ஞாயிறு, ஏப்ரல் 5

இலக்கு - 9 மணி விளக்கு




கொள்ளை நோய்
நூறிலிருக்க
மருத்துவ சேவகனுக்கு
கைத்தட்டு

ஆயிரத்திலிருக்கும்போது
அல்லாவை வணங்குபவனால்
அக்கம்பக்கம்  தொற்றுதென
அவதூறு பரப்பு

நாளைய செய்தியன
எதிர்பார்ப்பை உருவாக்கி
இருக்கும் விளக்கணைத்து
இரவில் தீபமேற்று

நக்கலடிப்பாய்
நன்றாக தெரியும்
விளக்கமாய் விளக்கை
விளக்கிக் கொண்டிருப்பாய்

பகுத்தறிவு சுடர்களை
மடை மாற்றியதற்கு
எக்காளமிட்டல்ல
மௌனமாக சிரிப்பர்

அவர்களின் இலக்கு
முட்டாள் தலைவனென
முச்சந்தியில் உனை
பேச வைப்பது

இங்கேயும் முட்டாள்கள்
மதராஸாவில் கூடுவார்கள்
தென்காசி பக்கம்
திருவிளக்கை திருப்புவார்கள்

நீயோ
அயோத்தி என்பாய்
ஈஷா என்பாய்
இருக்கட்டும் என்பானவன்

ஆக
நீயும் விளக்கேற்று
அந்த இரவிலல்ல
இந்த பகலில்

பகலென்றாலும் - நீ
இருட்டிலிருக்கிறாய்
இலக்கோடு இருப்பவன்
விளக்கேற்ற சொல்கிறான்

வீழ்ந்த பொருளாதாரத்தை
விளக்கச் சொல்
மீட்டெடுக்கும் வழியை
மேய்பரிடம் கேள்

கச்சா எண்ணெய்
100 டாலாராயிருந்த போது
76 ரூ      பெட்ரோல் - இன்று
22 டாலராச்சு கச்சா

4 ல் ஒரு பங்கு
விலை வீழ்ந்தபின்
குறையாத விலைக்கு
விளக்கேற்று

கொள்ளை நோயின்
எல்லை எதுவென்று கேள்
ஒதுக்கிய நிதியின்
பயன்பாட்டை விளக்கச் சொல்

அன்றாடங் காய்ச்சிக்கு
அடுப்பெரிய விளக்கேற்று
அடுத்தநாள் வேலையில்லை
அங்கு விளக்கேற்று

ஓரிரவில் ரூபாய் மதிப்பழித்தாயே
ஓர் ஊரடங்கிற்கு
இரண்டு மாதம் ஏனென
விளக்கேற்று

உண்டு உறங்க
உறைவிடமில்லாது
நீண்ட பயணங்கள் - அங்கே
விளக்கேற்று

ரூ 1000 ரேஷனில்
ரூ 5000 ஓட்டுக்கு
ஒப்பிட்டு உளராதே
விளக்கேற்று

வாராக் கடனும்
வங்கியும் காணாது போகுது
வக்கத்தவனல்ல - வாக்காளன்
விளக்கேற்று

பங்கு சந்தையில்
12000 புள்ளிகள் இறங்க
பல இலட்சம் கோடிகள் காணவில்லை
சென்றவிடம் தேடி விளக்கேற்று

காவலும் கட்டுப்பாடும்
கண்காணிக்கதான்
கசையடிக்கல்ல
விளக்கேற்று

உலகமெல்லாம் இயங்கையிலே
உன்வீட்டு விளக்கணைக்க
ஒளிந்து கொள்ளுமோ வைரஸ்
விளக்கேற்று

மின்சார விளக்கணைக்க
மின் தடுமாற்றம் ஏற்படுமாம்
உன் தடுமாற்றத்திற்கே உதவாதவன்
மின் தடுமாற்றத்திற்கா கவலையுறுவான்

தொகுதிக்கொரு கூட்டம்
இந்துவாகி விளக்கேற்றும்
பக்திக்கெதிராய் பதுங்காதே
கொதித்தெழு கூக்குரலிடு

பஞ்சமனும் சூத்திரனும்
இந்துவென ஒருங்கிணைக்கிறான்
தஞ்சமென்று செல்பவரிடம்
விளக்கேற்று

கிண்டலும் நக்கலும்
கிளர்ச்சியை உருவாக்காது
வெகுண்டெழு - எழுச்சியோடு
விரட்டும் வேலையைசெய்

பிரித்தாளும் சூழ்ச்சிக்கெதிராய்
பகுத்தறிவு சுடரேற்று
உரிமையுண்டு உயிர்வாழ
உனக்கது புரிய விளக்கிவிட்டேன்






சனி, ஏப்ரல் 4

வாலி


தம்பிக்கு நட்பாய்
தசரதப் புத்திரனாம்
தாரை உரைக்க...
தம்பியைக் கொல்லேன் - என்கிறான்

வாய்க்கால் தகராறு
வாலிக்கும் இராமனுக்கும்
வாழ்வில் ஏதடி
வேதங்கற்றவன் - யோக்கியனடி

எதிர்நின்று வீழ்த்தாது
புல்மறைத்தப் பாழ்கிணறுபோல்
பாணமெய்தினான் மறைந்திருந்து
மாண்டான் வாலி - வீரனவன்

அறத்தோடுப் போரிட்டவனை
திறத்தால் வெல்லாது
புறத்தால் கொன்றே
புகழ்மகுடம் கொண்டவனே

எதிர்த்து நீவந்திருந்தால்
எமலோகம் சென்றிருப்பாய்
மறைந்துக் கொன்றதனால்
மாறாபழிச் சுமக்கிறாய்

சுக்ரீவனின் தேவை
சீதையை மீட்கவென்றால்
பாதைக் காட்டி - உனது
மனையாளை மீட்டிருப்பேனே

இப்போதோ

விலங்கை கொல்ல
விதிகள் வேண்டாமென்கிறாய்
ஏலாமை மறைக்க
ஏதோதோ காரணம் தேடுகிறாய்







புதன், ஏப்ரல் 1

கடவுள் செயல்


வாடகைக்கு வாய்தா
வழங்குமாறு முதல்வர் கோருகிறார்
வடக்கன் அம்பானி
வாடகையா ஏன் எதற்கு என்கிறார்

சினிமா தியேட்டர்
ஊருக்கு ஓரிரண்டு- அன்று
பிவிஆருக்கு  870 - இன்று
பிதற்றுகிறான் தியேட்டரா வாடகையாயென

கடவுள் செயல்
கல்லாவில் பணமில்லை
லாபம் மட்டுமே குறியானவனுக்கு
கொரோனா  காட்டிய வழி

வெளிநாட்டு இந்தியனுக்கு
விமான பயணம் அளிக்கிறாய்
வேண்டாதவனோ உதிரி வர்க்கம்
பூச்சிக்கொல்லி தெளிக்கிறாய்

சமூக இடைவெளி
சமரசமின்றி பேணப்படுதோ
சம்புகன் இங்கே
தப்லீக் முஸ்லிமோ

கொரோனா குற்றமில்லை
கொசு மருந்தும் பரவாயில்லை
குடும்பம் வாழ வழியில்லை
கடவுள் செயலென வாளாயிருப்பதா






புதன், மார்ச் 25

கடவுள்




கண்ணப்பனின் பக்தியை சோதிக்க
கண்ணில் இரத்தம் வடித்தவனே
கண்டத்தில் ஆலகாலம் நிறுத்தியவனே
என்னப்பனே எங்களுக்கு கதவடைக்காதே

உலகளந்த வாமன வடிவமே
உலகாளும் மாபலி கொரோனவை
மூன்றடி எடுத்து வைத்தே
மன்றாடும் மக்களை காப்பாற்று

பெண்ணால் பிறக்காத முருகனே
உன்னால் மடிந்தவன் சூரனே
ஆறு முகத்தில் கொரோனாவா
ஆறுகால உணவும் அரோகராவா


மகிசா சூரனல்ல - மக்களம்மா
மரணம் கொரோனாவால் வேண்டாம்மம்மா
மகேசுவரனின் வரமும் இல்லையம்மா
மலைத்தே கதவடைத்துக்  கொள்ளாதேம்மா







நலம் வாழ வேண்டுகிறேன்



கொரானவை துரத்த
கூட்டம் போடாதே

காற்றில் பரவுவதால்
கண்ட இடம் சுற்றாதே

வெளிநாட்டிலிருந்து வந்தவனை
வலுக்கட்டாயமாக பார்க்காதே

வதந்திகளை பரப்பாதே
"வாட்சப்பை" நம்பாதே

ஆகச் சிறந்த மருந்தை
ஆங்காங்கே தேடாதே

அறிவியல் அளிக்கும்வரை
அமைதியாய் கவனித்திரு

மரணத்தை தள்ளிபோட
மனிதனாய் நடந்துகொள்

ஏனெனில் பாசக்கயிறு
கொரோனாகவும் இருக்கலாம்

சனி, மார்ச் 14

கரோனா பங்கு






15 இலட்சம் கோடிகள்
பங்கு சந்தையில் இழப்பு
கரடி கொண்டு போனதோ
மாடால் மீட்க முடியாதோ

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தில்
யாருடைய பணம்
எங்கே போனது

இரத்த வெள்ளமென
பரிசுத்த பத்திரிகைகள்
பாடம் போதிக்க
பாவம் மக்கள்

காரணங்கள்
கரோனா வைரஸ்
யெஸ் வங்கி திவால்
அரசும் பத்திரிக்கையும் வாந்தியெடுத்தவை

ஆசிய பணக்காரன் ஜாக்-மா
அம்பானியின் பட்டத்தை பறிக்க
கரோனா காரணமா
கார்ப்பரேட் ஊழல் நாடகமா

வீழ்ந்த பொருளாதாரத்தின்
நீட்சி இதுவென்றும்
வேலைவாய்ப்பு முடங்கியதின்
தொடர்ச்சி என கொள்ளடா

பங்கு ஈவுக்கு
ஏங்கி கிடப்பவர்களே
ஏப்ரலில் ஏமாற - இதுவொரு
முன்னோட்டமென புரிந்து கொள்ளடா

ஞாயிறு, மார்ச் 1

இலக்கணப் பிழை






கற்றலில் கரைகண்டது
  கண்ணுற்றா கற்சிலை வடித்தா
அற்றை தினத்தில்
  அறமற்று காணிக்கை கேட்டதா
சற்றேனும் வெட்கமின்றி
   சங்கறுக்க கற்றது அருச்சுனனா
பட்டென்று வெட்டி
   படைக்கப் பெற்றவன் ஏகலைவனா

கேட்டதும் கொடுத்தவன்
   கற்றலில் சிறந்த மாணவனா
கேட்டும் கொடுக்காதவன்
   கற்பித்தலுக்கு இலக்கணம் ஆனவனா
சூட்சம வெற்றிக்கு
   சுற்றம் பார்த்தல் பிழையே
ஆட்சேபனை ஏதுமில்லை
   அசுவத்தமா ஹதமென்பதும் கலையே

மாயக் காதல்



அடுத்தடுத்த அலைபோல
  அடியே நினைவுகள்
படுத்துறங்க பகற்கனவில்
  பாவையுன் பாவனைகள்
தடுத்தாட் கொள்ள
  தேவனும் வரவில்லை
நடந்ததை மறந்திட
  நன்நெஞ்சை வேண்டுகிறேன்

பூஞ்சோலை ஏற்காட்டில்
  பாப்புனைந்த காதையும்
தஞ்சையில் தேடிய
  தாளராக கீர்த்தனையும்
நெஞ்சில் வாராதிருக்க
  நித்தமும் வேண்டுகிறேன்
அஞ்ஞானம் போலும்
  அகலாது வாடுகிறேன்

நாளெல்லாம் பேசியது
  நேற்றோடு முடிந்தது
நானே பேசுவது
  ஞானக் கிறுக்கானது
தாளெல்லாம் தமிழானது
   நாளமும் கொதிப்பானது
மாளாத அன்பிலே
   மாயத்தை வெல்வேனோ

இசையூற்று





என்னாசை கேளடா
  ஏதோதோ இராகம் ஏனடா
கண்ணசைவை பாரடா
  காதலினின் இராகத்தை இயற்றடா
பண்ணிசை பட்டியலில்
  பாவையிடம் நரம்பிசை அறங்கேற்று
திண்டாடி போகும்வரை
   தேகத்தில் பொங்கட்டும் இசையூற்று

மாடமாளிகை வேண்டாம்
    மச்சான் மனசுதான் வேண்டும்
காடுகழனி வேண்டாம்
    கடைசி வரை கைப்பிடித்து வரவேண்டும்
ஜாடமாடையா ஊருலகம்
     வாய்வலிக்க பேசிக் கொள்ளட்டுமே
கூடிக்களிக்க வாருமய்யா

      குதுகலம் சாமம் வரை நீளட்டுமே

வியாழன், ஏப்ரல் 18

தேர்ந்தெடுங்கள்.........





ரஃபேலா
போபர்ஸா

அடிமைகளா
2 ஜியின் வாரிசுகளா

தண்டகாரண்யா
தூத்துக்குடி ஸ்டெர்லைட்

கச்சத் தீவு
காவேரி தண்ணீர்

மாறிடுமோ - தங்களின்
சனநாயக கடமையால்

கோடிகள் பறிமுதல்
ஐ.டி ரெய்டுகள்

அவர்களின்
அதிகாரத்தை காட்டுகிறது

அரசு இயந்திரம்
அவர்களுக்கானது

பொதுசனமே
சனநாயகம் உனக்கானது

கூட்டணி - எப்போது
யாருடன் என்பதும் சனநாயகம்

72 ஆண்டுகளில்
யார் ஆண்டாலும் ஊழல்

பதினைந்து இலட்சம்
பகற் கனவானதால்

ஆறாயிரத்திற்கு
ஆசைப் படுவாயோ

இலவு காத்த கிளிகள்
பரிசுப் பெட்டியாக
டார்ச் லைட்டாக
மாற்றம் மாம்பழமாக

நரகலில் நல்லதும்
கொள்ளியில் சிறந்ததும்

சனநாயகம் என்பதால்
தேடு ...  தேர்ந்தெடு.................

செவ்வாய், ஜூலை 17

இந்தியனா


மனிதனாய் இருக்காதே
இந்தியனாயிரு

மனிதன்தான் என்றால் - நீ
தீவிரவாதி

மக்களை நேசிப்பவனா - நீ
மாவோயிஸ்டு

அரசுக்கு எதிராக கேள்வியா - நீ
நக்ஸலைட்

உனது மதம்
உனக்கான தேசத்தை உணர்த்தும்

ஜோதியில் ஐக்கியமாயிரு
தேச பக்தனாவாய்

சாதியில் இணைந்திரு
சனாதனம் காத்தவனாவாய்

எந்த சாமிய வணங்கினாலும்
இந்துவென அறியப்படுவாய்

ஆயிரம் வழியென்றாலும்
அரசியலமைப்பு தீர்மாணிக்கும்

தமிழை நேசித்தால்
தரங் கெட்டவனாவாய்

எதிலும் சேராதவனா
எங்கள் விரோதி

மனிதா?!  மனிதனாய் நீயிருந்தால்
இந்தியனில்லை

ஞாயிறு, ஜூலை 15

போ...... போயிட்டேயிரு

ஆயிரம் நடக்கும்
அவலம் உனக்கா
அதனாலென்ன
அடுத்த வேலையை பார்

ஏமாந்தாயா?
ஏமாற்றப் பட்டாயா?
எதுவாயினும்
என்ன செய்து விடுவாய்

நேர்மை, உரிமை
நேற்று இன்று நாளை
என்றும் இல்லை -ஆக
நடப்பதை ஏற்றுக் கொள்

அதிகாரம் அவர்களிடம்
பொதிக் கழுதைகள்
சுமக்க மட்டுமே
சொடக்கு போட்டால் ........ சினிமா

பாவ பரிகாரமாய்
பாராள்பவரின் திருபலிகள்
பதிய வைப்பதற்கே
மீண்டும் உயிர்தெழாதிருக்கவும்

காடுகள் மலைகள்
மடுவூம் அணைகளும்
காக்கும் மக்களுக்கா
காசாக்கும் மன்னர்களுக்கா

வரிச் செலவுகள்
எட்டு வழியாயிருக்கலாம்
எந்தவழி   சரியென்பதும்
எமது வசதி

அதிகாரம் எதுவென
அறிந்த மக்களுக்கு
அருஞ்சொற் அகராதி
அச்சமென்றே சொல்லும்

அடக்குமுறை  - அரச
அச்சத்தின் வெளிப்பாடு
வெடிக்கும் போராட்டங்கள்
வழிகாட்டும் விடிவெள்ளிகள்


செவ்வாய், மே 1

துடைப்பக் கட்டைகள்


வாரான் வாரான் பூச்சாண்டி
  வாரணாசி கோட்டை தாண்டி
தெருவ கூட்டிக் காட்டுறான்டி 
  திமிருதானே தினமும் செய்வானா 
எருமை சாணம் பொறுக்குவானா 
  எங்கள் சேரிக்கும் வருவானா 
உரிமை ஓட்டை போட்டதால 
  ஒருநாள் கூத்தை காட்டுறானா

எட்டுத் தெருவை பெருக்கும்
  எங்க குருவம்மா கொண்டையா
விட்டு விட்டு போனால்
   வீசும் வாசனை என்னய்யா
துட்டு வேணுமா தாறேன்
   துடைப்பம் பிடிச்சு பாரேன்
முட்டுச் சந்து தெருவில்
   மூச்சடக்கி வாழ்வோம் வாயேன்

விளையாட்டு




ஒரு குடம் நீரூற்றி
ஒரு பூ பூக்க
ஒரு கூட்டம் சேர்ந்தது - அது
ஒரு காலமானது

ஆலமர ஊஞ்சலாடி
ஆங்கே தும்பி பிடிக்க
காயா பழமா என்று
ஓயாது விளையாடிய நீ

ஓடிப் பிடித்து
ஒளிந்து விளையாடியது
ஒரு காலமென
ஓய்ந்து போகாதே

தேடிப் பிடித்து
தேவையென அறிந்து
மனிதர்களோடு உறவாடி
மகிழ்ந்து விளையாடு

கூட்டாஞ் சோறு
மணல் வீடு
உப்பு மூட்டை
உனக்கானதே

கொலை கொலையா முந்திரிக்கா
திருடன் போலீஸ்
வகை வகையான விளையாட்டுகள்
வாழுமிட மெங்கே

மழைக் காலத்தில்
மடித்த காகிதம்
கப்பலேறி விட்டதோ
கனவாகி விட்டதோ
  
நூங்கு வண்டி
கில்லி தாண்டு
கோலி விளையாட்டு
காலியாகி போனதோ

மாஞ்சா நூலில்
மடுவங் கரையில்
மாலையில் விட்ட பட்டம்
மறைந்து போனதே

ஆறு குளமென்றும்
கிணற்று வெளியிலும்
குதித்து நீச்சலடித்தது
வரண்டதோ - காவேரியா

பலிஞ் சடுகுடு
குதிரை தாண்டுதல்
பம்பரம் சுற்றியது
நின்று போனதே

ஆடுபுலி யாட்டம்
தாயக் கட்டை
சொக்கட்டான்
பரமபத மடைந்ததோ

கைப்பந்து கால்பந்து
கூடை பந்து
கைப்பற்றியது
மட்டைப் பந்து

மல்லர்கள்
சிலம்பச் செல்வர்கள்
வில் வித்தையாளர்கள்
இராமனைத் தேடிச் சென்றனரோ
  
இளவட்ட கல்தூக்கி
மஞ்சு விரட்டி
வழுக்குமர மேறி
உரியவளை கைப்பிடிக்க

தட்டாங்கல், தாயம்
பல்லாங் குழி என
பாவை விளையாடியவை
நொண்டியானதோ

கிச்சு கிச்சு தாம்பளம்
குரவை யாட்டம்
கரகர வண்டியேறி
காணாமல் போனதோ

அக புற விளையாட்டுகள்
பருவ பாலினத்திற்கேற்ப
அந்தோ அவையாவும்
அன்ட்ராய்டு விளையாட்டாய்

செல்பேசி விளையாட்டில்
ஜெயிக்க முடியாதாம்
சிலிர்த்து கொண்டனர்
சிறுவனின் பெற்றோர்

டெம்பிள் ரன்
புளு வேல்
காம்பட் பைட்
கணிப்பொறியில் சிக்கியது

ஓட்டி உறவாடுவது
எட்டிப் போனது
சுட்டி டிவியும்
வெட்டிக் கதை பேசுது - ஆக

எல்லோரும் கூடி
எக்காளமிட்டு விளையாடும்
எங்கள் பண்பாடு
என்று மீளும்



வியாழன், மார்ச் 1

நீதி மய்யம்


அரிதார மய்யம்
அரசியல் மய்யமாகுமோ
பரிதாபக் கூட்டம்
பகல்கனவுக் காணுது

கருப்பும் சிவப்பும்
கலந்துச் செய்த
கலவைத் தானென
கட்டியம் கூறுகின்றான்

காவி அபாயமென்றால்
ஊழல் ஒழிப்பென்னென்கிறான்
எங்ஙனம் என்றால்
ஏதோதோக் கூறுகின்றான்

சம்பளம் பாக்கிக்காரன்
சினிமாவில் சம்பாதித்தானாம்
அரசியலில் சம்பாதிக்க
அவசியமில்லையாம்

ஊதிப் பெருக்கி
உத்தம வில்லனை
உங்கள் மனங்களில்
உரமிட்டாகி விட்டாச்சு

திங்கள் கழித்து
தீர்ப்பும் எழுதுவீர்கள்
தப்பித் தவறி
சிம்மாசனத்தில் அமர்ந்தாலும்

ஏ...... சமூகமே
ஏமாந்தது நீயாகதானிருப்பாய்
எதுவும் மாறாது
எடுப்பான முகம்தவிர

சின்னாள் கழிந்து
சித்ரகுப்தக் கணக்கில்
சிகரத்தில் என்பாய்
சீட்டுக் கட்டு விழும்போது

விஞ்ஞான ஊழல்லென்று
வியாக்கியானம் சொல்வாய் - ஆக
வேறுமுகம் தேடாதே
வேறுவழித் தேடு......

வெள்ளி, ஜனவரி 26

செக்சி துர்கா



முருகனை அழைக்க
அழகு நாமங்கள்
அவரவர் விருப்பமாய்
118 இருப்பதாயும்

சுடுகாட்டானை
சுட்டும் பெயர்கள்
சுமார் ஆயிரம்- ஆயின்
சொரூபம் ஒன்று

அகிலாண்டேஸ்வரியை
அன்பாய் அழைக்க
அவர்களிட்டப் பெயர்
ஆயிரமல்ல 150

குலம்காக்கும் எம்மவர்கள்
அய்யனாரென்றாலும்
எந்த அய்யனென்று
எடுப்பாய்ச் சொல்வர்

பேச்சி, இசக்கி
பச்சையம்மாள், முனியம்மாய்
இரட்சித்தவர்கள் என்பதால்
இரகரகமாய்ப் பெயரில்லை

விடுதலை, சுதந்திரம்
வேறுபாடின்றி
வைத்தப் பெயர்கள்
யாருக்குச் சிக்கல்

சுட்டும் பெயரொன்றை
சூட்டியக் காரணத்தால்
வெட்டும் கூட்டமொன்று
காட்டுக் கத்தல் கத்துகிறது
  
இல்லாததை இருப்பதாகவும்
சொல்லாததைச் சொன்னதாகவும்
நடக்காததை நடந்ததாகவும்
நாடகம் நடத்துகின்றனர்

பாத்திமா, மேரியை
பார்த்தாயா அப்படி
பாராள்பவளை – படமிட்டு
பார்க்கலாமா என்கிறான்

சௌந்தர்ய லகரியில் – சங்கரன்
சொக்கிப் பாடுகிறான் – சொக்கன்
சும்மாயிருந்தான் – பக்தாள்ஸ்
சனல் சசிதரனை வாட்டுவதேன்?!!...

செவ்வாய், ஜனவரி 2

சும்மா அதிருதில்ல


அந்த அறிவிப்பால்
சும்மாவாது
அதிர்ந்ததா?...

வாய்ச் சவடாலில்
வந்துட்டேனுச் சொன்னதால்
வாசல் திறந்திடுமா

ஏமாற்றும் கூட்டத்தின்
எண்ணிக்கைக் கூடியதாக
இனம்காண் தமிழகமே

ஜகத்குரு, நித்தி
ஜக்கியின் ஆன்மீகத்தை
ஜனநாயகமாய் கண்டோம்

மரபுகளை மாற்றி
தியேட்டரில் கேசட் விற்றவன்
கேப்பையில் நெய் வடியுமென்கிறான்

எதுச் சரி
எதுத் தவறென
ஏதும் அறிவிக்காமல்

இறங்கி வந்த
இறை தூதனா?!!
எதை மாற்றுவான்

கோடிகளில் புரண்டு
கேமராமுன் வசனம் பேசி
நாடாள வருவேனேன்றால்

சன்னி லியோனை
சட்டமன்ற உறுப்பினராக்க
சான்றொப்பம் அளிப்பாயோ?

ஓடுறக் குதிரையென
நோட்டைப் புடுங்கினவன்
ஓட்டைக் கேட்கிறான்

ஏலமெடுத்த டிக்கட்டை
எவனும் வாங்காததால்
எறிந்தாயேக் குப்பைத் தொட்டியில்

மறக்காத வடுவது........
கறக்கலாமென நினைத்தால்
காலமாவது நீதான்

புதன், ஆகஸ்ட் 2

காவி காதல்




அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அம்மண மாக்கப்பட்டார்கள்
அவர்கள் தலித்தென்பதால்

கண்களால் கனிவது
காதல் உணர்வு
அம் மனஉறவை
அச்சப்படுத்துதல் முறையோ


அயோத்தி இராமனின் 
அக்கினி பரிட்சையில்
அவளுக்கு கிடைத்தது
கற்புக்கரசி பட்டம்

யோகி ஆதியநாத்
காவி ஆட்சியில்
காதலை கருக்கி
காப்பது சாதியை

மதங் கொண்டவர்கள்
மனித உயிர் வதைக்க - நீ
வேடிக்கை பார்க்கவா
வினை ஆற்றவா

மதங்களுக்கு மரணமும்
சாதிகளுக்கு சமாதியும்
காதலால்தான் சாத்தியம் - ஆக
காதல் செய்வீர்

வெள்ளி, டிசம்பர் 2

“தேச விரோதிகள்”




கால விரயத்தில்
கருப்பு பணத்தை
காயடிப்பதாக கூறியவன்
கஷ்டப்படும் எங்களுகிட்ட பெயர்

பதினைந்து இலட்சம்
ஐம்பது நாட்கள்
அறுபத்தாறு பிணங்கள்
அவர்கள் இட்ட பெயர்

“கேமன்” தீவுகள்
“கேத்தன் தேசாய்கள்”
பக்த கோடிகள்
பாமரன் எங்கள் பெயர்

“ரிலையன்ஸ் பிரஷ்”
“பிக் பஜார்”, “ஃபண்டலூன்”
பாரத் மகான்கள்
சில்லரை வணிகனின் பெயர்

“கார்பரேட்” மருத்துவமனைகள்
சுயநிதி கல்லூரிகள்
“ரியல்” எஸ்டேட் நல்லவர்கள்
சவாலில் வைத்த பெயர்

இம் என்றால் சிறைவாசம்
ஆம் என்றால் பக்தவிலாசம்
“ஹே ராம்” என்றேன்
ஆயினும் அவர்களிட்ட பெயர்

பாடுபட்டு உழைத்தது கருப்பாம்
“பனாமா” என்றால் வெளுப்பாம்
“P” நோட்டு பக்தன்
எனக்கிட்ட பெயர்

ஆயிரம் ஐநூறு கருப்பா
நூறும் ஐம்பதும் வெள்ளையா
நூறு கேள்வி எழுப்ப
நோகாமல் வழங்கப்பட்ட பெயர்

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...