற்று

ரூ 1000 ரேஷனில்
ரூ 5000 ஓட்டுக்கு
ஒப்பிட்டு உளராதே
விளக்கேற்று

வாராக் கடனும்
வங்கியும் காணாது போகுது
வக்கத்தவனல்ல - வாக்காளன்
விளக்கேற்று

பங்கு சந்தையில்
12000 புள்ளிகள் இறங்க
பல இலட்சம் கோடிகள் காணவில்லை
சென்றவிடம் தேடி விளக்கேற்று

காவலும் கட்டுப்பாடும்
கண்காணிக்கதான்
கசையடிக்கல்ல
விளக்கேற்று

உலகமெல்லாம் இயங்கையிலே
உன்வீட்டு விளக்கணைக்க
ஒளிந்து கொள்ளுமோ வைரஸ்
விளக்கேற்று

மின்சார விளக்கணைக்க
மின் தடுமாற்றம் ஏற்படுமாம்
உன் தடுமாற்றத்திற்கே உதவாதவன்
மின் தடுமாற்றத்திற்கா கவலையுறுவான்

தொகுதிக்கொரு கூட்டம்
இந்துவாகி விளக்கேற்றும்
பக்திக்கெதிராய் பதுங்காதே
கொதித்தெழு கூக்குரலிடு

பஞ்சமனும் சூத்திரனும்
இந்துவென ஒருங்கிணைக்கிறான்
தஞ்சமென்று செல்பவரிடம்
விளக்கேற்று

கிண்டலும் நக்கலும்
கிளர்ச்சியை உருவாக்காது
வெகுண்டெழு - எழுச்சியோடு
விரட்டும் வேலையைசெய்

பிரித்தாளும் சூழ்ச்சிக்கெதிராய்
பகுத்தறிவு சுடரேற்று
உரிமையுண்டு உயிர்வாழ
உனக்கது புரிய விளக்கிவிட்டேன்






சனி, ஏப்ரல் 4

வாலி


தம்பிக்கு நட்பாய்
தசரதப் புத்திரனாம்
தாரை உரைக்க...
தம்பியைக் கொல்லேன் - என்கிறான்

வாய்க்கால் தகராறு
வாலிக்கும் இராமனுக்கும்
வாழ்வில் ஏதடி
வேதங்கற்றவன் - யோக்கியனடி

எதிர்நின்று வீழ்த்தாது
புல்மறைத்தப் பாழ்கிணறுபோல்
பாணமெய்தினான் மறைந்திருந்து
மாண்டான் வாலி - வீரனவன்

அறத்தோடுப் போரிட்டவனை
திறத்தால் வெல்லாது
புறத்தால் கொன்றே
புகழ்மகுடம் கொண்டவனே

எதிர்த்து நீவந்திருந்தால்
எமலோகம் சென்றிருப்பாய்
மறைந்துக் கொன்றதனால்
மாறாபழிச் சுமக்கிறாய்

சுக்ரீவனின் தேவை
சீதையை மீட்கவென்றால்
பாதைக் காட்டி - உனது
மனையாளை மீட்டிருப்பேனே

இப்போதோ

விலங்கை கொல்ல
விதிகள் வேண்டாமென்கிறாய்
ஏலாமை மறைக்க
ஏதோதோ காரணம் தேடுகிறாய்







புதன், ஏப்ரல் 1

கடவுள் செயல்


வாடகைக்கு வாய்தா
வழங்குமாறு முதல்வர் கோருகிறார்
வடக்கன் அம்பானி
வாடகையா ஏன் எதற்கு என்கிறார்

சினிமா தியேட்டர்
ஊருக்கு ஓரிரண்டு- அன்று
பிவிஆருக்கு  870 - இன்று
பிதற்றுகிறான் தியேட்டரா வாடகையாயென

கடவுள் செயல்
கல்லாவில் பணமில்லை
லாபம் மட்டுமே குறியானவனுக்கு
கொரோனா  காட்டிய வழி

வெளிநாட்டு இந்தியனுக்கு
விமான பயணம் அளிக்கிறாய்
வேண்டாதவனோ உதிரி வர்க்கம்
பூச்சிக்கொல்லி தெளிக்கிறாய்

சமூக இடைவெளி
சமரசமின்றி பேணப்படுதோ
சம்புகன் இங்கே
தப்லீக் முஸ்லிமோ

கொரோனா குற்றமில்லை
கொசு மருந்தும் பரவாயில்லை
குடும்பம் வாழ வழியில்லை
கடவுள் செயலென வாளாயிருப்பதா






புதன், மார்ச் 25

கடவுள்




கண்ணப்பனின் பக்தியை சோதிக்க
கண்ணில் இரத்தம் வடித்தவனே
கண்டத்தில் ஆலகாலம் நிறுத்தியவனே
என்னப்பனே எங்களுக்கு கதவடைக்காதே

உலகளந்த வாமன வடிவமே
உலகாளும் மாபலி கொரோனவை
மூன்றடி எடுத்து வைத்தே
மன்றாடும் மக்களை காப்பாற்று

பெண்ணால் பிறக்காத முருகனே
உன்னால் மடிந்தவன் சூரனே
ஆறு முகத்தில் கொரோனாவா
ஆறுகால உணவும் அரோகராவா


மகிசா சூரனல்ல - மக்களம்மா
மரணம் கொரோனாவால் வேண்டாம்மம்மா
மகேசுவரனின் வரமும் இல்லையம்மா
மலைத்தே கதவடைத்துக்  கொள்ளாதேம்மா







நலம் வாழ வேண்டுகிறேன்



கொரானவை துரத்த
கூட்டம் போடாதே

காற்றில் பரவுவதால்
கண்ட இடம் சுற்றாதே

வெளிநாட்டிலிருந்து வந்தவனை
வலுக்கட்டாயமாக பார்க்காதே

வதந்திகளை பரப்பாதே
"வாட்சப்பை" நம்பாதே

ஆகச் சிறந்த மருந்தை
ஆங்காங்கே தேடாதே

அறிவியல் அளிக்கும்வரை
அமைதியாய் கவனித்திரு

மரணத்தை தள்ளிபோட
மனிதனாய் நடந்துகொள்

ஏனெனில் பாசக்கயிறு
கொரோனாகவும் இருக்கலாம்

சனி, மார்ச் 14

கரோனா பங்கு






15 இலட்சம் கோடிகள்
பங்கு சந்தையில் இழப்பு
கரடி கொண்டு போனதோ
மாடால் மீட்க முடியாதோ

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தில்
யாருடைய பணம்
எங்கே போனது

இரத்த வெள்ளமென
பரிசுத்த பத்திரிகைகள்
பாடம் போதிக்க
பாவம் மக்கள்

காரணங்கள்
கரோனா வைரஸ்
யெஸ் வங்கி திவால்
அரசும் பத்திரிக்கையும் வாந்தியெடுத்தவை

ஆசிய பணக்காரன் ஜாக்-மா
அம்பானியின் பட்டத்தை பறிக்க
கரோனா காரணமா
கார்ப்பரேட் ஊழல் நாடகமா

வீழ்ந்த பொருளாதாரத்தின்
நீட்சி இதுவென்றும்
வேலைவாய்ப்பு முடங்கியதின்
தொடர்ச்சி என கொள்ளடா

பங்கு ஈவுக்கு
ஏங்கி கிடப்பவர்களே
ஏப்ரலில் ஏமாற - இதுவொரு
முன்னோட்டமென புரிந்து கொள்ளடா

ஞாயிறு, மார்ச் 1

இலக்கணப் பிழை






கற்றலில் கரைகண்டது
  கண்ணுற்றா கற்சிலை வடித்தா
அற்றை தினத்தில்
  அறமற்று காணிக்கை கேட்டதா
சற்றேனும் வெட்கமின்றி
   சங்கறுக்க கற்றது அருச்சுனனா
பட்டென்று வெட்டி
   படைக்கப் பெற்றவன் ஏகலைவனா

கேட்டதும் கொடுத்தவன்
   கற்றலில் சிறந்த மாணவனா
கேட்டும் கொடுக்காதவன்
   கற்பித்தலுக்கு இலக்கணம் ஆனவனா
சூட்சம வெற்றிக்கு
   சுற்றம் பார்த்தல் பிழையே
ஆட்சேபனை ஏதுமில்லை
   அசுவத்தமா ஹதமென்பதும் கலையே

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...